சிவனின் ஆறு தலங்களில் மூலதாரத் தலம் திருவாரூர். திருவாரூரில் பிறந்தாலோ, பெயரைச் சொன்னாலோ முக்தி கிடைக்கும் என்பார்கள். அதாவது அனைத்து வித தோஷங்களும் நீங்கிவிடும் என்பது அர்த்தம். பூமிக்குரிய சிவ தலமாக திகழும் திருவாரூர் திருத்தலம்.
பூங்கோயில்:-
சைவ சமய மரபில் பெரிய கோயில் என்றும் பூங்கோயில் என்றும் வழங்கப்படுகிறது. தேவாசிரியம் என்னும் திருக்காவணத்தில் (ஆயிரங்காலம் மண்டபம்) சைவ சமயச் சான்றோர்கள் கூடி எடுக்கும் முடிவு உலகெங்குமுள்ள சைவ சமயத்தினரையும் கட்டுப்படுத்தும் என்பதால் இது சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும் திகழ்கின்றது. இங்குள்ள மூலவர் வன்மீகநாதர் என வடமொழியிலும், புற்றிடங்கொண்ட பெருமான் எனத் தமிழ் மொழியிலும் அழைக்கப்படுகிறார். இத்திருத்தலம் சைவத்திருத்தலங்களில் முதன்மையானதாகவும், சப்தவிடங்கத் தலங்களில் பிரிதிவி (பூமி)த் தலமாகவும் விளங்குகின்றது.
9, 10 ஆம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப்பட்டது:-
இத்திருக்கோயிலின் மூலவர் எப்பொழுது தோன்றினார் என்பது காலக்கணக்கிற்குள் அகப்படாதது என திருநாவுக்கரசரே வியந்து பாடியுள்ளார். கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த கோயில்களாக திகழ்ந்த பூங்கோயில் என்ற ஆருர் மூலட்டானமும்,அறநெறியும் செங்கற்களிகளாகத் தான் திகழ்ந்திருக்க வேண்டும். அதன் பின்னர் கி.பி.9, 10 நூற்றாண்டுகளில் தான் கருங்கற்தளிகளாக இத்திருக்கோயில்கள் மாற்றம் பெற்றுள்ளன. பூங்கோயில் என்ற புற்றிடங்கொண்ட ஈசனது கோயில் முதலாம் ஆதித்த சோழனால் மாற்றம் பெற்றகற்றளியாகும். பீடம், உபீடம், கோஷ்டம் மற்றும் பொதிகை விமான அமைப்பு ஆகியவைகள் அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனின் கலை நயத்தோடு திகழ்கின்றது. கருவறை, அர்த்தமண்டபத்துடன் மட்டும் திகழ்ந்த ஆதித்தனின் பணிக்குப் பின்னால் வந்த சோழப் பெருமன்னர்கள் முகமண்டபத்தையும், மகாமண்டபங்களையும் எடுத்து விரிவுபடுத்தி செய்தனர். அரநெறியாம் கோயில் செங்கற்தளியாக இருந்ததை சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் கற்றளியாக மாற்றியமைத்ததை முதலாம் ராசராசனின் கல்வெட்டு கூறுகின்றது. இதனால் கருவறை அர்த்தமண்டபம் பின்னாளில் தான் எடுக்கப்பட்டது என்கிறார்கள்.
