நிம்மதியாக வாழ வைக்கும் அமாவாசை பித்ரு தர்ப்பணம்
இன்று அமாவாசை பித்ரு தர்ப்பணம் செய்ய உகந்த நாள்
நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும். பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள்.
ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள்.
தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள்.
திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள்.
தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.
பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.
நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. ஆனால் அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே அவர்கள் சூட்சும தேகத்துடன் நம்மை தேடி பூலோகத்திற்கு வருகின்ற நாட்களில் நாம் பித்ரு தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றிட, அவர்களும் அதை இங்கு நேரடியாகப் பெற்று ஆசியளிக்கின்றனர்.
இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பித்ரு் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
சூரியனும் சந்திரனும:
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் நமக்குத் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர்.
சூரியனைப் “பித்ரு காரகன்” என்றும், சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா மாதாவாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்.
இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக் கூடிய நாளே அமாவாசையாக கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.
அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்று கொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர்.
இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. ஆகவே தவறாது சிரார்த்தம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிப்பட்டு சூரியனை வணங்க வேண்டும். நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தால் புண்ணியமும் செல்வமும் கிடைக்கும்.
இந்தப் புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம்.
இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
The post நிம்மதியாக வாழ வைக்கும் அமாவாசை பித்ரு தர்ப்பணம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.