Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது!

$
0
0

 ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது!

துளசிதாசர் காசியில், கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசித்தார். விஸ்வநாதர் கருணை காட்டுவார் என்று காத்திருந்தார். ஓயாமல் ராமநாம ஜெபம் செய்தார். இரவில் அசுவமேத கட்டத்தின் படிக் கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகா லட்சேபம் சொல்வார்.

 ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த நீரை குடித்ததும் தாகம் அடங்கி ஒருவாறு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைத்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப் பட்டது. உரக்க ராமா, ராமா என்று சத்தமிட்டு கூவினார்.
அப்போது அந்த ஆவி கூறியது, பெரியவரே, பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன். சொல்லுங்கள் என கேட்டது. ‘துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனம் தான் அது. அதற்கு இந்த ஆவியா உதவப் போகிறது என்றெல்லாம் யோசிக்காமல் கேட்டு விட்டார்.

ராமாயணம் கேட்க வரும் ஆஞ்சநேயர்

 எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்று. அதற்கு ஆவி பதில் கூறியது. ‘இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே’ என்றது. எப்படி? என கேட்டார் துளசிதாசர். உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. எனக்கு தெரியாதே என்றார் தாசர். ஆம். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே உட்கார்ந்திருக்கும் ஜனங்களுக்கு அப்பால் ஒருவர் உட்கார்ந்திருப்பார். நீங்கள் வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து ஜனங்கள் திரும்பும்போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் போவார். அவர் எப்படி இருப்பார்? என்று துளசிதாசர் கேட்டார். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற் காகவே அப்படி வருவார். அவர் கால் களை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

ராமன் எப்போ வருவாரோ?

 அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே தாசர் கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருப்பவரை பார்த்து விட்டார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி, ராமன் எப்போது வருவாரோ? என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறார். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் வினவுகிறாள். புலம்புகிறாள். ஏமாற்றி விடாதே ராமா!  சபரி புலம்பல் ராமா! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா?
உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? என்ன அபச்சாரம். நான் உன்னை தேடி வர முடியாதே! யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் தாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம்.

காலை பிடித்துக் கொண்ட தாசர்

 பின் வெகு நேரம் ஆயிற்று. துளசி தாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ! அஞ்சன புத்ரா! என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது. தாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் ‘கண் விழித்து நான் எங்கிருக்கிறேன்’ என்று வினவினார்.

சித்ர கூடத்தில் ராம ஜெபம்

 ‘இதுதான் சித்ர கூடம்’ இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். அங்கே பாரும் மந்தாகினி. இங்கே உட்கார்ந்து ராமஜெபம் செய்யும். ராம தரிசனம் கிட்டும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீர் ராம நாமம் சொன்னால் உமது கூடவே நான் இருப்பேன். எனக்கு என்ன வேறு வேலை என்று கூறினார் அனுமன். பின் மறைந்து விட்டார். தாசரும் ராமஜபம் செய்தார்.

எப்படி இருப்பார் ராமர்? ராமன் வருவாரா? எப்படி வருவார்?

லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்?

தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா?

மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா?

ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா?

என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன்மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள். தாசர் எத்தனையோ ராஜாக்களை பார்த்திருக்கிறார். தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் தாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே போய் விட்டனர்.

ராமனுக்கு ஈடாவாரா? ஆமாம். பெரிய வீரர்கள் இவர்கள்! என் ராம, லட்சுமணனுக்கு ஈடாவார் களா?

 தலையில் ரத்ன கிரீடமும், மார்பில் தங்க கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே என்ன அழகாக இருப்பார் கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார். சிறிது நேரம் கழித்து அனுமன் வந்தார். தாசரைப் பார்த்து ‘ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா? என்று கேட்டார். இல்லையே என்றார் தாசர். என்ன இது உமது பக்கமாகத்தானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார்.

  ஐய்யோ! ராம, லட்சுமணர்களா? ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ‘ராமன் உமது இஷ்டப்படி தான் வர வேண்டுமா? அவர் இஷ்டப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே தாசர், சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். வாயு குமாரா? இன்னும் ஒருமுறை தயவு செய்யும். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன். எல்லாம் சரி. நீர் போய் மந்தா கினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயண பாராயணம் செய்யும் ராமன் வருவாரா? பார்க்கலாம் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடினார். நீராடினார். ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார்.

 நதியில் நீராடுதல்

 இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது. தருகிறேன் என்றார் அவர்.

 சந்தனம் கேட்ட ராம, லட்சுமணன் சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள்.  கங்கை முதலிய நதி தீர்த்தக் கரையில் பண்டாக்கள் (சாதுக்கள்) உட்கார்ந்து கொண்டு நதியில் நீராடி வருபவர் களுக்கு நெற்றியில் திலகம் இட்டு தட்சணை வாங்கிக் கொள்ளும் பழக்கம் இன்றும் உள்ளது. அதற்கென்ன! நாமம் போட்டு விடுகிறேனே என்றார் தாசர். இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைக்கிறார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். இவர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் மெய் மறந்து விட்டார்.

 அந்தப் பையன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் தீட்டிக் கொண்டு அவருடைய நெற்றியிலும் தீட்டினான். தன்னுடன் வந்த வனுக்கும் தீட்டினான். அவர்கள் உட்கார்ந் திருந்திருந்த படித் துறைக்கு அருகே ஒரு மாமரம். அதன் மீது ஒரு கிளி. அது கூவியது.

‘சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர”

 இதைக் கேட்டு துளசிதாசர் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். சாது அவர்களே! என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா? என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர். மறுகணம் ராம, லட்சுமணர்களை காணோம்.

The post ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது! appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>