இன்று முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கொண்டாட்டங்கள்
திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்துர் முதலான அறுபடை வீடுகளிலும் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் இன்று வைகாசி விசாக திருவிழா மிகவும் கோலாகலமாக மிகுந்த பக்தியுடன் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளுள் ஒன்று. இது மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.இங்குள்ள சரவண பொய்கை புனித தீர்த்தமாக போற்றப்படுகின்றது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.
அறுபடைக் கோவில்களில் இரண்டாம் படை வீடாகக் கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்.மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோயில் இதுவாகும். இது திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து 54 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயில் சென்னையில் இருந்து ஏறத்தாள 600 கி.மீ தொலைவில் உள்ளது. 130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள்வரை பழமை கொண்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
புறநானூற்றில் இது வெண்டலைப்புனரி அலைக்குடம் செந்தில் நெடுவேள் துறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சூரனை சம்ஹரித்த பின்பு முருகன் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டார் என்று கந்த புராணம் தெரிவிக்கிறது. இந்த சிவலிங்கம் கோவிலின் மூலஸ்தானத்திற்குப் பின்புறமுள்ள அறையில் ஐந்து லிங்கங்களாக இருக்கிறது. இந்தக் கோவிலின் அமைப்பு ஓங்கார வடிவமுடையது. பிள்ளையார் சன்னதி, வள்ளிதேவசேனா சன்னதி, திருமால் சன்னதி, கம்பத்தடி இவைகளை எல்லாம் சேர்த்து ஒரு கோடு வரைந்தால் ஓம் என்கிற எழுத்து வரும் என்கிற பெரும் சிறப்புடையது இக்கோவில்.
குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக் கோயில் பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது .
சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.
பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது.ஆனால் இவை இரண்டுமே மூன்றாவது அறுபடை வீடாக கருதப்படுகின்றது.
பழனி என்பது மலையின் பெயராகும். பழனி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி ஸ்தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழனி என்று அழைக்கப்படுகிறது.பழனி மலையிலே அமைந்துள்ளது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போக சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா நோய்களையும் குணப்படுத்த வல்லவை என்று கருதப்படுகின்றன. இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை.
இத்தலத்தில் உறையும் கதிர்வேலன், தனது தந்தை சிவபெருமானுக்கு குருவாக இருந்து பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இங்கு வீற்றிருக்கும் முருகப் பெருமானை சுவாமிநாதன், தகப்பன் சுவாமி என்றெல்லாம் அழைக்கிறோம். இதன் காரணமாகவே இந்தத் திருத்தலமும் சுவாமிமலை என்று அழைக்கப்படலாயிற்று.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
இத்தலத்தில் முருகப்பெருமான் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருப்பதுடன் இங்கு வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியையும் தந்தருள்கின்றார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது.
இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.
அருள்மிகு திருமலைமுத்துக்குமாரசுவாமி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பண்பொழி எனும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள திருமலை 500 அடி உயரமுடையது.
544 படிகள் ஏறி கோயிலை அடைய வேண்டும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து செல்ல வேண்டும்.
விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நள மூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், வில்வாரணி ஊரில் அமைந்துள்ள சுமார் 500-1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம், இங்கு மூலவரின் பெயர் சுப்பிரமணியர், சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஆடி கிருத்திகை மற்றும் இதர கிருத்திகை நாட்கள் இங்கு விழாக்கோலம் தான். பங்குனி உத்திரம் பத்து நாள் நடக்கிறது. ஐந்தாம் நாளில் முருகன் மலையில் இருந்து கீழிறங்கும் நிகழ்ச்சி நடக்கும். ஏழாம் நாளில் தேரோட்டம் நடக்கிறது. இதற்காக 16 லட்சம் ரூபாய் செலவில் தேர் உருவாக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயில், செங்கம், வில்வாரணி – திருவண்ணாமலை மாவட்டம்.
ஊத்துமலை முருகன் கோயில் சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது. இத்தலம் சுமார் 1000 – 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகின்றது.
அகத்தியர் இங்கு தான் அகத்தியம் என்னும் தமிழ் இலக்கண நூலை எழுதினார். இங்கு மூலவர் பால சுப்பிரமணியர் நின்ற திருக்கோலத்தில், மயில் வாகனத்துடன், கையில் வேலுடன் காட்சி தருகிறார். இடப்பக்கம் விநாயகரும், வலப்பக்கம் நந்தியுடன் கூடிய சிவலிங்கமும் உள்ளன.
அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், கந்தகோட்டம்,சென்னை. சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம். பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது.
தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் திருவருட்பாவில் பாடிய தலம் இது.
The post முருகன் ஆலயங்களில் இன்று வைகாசி விசாக திருவிழா! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.