Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு

$
0
0

தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு

 ஆடி மாதம் 18-ந் தேதியில் வரும் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. தட்சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென்திசைப் பயணத்தைக் குறிப்பிடுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவுப்பணிகளைத் தொடங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என்று சொல்வதுண்டு.

aadi1

 நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி 18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.

aadi2

 காவிரிக்கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போடவேண்டும். நிறைகுடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும்.

 கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவிரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.

aadi3

 அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதிவிலக்காகும்.

 காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். இந்நாளில், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூருக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள்.

 சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.

 ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டார். வசிஷ்டர், ‘அறுபத்தாறு கோடி தீர்த்தங்களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்த நதியில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும்’ என்று கூறினார். அதன்படி ராமச்சந்திர மூர்த்தி, காவிரியில் நீராடி தன்னுடைய பாவங்களைப் போக்கிக் கொண்டார். அவர் காவிரியில் நீராடிய நாள் ஆடிப்பெருக்கு என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

 தென்னிந்தியாவில் திரிவேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவிலின் நடை, ஆடிப்பதினெட்டு அன்று அதிகாலையில் திறக்கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடிவிட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.

The post தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் ஆடி பெருக்கு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles



Latest Images