கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருக்காவளம்பாடி
‘ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடிதிறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
காவளம் பாடி மேய கண்ணனே களை கனியே.’
-திருமங்கையாழ்வார்
வைணவர்களின் 108 திவ்யதேசங்களில் சோழத் திருப்பதிகளுள் இருபத்து ஏழாவதாக இது சீர்காழிக்குச் சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூர் திருஷேத்திரமேயாகும். மிகச் சிறிய கோயிலே என்றாலும், ரம்மியமானது.+
தலபுராணம்
வளமிக்க சோலை என்று பொருள்படும் இத்திருத்தலத்தை தேடி வந்து கண்ணபிரான் தன் காதல் மிகு மனைவியரான பாமா, ருக்மிணியுடன் வசிக்க வந்தார் என்பதே இத்தலத்தின் புராணம். வடமதுரைக்கு ஈடாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது இத்திருத்தலம். பாமா மிகவும் விரும்பிய தேவலோகப் பாரிஜாதத்தைக் கோபாலன் விண்ணிலிருந்து கொணர்ந்து இங்கு மண்ணில் வளர்வித்தார் என்பதும் இத்தலத்தின் பெருஞ்சிறப்பு.
பாமா, ருக்மிணியுடன் நின்ற திருக்கோலத்தில் இங்கு காட்சி தரும் பெருமாள் கோபால கிருஷ்ணன் எனவும், ராஜகோபாலன் எனவும் அழைக்கப்படுகிறார். தாயார் மடவரல் மங்கை, செங்கமல நாச்சியார் என்னும் பெயர்களால் வழங்கப்படுகிறார்.
தலச்சிறப்பு
கோவிந்தன் தன் காதல் மனைவியருடன் தங்கிய தலம் என்பதால், தாம்பத்தியத்தில் பிரச்சினைகள், கருத்து வேறுபாடுகள் போன்றவற்றால் அவதியுறுவோர் இங்கு வந்து தரிசித்து அவை நீங்கப் பெறலாம். இது திருமணத்தடைகளையும் நீக்கும் தலமாகும். தன்னை நம்பி வந்த குசேலனிடமிருந்து ஒரு பிடி அவல் பெற்று அவனை உலகச் செல்வம் முழுமைக்கும் அதிபதியாக்கிய கிருஷ்ணன் இங்கு குடிகொண்டு தன்னை நாடி வருவோர் வறுமையைப் போக்கி வளம்பெறச் செய்கிறான். சினத்தால் உறவுகளை இழந்தோர் இங்கு வந்து தொழுது அவை சீர்காணப் பெறலாம்.
இருள்நீக்கி அடியவரின் வாழ்வினிலே எழிலூட்டி
மருள்போக்கும் மாசற்ற மணிவண்ணன் குடிகொண்ட
திருக்கா வளம்பாடி தரிசிக்கா நேத்திரங்கள்
ஒருக்காலும் உய்யாதாம் உணர்ந்தறிவாய் என்நெஞ்சே!
ஓம் நமோ நாராயணா
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ராஜகோபாலன் திருக்கோயில், திருக்காவளம்பாடி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.