குருபெயர்ச்சி பாதிப்புகள் அகலும் சப்த குருதலம்
நவகிரகங்களில் மிகப் பெரிய கோளாகக் கருதப்படுவது குரு. தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிருகஸ்பதியையே நாம் குரு பகவானாக வழிபடுகிறோம். ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு ஓராண்டுக்கு ஒருமுறை குரு பகவான் இடம் பெயர்கிறார். அப்படி நடைபெறும் குரு பெயர்ச்சியின்போது தக்க பரிகாரங்களை செய்து, குருபகவானை வழிபட்டு, பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம் என்பது பொதுவான நம்பிக்கை. இதனாலேயே குரு பெயர்ச்சி சமயத்தில் குருவுக்குரிய தலங்களாகக் கருதப்படும் பிரபலமான ஆலயங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வழிபாடு செய்கின்றனர்.
ஜோதிட நூல்களால் புத்திகாரகன் என்றழைக்கப்படும் குருபகவான், நல்லறிவு, ஞானம், உயர் பதவி, நீதி உணர்வு, சொல்வன்மை, தயாள குணம், கலைகளில் தேர்ச்சி, வேதவேதாந்த அறிவு ஆகியவற்றை வழங்குவதோடு மற்ற கிரகங்களால் ஏற்படும் பீடைகளை நீக்கும் ஆற்றலும் உள்ளவராதலால் இவர் ‘கிரஹபீடாபஹாரர்’ என்றும் போற்றப்படுகிறார். ஒவ்வொரு சிவாலயத்திலும் கருவறைக்கு வடகிழக்கே அமைந்துள்ள நவகிரக சந்நதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார். இவரோடு கருவறையில் தென்புற கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தியும் குருவாக வழிபடப்படுகிறார்.
கும்பகோணத்தைச் சுற்றியுள்ள நவகிரக ஆலயங்களில் குருவிற்குரிய தலமாக ஆலங்குடி போற்றப்படுகிறது. தஞ்சை மாவட்டத்திலுள்ள தென்குடித்திட்டை, திருப்பத்தூருக்கு அருகிலுள்ள பட்டமங்கலம், திருச்சிக்கு அருகில் தம்பதி சமேதராக நவகிரகங்கள் எழுந்தருளியுள்ள பழூர், சென்னையை ஒட்டியுள்ள பாடி திருவலிதாயம் போன்ற பல ஊர்களும் குருவிற்குரியவை.
திருச்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், திருவரங்கத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ள பிட்சாண்டார் கோயில் என்ற உத்தமர் கோயிலில் திருமாலும், சிவபெருமானும் ஒரே ஆலய வளாகத்தில் எழுந்தருளியிருக்கின்றனர்.
கிழக்கு நோக்கி புஜங்க சயனராக, புருஷோத்தமர் என்ற திருநாமத்தோடு திருமாலும், அவருக்கு நேர் பின்புறம் மேற்கு நோக்கி பிட்சாண்டார் என்ற திருநாமத்தில் சிவபெருமானும் தரிசனம் தந்து அருள்பாலிக்கின்றனர். இவர்களோடு நான்முகனான பிரம்மாவும், தேவி சரஸ்வதியோடு இங்கு அருள்பாலிப்பதால் இத்தலம் மும்மூர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. ஒரு காலத்தில் இத்தலத்தில் ஏராளமான கடம்ப மரங்கள் இருந்ததால் கடம்பவனம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. புருஷர்களில் உத்தம புருஷனாக, பெருமாளாக அருள்பாலிக்கும் திருமால், இங்கு பிரம்மாவுக்குக் கடம்ப மரமாகக் காட்சி தந்ததால் இத்தலம் கடம்பனூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு மருவி திருக்கரம்பனூராயிற்று.
தீர்த்தக் குளம் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ளது. திருமாலை வழிபட்ட பிரம்மாவுக்கும், தேவி சரஸ்வதிக்கும் பெருமாள் ஆலய வளாகத்தில் தனிச் சந்நதிகள் உள்ளன. பிரம்மாவுக்கு இங்கு வியாழக்கிழமைகளில் அத்தி இலைகளினால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது. பிரம்ம குருவாக பிரம்மாவும், விஷ்ணு குருவாக வரதராஜப் பெருமாளும், சக்தி குருவாக சௌந்தர்ய நாயகியும், ஞான குருவாக சுப்பிரமண்யரும், தேவ குருவாக பிருகஸ்பதியும், அசுர குருவாக சுக்கிரனும் எழுந்தருளியிருப்பதால் இத்தலம் சப்த குருத் தலமாக போற்றி வழிபடப்படுகிறது.
குருபகவானின் அதிதேவதையாகத் திகழும் பிரம்மாவை வழிபட, குருதோஷ நிவர்த்தி ஏற்படும் என்று ஜோதிடம் கூறுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப குருபகவானின் பரிபூரண அருள் கிட்டவும், நினைத்தது நடந்தேறவும் இந்த உத்தமர்கோயில் ஆலயத்திற்கு வந்து இந்த சப்த குருக்களையும் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மனதார வழிபட்டால் நினைத்தது நடக்கும்.
தொடர்ந்து 11 வாரங்கள் இவ்வாறு வழிபட்டு வந்தால் மணப்பேறு, மகப்பேறு, செல்வ அபிவிருத்தி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு போன்றவை கிட்டுகின்றன. குரு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அகலுகின்றன.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post குருபெயர்ச்சி பாதிப்புகள் அகலும் சப்த குருதலம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.