வானுயர்ந்த கோபுரங்கள்:-
இக்கோயிலின் கருவறையின் கட்டடப்பாங்கு செம்பியன் மாதேவியார் பாணி என கலை இயல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதுவே தொன்மையான கட்டடம் என்பது தெளிவாகும். வான் கிழிக்கும் வண்ணக் கோபுரங்களாக வெளிமதிலில் நான்கு பெரிய கோபுரங்களும் ஓரு சிறிய கோபுரமும் (கீழ்த்திசையில்) அணி செய்கின்றது. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும் மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றது. இவைகள் ஓவ்வொன்றும் வரலாற்றில் பல்வேறு காலங்களின் கட்டடக்கலை பாணியின் எடுத்துக்காட்டுகளாக திகழ்வதோடு தனித்த வரலாற்று முத்திரைகளையும் சுமந்து நிற்பது சுவையான ஓன்றே என்று சொல்லலாம். மகாமதுரம் என்ற வாஸ்து நூல்கள் குறிப்பிடும் கிழக்கு ராஜகோபுரம் ஆரூர் கோயிலின் முக்கிய திருவாயிலாக விளங்குகிறது. மகா துவாரமான கிழக்கு வாயிலின் மேல்தளம் (முதல் தளம்) வரை முழுவதும் கருங்கற் கட்டுமானமாகவும், இதற்குமேல் 6 பிரஸ்தளங்களும் ஏழு துவாரங்களும் உள்ளது. இவை அனைத்தும் சிகரம் உட்பட செங்கற் திருப்பணியாகும். உப பீடத்திலிருந்து முதல் தளம் வரை உள்ள கருங்கற் கட்டுமானம் 12, 13 ஆம் நூற்றாண்டின் சோழர்காலச் சிற்ப கட்டடக்கலையின் உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது. கட்டடக் கலைப்பாங்கு கோஷ்டத்தில் தெய்வ திருவுருவங்கள் நிர்மானம் போன்ற கலை அம்சங்களில் இந்த கோபுரம் திருபுவனம், தில்லை, திரு ஆனைக்கா போன்ற திருக்கோபுரங்களை ஓத்து திகழ்கின்றது. சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக்குரிய தெய்வங்கள்,வாயிற்போர், ஆதித்தன், திருமால் போன்ற தெய்வத் திருவுருவங்களும் நாட்டியச் சிற்பங்களும்,யாளி வரிசையின் எழிற்கோலமும் இத்திருக் கோபுரத்திற்குரிய சிறப்பு அம்சங்கள், கலைநயத்தால் இமயமெனத் திகழும் இந்த ராஜகோபுரமானது சிறந்ததொரு வரலாற்றுப் பின்னணியையும் கொண்டு திகழ்வது குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுச் சிறப்புடைய இத்திருக்கோபுரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடங்களில் மாமன்னவன் குலோத்துங்கள்,அவனது ராஜகுரு ஈஸ்வர சிவர் என்னும் சோமேஸ்வரர் ஆகிய இருவருடைய உருவச்சிலைகளும் கல்வெட்டுப் பொறிப்புகளோடு இன்னும் இருக்கின்றது. கலை நயத்தால் மட்டுமில்லாமல் வரலாற்று பெருமையாலும் இத்திருக்கோபுரம் தன்னகரில்லாப் பெருமையோடு திகழ்கின்றது. கிழக்கு கோபுரத்தை ஓத்த மேற்கு கோபுரம் கி.பி. 15ம் நூற்றாண்டு கலைப்பாங்குடன் அமைந்துள்ளது. கோபுர வாயின் இரு பக்கங்களிலும் நாட்டிய மங்கையர் மற்றும் புராணச்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளது. ஆனால் கோஷ்ட தேவதைகள் இடம்பெறவில்லை. எந்த மன்னனின் பணிகள் என்பதைக் காட்டும் தெளிந்த சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. வடக்கு கோபுரம் தஞ்சை நாயக்க மன்னன் செவ்வப்பன் காலத்தில் எடுக்கப்பட்டதாம். முதல் தளம் வரை கருங்கற் பணியாக அமைந்துள்ளதால் சிற்பங்கள் இடம்பெறவில்லை. இக்கோபுர வாயிலின் கீழ்புறத்தில் இரண்டு மாடங்களில் செவ்வப்ப நாயக்கனின் கருங்கற் சிலையும், அவனது காலத்தில் இத்திருக்கோயில் நிர்வாகத்தில் சிறப்பிடம் வகித்த பண்டாரத்தின் உருவச்சிலையும் இடம்பெற்றுள்ளது. வடகிழக்கு திசைகளில் அமைந்துள்ள கோபுரங்கள் கொஞ்சம் சிறியதாகவே பிற்கால பணிகளாக திகழ்கின்றது. இரண்டாம் மதிலின் கிழக்கு கோபுரம் சோழர் காலத்துப் பழமையான கோபுரமாகும். உயரம் குறைந்த கோபுர கோபுரமாக இருந்தாலும் குறிப்பிடத்தக்க சிற்ப சிறப்புகள் இடம்பெறவில்லை.
