ஆதிநாயகனின் அருள்பெற்ற நம்பியாண்டார் நம்பி சிதம்பரத்திற்கு அருகேயுள்ள திருநாரையூரில் பொள்ளாப் பிள்ளையாருக்கு பூஜை செய்யும் ஆதிசைவக் குடும்பத்தில் தோன்றியவர் நம்பி. தந்தையார் சிறு வயதிலேயே வேதங்களையும், ஆகமங்களையும் நம்பிக்குச் சொல்லிக் கொடுத்தார். தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்பித்தார். ஒருசமயம், தந்தையார் திடீரென்று வேறொரு ஊருக்குச் செல்ல நேரிட்டது. அவர் தம் மைந்தரை அழைத்து பிள்ளையாருக்குப் பூஜை மற்றும் நிவேதனங்களைச் செய்து முடித்து, பிறகு பள்ளிக்குச் செல்லுமாறு பணித்துவிட்டுச் சென்றார். நம்பிகள் காலையில் எழுந்து நீராடி மலர் பறித்து மாலை தொடுத்து தாயார் கொடுத்தனுப்பிய நிவேதனத்தை எடுத்துக் கொண்டு ஆலயம் நோக்கிச் சென்றார்.
நிவேதனத்தை பிள்ளையார் முன்பு பரப்பினார். ‘‘எடுத்துக் கொள்ளுங்கள், உங்களுக்குத்தான் இது எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று பலமுறை வேண்டினார். தனக்குப் படைக்கப்படும் பிரசாதத்தை தினமும் விநாயகர் உண்டு வருவதாக அவர் நினைத்துக் கொண்டிருந்தார். எனவே, அதுபோல தான் தருவதையும் ஏற்பார் என்றும் நினைத்தார். வெகுநேரமாக விநாயகப்பெருமான் மௌனமாக இருப்பதைக் கண்டு, தான் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ, அதனால்தான் எடுத்துக் கொள்ள மறுக்கிறாரோ என்று வருந்தி அருகேயிருந்த சுவரில் தன் தலையை மோதிக் கொள்ள முற்பட்டார். சட்டென்று பிள்ளையார், ‘‘குழந்தாய் சற்றே பொறு,’’ என்று கூறி, அவரைத் தடுத்து, பிறகு நிவேதனத்தை எடுத்துக் கொண்டார். மகிழ்ச்சியோடு உண்டார். இந்த நிகழ்ச்சியால் நம்பிகள் பள்ளிக்குச் செல்லும் நேரம் கடந்து விட்டிருந்தது.
காலதாமதமாக பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் என்னை அடிப்பார் என்று பிள்ளையாரிடம் கூற, பிள்ளையார் அந்தக் குழந்தையைப் பார்த்து, ‘‘யாமே இனி உமக்கு ஆசிரியராக அமைவோம்,’’ என்று பாடங்களை சொல்லிக் கொடுத்தார். விநாயகரின் திருவருளால் நம்பிகள் கலை ஞானங்கள் அனைத்தும் கைவரப் பெற்றார். இந்த அற்புத நிகழ்ச்சி நாடெங்கும் பரவியது. அதைச் செவியுற்ற ராஜராஜசோழன் நம்பிகளை சந்தித்து பிள்ளையாருக்கு வேண்டிய அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். நம்பிகள் அளிக்கும் பிரசாதத்தை பிள்ளையார் ஏற்றுக் கொள்வதைக் கண்டு அதிசயித்தான்..
The post யாமே இனி உமக்கு ஆசிரியராக அமைவோம், என்ற பொள்ளாப் பிள்ளையார் appeared first on SWASTHIKTV.COM.