கோடி புண்ணியம் தரும் ஆடி மாத திருவிழாக்கள்
நாளை முதல் ஆடி மாதம் தொடக்கம்! நாளை முதல் ஒவ்வாரு நாளும் ஒவ்வாரு அம்மனின் அருளை விளக்கும் ஆடி மாத அம்மன் கோவில்களை பற்றி தினமும் நமது swasthiktv.com யில் தொடராக காண்போம்.
ஒரு வருடத்தின் மாதங்கள் இரு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணப் புண்ணிய காலம் எனவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் எனவும் வழங்கப்படுகிறது. ஆடி மாதம் கற்கடக மாதம் என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் ஸ்ரீ சூரிய பகவானின் தேரானது வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி பயணிக்கத் தொடங்குகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
ஆடி மாதத்தில், ஸ்ரீ சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். கடக ராசி என்பது, ஸ்ரீ சந்திர பகவானின் ஆட்சி வீடாகும். சிவ அம்சமான சூரியன், சக்தி அம்சமான சந்திரனின் ஆட்சி கிரகத்தில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. சிவனை விட சக்திக்கே வல்லமை அதிகமாக பரிமளிக்கிறது. ஆஷாட மாதம் என்று கூறப்படும் இந்த ஆடி மாதம் சக்தி மாதமாக வழிபடப்பட வேண்டும் என்று ஈஸ்வரன், ஈஸ்வரிக்கு அனுக்கிரகம் செய்தார். அதன் காரணமாகத் தான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்குமாம்.
இவைகளை உபயோகப்படுத்துவதில், ஒரு முக்கியமான விஞ்ஞான ரீதியான காரணமும் உண்டு. இந்த நாட்களில் உஷ்ணம் கூடி இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, கூழானது, உஷ்ணத்தைக் குறைத்து, உடலை சீரான வெப்ப நிலையில் வைக்கும். எலுமிச்சம் பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலையைப்பற்றி கூறவே வேண்டாம். தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் சக்தி அந்த மருத்துவ குணம் கொண்ட இலைகளுக்கு உண்டு.
பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை தரித்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அலகு குத்தலின் வலியோ, பூ மிதியின் பொழுது நெருப்பின் உஷ்ணமோ தெரியாமல் ஆதி பராசக்தி காத்தருள்கிறாள்.
-
ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கட ஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை ஆக இத்தனை வைபவங்கள் வருகின்றன.
-
ஆடி மாதம் 7-ந் தேதி (23.7.2017) ஞாயிற்றுக் கிழமை ஆடி அமாவாசை. அன்றைய தினம் கடலில் நீராடுவது சிறப்பு. முன்னோர் வழிபாடும் முன்னேற்றம் தரும்.
-
ஆடி மாதம் 11-ந் தேதி (27.7.2017) வியாழக் கிழமை ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் வருகிறது. அன்றைய தினம் அம்பிகை வழிபாட்டையும், அரவு வழிபாட்டையும் செய்தால் அதிர்ஷ்டம் தரும்.
-
ஆடி மாதம் 12-ந் தேதி (28.7.2017) வெள்ளிக் கிழமை கருட பஞ்சமி. அன்றைய தினம் கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
-
ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2017) வியாழக் கிழமை ஆடிப்பெருக்கு. அன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
-
ஆடி மாதம் 19-ந் தேதி (4.8.2017) வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரதம். அன்று லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
-
ஆடி மாதம் 20-ந் தேதி (5.8.2017) சனிக் கிழமை சனிப் பிரதோஷம். அன்றைய தினம் நந்தியை வழிபடுவது சிறப்பு தரும்.
-
ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2017) திங்கட்கிழமை ஆடிப் பவுர்ணமி. அந்த நாளில் கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும்.
-
ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2017) திங்கட்கிழமை கோகுலாஷ்டமி. கண்ணன் வழிபாடு கவலையைப் போக்கும்.
-
ஆடி மாதம் 30-ந் தேதி (15.8.2017) செவ்வாய்க்கிழமை ஆடி கிருத்திகை. வள்ளி மணாளனை விரதமிருந்து வழிபட்டால் வளங்கள் குவியும்.
The post கோடி புண்ணியம் தரும் ஆடி மாத திருவிழாக்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.