இத்திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் ஈசான்யத்தை நோக்கி அமைந்துள்ளது. அருள்மிகு கமலாம்பிகை கோயில், இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றன. இவள் மூன்று தேவியரின் சங்கமம் க கலைமகள் ம மலைமகள், ல அலைமகள் என்று திகழ்கிறாள். அன்னை புனித பாரத தேசத்தில் புகழ்பெற்ற 64 சக்திபீடங்களில் முதன்மையானதாகவும் காசி விசாலாட்சி காஞ்சி காமாட்சி, மதுரை, மீனாட்சி ஆரூர் கமலாயதாட்சி, நாகை நீலாயதாட்சி) ஆகிய ஐந்து தலங்களில் சக்தி பீடமாகவும் சிவசக்தி சொரூபிணியாகவும் கமலாம்பாள் திகழ்கிறாள். மூன்று தேவியரும் ஓன்றாய் நிற்கும் அன்னை துர்வாச முனிவர் வழிபட்டுள்ளார். அன்னை வலது கரத்தில் மலரினை ஏந்தியும், இடது கரத்தை இடையில் இருத்தியும், கால்களை யோகாசன நிலையில் அமைத்து மகாராணியைப் போலவும் காட்சியளிக்கிறாள்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர்:-
ஆசியாவிலலேயே மிகப்பெரிய தேராக விளங்கும் ஆழித்தேர், ரூ.2 கோடியே 18 இலட்சம் பொருட்செலவில் புதுப்பிக்கப்பட்டு பழைய பாகங்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஆழித்தேரை புதிதாக வடிவமைக்கப்படும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழித்தேரின் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொல்புகழ் கொண்ட திருவாரூரின் பெருமை மகுடத்தில் ராஜமாணிக்கமாக ஆழித்தேர் மாடவீதிகளில் தேரோட்டம் நடைபெறுவதை காண்பது கண்கொள்ளக்காட்சியாகும். ஆழித்தேரின் மொத்த எடை 300 டன். 30 அடி உயரம் 31 அடி அகலமும் கொண்டது. ஆழித்தேரில் 600 சிற்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர் அலங்கரிக்கப்பட்ட பிறகு இன்னும் உயரம் அதிகரிக்கும். பூதப்பார், உபபீடம், சிறிய உறுதலம், பெரிய உறுதலம், நடனகாசனம் பத்மாசனம்,தேவாசனம்,சிம்மாசனம் ஆகிய 8 பாகங்களைக் கொண்டிருக்கிறது. ஆழித்தேரின் ஓவ்வொரு சக்கரமும் 9 அடி உயரத்திற்கு இருக்கும். சிவனின் வரலாற்றைக் கூறும் சிற்பங்கள் ஆழித்தேரில் அதிகமாக பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் பூதங்கள், சிம்மம்,ரிஷபம்,குதிரை,யாழி, உட்பட பல்வேறு சிற்பங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆழித்தேரை சுற்றி 150 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆழித்தேர் நான்கு வீதிகளிலும் அசைந்தாடி வரும் காட்சி மெய்சிலிர்க்கவைக்கும் காட்சியாகும்.
அமைவிடம் :-
திருவாரூரிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு :-
ஆலயம் – 04366 -242343
செய்தி : ப.பரசுராமன்
படம் : ப.வசந்த்
The post திரூவாரூரில் தியாகராஜரின் பிரம்மாண்டமான ஆழித்தேர்! appeared first on SWASTHIKTV.COM.