அனைத்துக்கும் உரிமையாளன் நீ. உன்னுடைய பொருளை நீயே கொள்ளையிட…..
சத்திய லோகத்தில் ஒரு முறை ஜல பிரளயம் ஏற்பட்டது. அப்போது சோமுகாசுரன் என்ற அசுரன், பிரம்மாவின் சிருஷ்டி ரகசிய குறிப்புகளை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டான். அந்த குறிப்புகளை மீட்பதற்காக உரிய பரிகாரம் செய்ய எண்ணிய பிரம்மதேவர், அதற்காக விஷ்ணுவை நோக்கி தவம் இருக்க நினைத்தார். தன் கையில் இருந்த ஒரு பிரம்பை, பிரம்மசாரியாக மாற்றி தான் தவம் செய்ய உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து வரச் சொல்ல அனுப்பிவைத்தார்.
தாமிரபரணி நதிக்கரையை வந்தடைந்த பிரம்மசாரியோ, நதிக்கரையில் இருந்த ஜயந்தீபுரம் என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ஒரு பெண்ணிடம் காதல் கொண்டு, வந்த வேலையை மறந்துபோனான். இதையடுத்து பிரம்மதேவர், தன் கையில் இருந்த மற்றொரு தண்டத்தை பெண்ணாக மாற்றி, பூவுலகம் அனுப்பி தவம் செய்வதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து வரச் சொன்னார். தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைகள் சூழ்ந்த, தற்போது திருக்கோவில் அமைந்துள்ள இடத்தைத் தேர்ந்தெடுத்துக் குறிப்பிட்டாள் அவள்.
அங்கு கடுந்தவம் செய்தார் பிரம்மதேவர். அவரது தவத்தைக் கண்டு மகிழ்ந்த வைகுண்டநாதர், திருட்டு போன சிருஷ்டி ரகசிய குறிப்புகளை மீட்டு வந்து பிரம்மதேவரிடம் கொடுத்தார். வைகுண்டத்தில் இருந்து எழுந்த கோலத்தில் இங்கு காட்சி தந்தமையால், அதே திருக்கோலத்தில் இங்கு நிரந்தர மாக நின்று காட்சி தருமாறு பிரம்மதேவர், விஷ்ணுவை வேண்டிக்கொண்டார். அவரது விருப்பப்படி இங்கு வைகுண்டநாதராக இறைவன் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீயாகிய லட்சுமியுடன் பரிபூரண கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், இத்தலத்திற்கு ஸ்ரீவைகுண்டம் எனப் பெயர் ஏற்பட்டது. தாயார் வைகுந்தவல்லி தனி சன்னிதியில் அமர்ந்திருக்கிறார்.
நாங்கள் காலதூஷகனின் ஆட்கள்
கால தூஷகன் ஒரு திருடன். அவன் ஒவ்வொரு நாள் திருடச் செல்லும்போதும், வைகுண்டநாதரை வணங்கிச் செல்வான். திருடிய பொருட்களில் பாதியை பெருமாளுக்கு சமர்ப்பித்து விடுவான். ஒருநாள் தன் கூட்டத்தினருடன் மன்னனின் அரண்மனையில் திருடியபோது, அவனது கூட்டத்தினர் சிலர் அரண்மனை காவலர்களிடம் மாட்டிக்கொண்டனர். விசாரணையின் போது அவனது ஆட்கள், ‘நாங்கள் காலதூஷகனின் ஆட்கள்’ என்று உண்மையைச் சொன்னார்கள். காலதூஷகன் வைகுண்ட பெருமாளை வேண்டினான்.
கிருஷ்ணாவதாரம் முழுவதும் தர்மத்தை நிலை நிறுத்த கள்ளத்தனம் கொண்ட திருமால், திருடன் வடிவில் மன்னன் முன் சென்றார். காலதூஷகன் வடிவை மன்னன் உற்று நோக்க, அவனுக்கு மட்டும் தன் சுய உருவைக் காட்டி அருளினார்.
மன்னனுக்கு பலத்த சந்தேகம். ‘அனைத்துக்கும் உரிமையாளன் நீ. உன்னுடைய பொருளை நீயே கொள்ளையிட வேண்டிய காரணம் என்ன?’ எனக் கேட்டார்.
அதற்கு பெருமாள், ‘அசையும், அசையாச் சொத்துக்களுக்கு எதிரி எனப்படும் சத்துரு நான்கு பேர். தர்மம், அக்னி, சோரன் எனப்படும் கள்ளன், ராஜா ஆகியோரே அவர்கள். இந்த நால்வரில் ராஜாவும், சோரனும் தனிப்பட்ட முறையில் லாபம் அடையலாம். அக்னிக்கு முன் எதுவும் மிஞ்சுவது இல்லை.
தர்மம் செய்பவனுக்கும் பெறுபவனுக்கும் பலன் தனித்தனியே உண்டு. கால தூஷகன் கள்ளனாக இருந்தாலும், செய்யும் தொழிலில் ஒரு தர்மத்தைக் கடைப்பிடித்தான். தர்ம சிந்தனை மிக்கவனாகவே அவன் வாழ்ந்து வந்தான். தர்மத்தை உனக்கு உணர்த்தும் நோக்கத்திலேயே நானே கள்ளனாக உருக்கொண்டு வந்தேன். மிகு பொருட்களை உனக்கென சேர்த்து வைக்காமல், நல் வழியில் தர்மம் செய்’ என்றார்.
மன்னனும் மகிழ்ந்து போனான். ‘கள்ளா! எனக்கு ஒரு ஆசை. தர்மமே சிறந்தது என்பதற்காக நீ வந்த இந்தக் கோலத்திலேயே இங்கு அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினான். அது முதல் ஸ்ரீவைகுண்டத்தில் சோரநாதன் என்கிற கள்ளபிரான் என்னும் திருநாமத்துடன் பக்தர்களுக்கு நின்ற நிலையில் திருமால் அருள்புரிந்து வருகிறார்.
ஆதிசேஷன் இருக்கும் ஆலயங்களில் எல்லாம் திருமால் சயனித்த கோலத்திலேயே காட்சியளிப்பார். ஆனால் இங்கு மட்டும்தான் நின்ற கோலத்தில் இருக்கும் விஷ்ணுவுக்கு, ஆதிசேஷன் குடையாக இருக்கும் அமைப்பு வாய்ந்திருக்கிறது.
பிரம்மா தன் கமண்டலத்தில் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து திருமஞ்சனம் செய்து, நதிக்கரையிலேயே கலசத்தை ஸ்தாபிதம் செய்ததால், இன்றும் அது ‘கலச தீர்த்தம்’ என்றே வழங்கப்படுகிறது. பிரம்மதேவர் இங்கு சித்திரையில் உற்சவத்தைத் தொடங்கி வைத்ததால், சித்திரை பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் என அழைக்கப்படும் இந்தத் தலம், நவ திருப்பதி வரிசையில் முதலாவதாக வைத்து தரிசிக்க வேண்டியது என்று கருதப்படுகிறது. இது சூரிய தோஷ பரிகாரத்தலமாகும்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அனைத்துக்கும் உரிமையாளன் நீ. உன்னுடைய பொருளை நீயே கொள்ளையிட….. appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.