கோபுர தரிசனம் கோடி புண்ணியம் செம்பொன்னரங்கர் திருக்கோயில் (செம்பொன் செய்கோயில்)
பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் பேரரு ளாளனெம் பிரானை,
வாரணி முலையாள் மலர்மக ளோடு மண்மக ளுமுடன் நிற்ப,
சீரணி மாட நாங்கைநன் னடுவுள் செம்பொன்செய் கோயிலி னுள்ளே,
காரணி மேகம் நின்றதொப் பானைக் கண்டுகொண் டுய்ந்தொழிந் தேனே.
-திருமங்கையாழ்வார்
நஞ்சளிக்க வந்த பேய்முலையாள்தன் பாலுண்டு அவளை விஞ்சித்தன் விளையாட்டு காட்டியவன், கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலன் பேரருளானகாகப் புவியோர்க்கு அருள்புரியும் இத்திருத்தலம் சீர்காழிக்கு சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருநாங்கூரில் உள்ளதாகும். வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில், சோழத்திருப்பதிகளில் இது 34ஆவது இடம் பெற்றது.
தலபுராணம்
தசகண்ட ராவணனை வதம் செய்து திரும்புங்கால் இங்கு தங்கிய இராம பிரான் த்ருடநேத்ரர் என்னும் முனிவரின் அறிவுரையின்பாற்பட்டு, பொன்னால் ஒரு பசுவின் உருவம் செய்து வழிபட்டு அதை ஒரு அந்தணருக்குத் தானமாக அளித்து தனது பிரம்ம ஹத்தி தோஷத்தினின்றும் விடுபட்டான். அவ்வாறு அவன் அளித்த பொன் கொண்டு எழும்பிய கோயில் என்பதால் இக்கோயில் செம்பொன் செய்கோயில் எனவும், மூலவர் செம்பொன்னரங்கர் எனவும் அழைக்கப்படுகிறார்.
திருநாங்கூர் கோயில்கள் அனைத்தும் ருத்ரன் மஹாவிஷ்ணுவை தரிசிப்பதற்காக ஏற்பட்டவை என்பர். இக்கோயிலில், நாரணன் தன் நலம்பேணும் ருத்ரனுடன் நித்யவாசம் செய்து கொண்டு பக்தர்க்ளுக்கு சேவை சாதிக்கிறான். மூலவருக்கு ஹேமரங்கர் பேரருளாளன் என்ற பெயர்களும் உண்டு. தாயாரின் திவ்ய நாமம் அல்லி மாமலர் நாச்சியார் என்று அழகுதமிழில் வழங்குகிறது.
தலச்சிறப்பு
செம்பொன் செய்கோயில் என்னும் பெயருக்கொப்ப, இது தம்மை வந்தடைந்தாரின் வறுமை போக்கி வளம் பெருக்கும் தலமாகும். காச்யபன் என்னும் காஞ்சி அந்தணனின் மகன் முகுந்தன் என்பான் தன் வறுமை நீங்க இத்தலத்தில் பெருமாள் உபதேசித்த அஷ்டாக்ஷரத்தை மூன்று நாளில் முப்பத்தி இரண்டாயிரம் தடவை ஜபம் செய்து பெருமாளின் திருவருளால் செல்வம் பெற்றான்.
ஸ்ரீ ராமபிரானின் தோஷத்தையே போக்கிய கோயில் ஆதலால், சாதாரண மானிடர்களாகிய நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் எப்பாவமும் இக்கோயிலில் வழிபட்டால் அறவே நீங்கி விடும் என்பது நம்பிக்கை. கோயில் அல்லது பிறர் சொத்தைக் கொள்ளை அடித்தல், பிறன் மனை விழைதல் போன்ற பஞ்சமா பாதகங்களையும் திருமாலவன் பெருவுளம் கொண்டு மன்னித்துத் தன் தாள் காட்டி அபயம் அளிப்பான் என்பது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
பெருமலைவாழ் ஈசனவன் பெருமடியான் தசகண்டன்
கருமனதால் விளைவினையால் கடிந்தவனை வதம்செய்த
பெருமான்திரு மாலனுரு பிரம்மனுக்கு செய்குற்றம்
ஒருமனதாய் நீக்கிடவே உளமுருகித் தவம்செய்த
திருத்தலமாம் தன்னிடத்தே அடைவார்பால் தயைகொண்டு
பெருவுளம்கொள் பேரருளான் பெற்றவனும் ஆனான்பார்.
ஓம் நமோ நாராயணா!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் செம்பொன்னரங்கர் திருக்கோயில் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.