ஆன்மீகம் என்பது என்ன
எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம், இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல் நாம் எங்கிருந்து வந்தோம். எதை நோக்கி நமது பயணம் போகிறது அதற்கான முடிவுதான் என்ன? இறைவனிலிருந்து பிரிந்த ஜீவாத்மா மீண்டும் இறையோடு ஐக்கியமாக ஆன்மா தேடும் பாதைதான் ஆன்மீகம்
எது நம்மை இயக்குகிறது?
இரண்டு பேரின் அன்புதான் நமக்கு உருவமும் உயிரும் தந்து உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அவர்கள் கற்றுத் தந்த அனுபவம் ,நாம் வாழ்க்கை போராட்டத்தில் பெற்றுக் கொள்ளும் அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.நம் வாழ்நாளில் நம்மை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பதை தெளிவாக அடையாளம் காணுவதில் இருக்கிறது நீங்களும் நானும் தேடும் ஆன்மீகம்.
தேடலுக்கான பாதை எப்படி தேர்வு செய்வது
சிலருக்கு கீதையில்,சிலருக்கு இராமாயண மகாபாரத இதிகாசங்களில்ஒரு சிலருக்கு மகாவிஷ்ணுவின் அவதார கதைகளில், பலருக்குசித்தர்கள்,ஆழ்வார்கள், சிவனடியார்கள்,ஜீவ சமாதியடைந்த முனிவர்கள்,மகான்கள்ஆன்மீக தேடலுக்கான கருத்துக்களை கூறியுள்ளனர். இராமாயணம் ஒரு கணவன் மனைவி, கணவனின் பெற்றோர்,மனைவியின் பெற்றோர் ,உறவுகள் சுற்றமும் நட்பும் என வாழ்க்கை சக்கரத்தின் ஒவ்வொரு தருணத்திலும் நமக்கு ஏற்படும் பிரச்சனைகள்,அதற்கான வழிமுறைகள் இறை வழியில் அவற்றை கடந்து கணவனும் மனைவியும் இல்லற வாழ்வில் வெற்றி கொள்ள உதவுகின்றன்கணவன் மனைவிக்குள் நிகழும் எல்லாவித உறவுச் சிக்கல்களுக்கும் இராமாயணத்தில் விடை உண்டு.
அது போல மகாபாரதம்.
ஒரு குடும்பத்தில் பிறந்த அண்ணன்,தம்பி பங்காளிகள்,சமபந்தி உறவுகள் இவர்களுக்குள் சுய நலத்தால் விளையும் உறவுச் சிக்கல்கள் , ஒவ்வொருவருக்குள்ளும் நிகழும் மனப் போராட்டம்,ஒருவரின் தவறு எவ்வாறு ஒட்டு மொத்த சமூகத்தை பாதிக்கிறது.அதிலிருந்து மீளும் வழி என்ன என தேட ஆரம்பிக்கும் போதுதான் பிறவி,கர்மா,ஊழ்வினை,தோசம், சாபம் என மானுட வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவங்களுக்குமான காரணங்களையும்,அவற்றின் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தப்புவது என்பது பற்றி கிருஷ்ணர் அர்ஜீனனுக்கு சொல்கிறார்.
கீதை பிறக்கிறது:
இதைத்தான் நாம் தேடும் ஆன்மீகமும் காட்டுகிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.கதாபாத்திரங்கள் கூறும் ஆன்மீக ஞானத்தை உணராமல் கதாபாத்திரங்களின் குணாதிசியங்களால் ஈர்க்கப்பட்டு அவன்தான் சிறந்தவன் என்று வாதிடுவதற்காக பொய் கருத்துக்களை புகுத்தி இதிகாசம் இயற்றப்பட்ட காரணமறியாது வாதங்களை முன் வைத்து சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறோம்.
எது ஆன்மீகம் :
அது சரி.எது ஆன்மீகம் என நீங்கள் கேட்பது புரிகிறது.ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது கூட ஒருவகை ஆன்மீகம்.
அதை விட பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வதும் ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வாழ்க்கையின் உயர்நிலையை எட்டி பிடிக்கவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது. உயர்நிலை என்பது வசதியானவாழ்க்கை..அதில் இன்பம் தருவனவாக நினைப்பது அனைத்தும் புறப்பொருட்கள்தான்! (வீடு,வாகனம்..இன்னும்பிற) இந்த புற சந்தோஷங்களை சம்பாதிப்பதிலேயே கடைசி வரை ஓடுகிறான்.எல்லாம் அடைந்து அவற்றால் மகிழ்ச்சியில் திளைத்து இனிமேல் அனுபவிக்க முடியாத நிலைக்கு கீழே விழும் போது தான் தன்னை பற்றியும்,தனக்குள் இருக்கும் ஆன்மாவை பற்றியும் நினைக்கிறான்.அந்த ஆன்மாவிற்கு இந்த புறபொருள் மகிழ்ச்சி எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. அது அறிந்தது பாவம், புண்ணியம் மட்டுமே. அதுகாறூம் தான் செய்த நல்ல செயல்கள் என்ன..தீயசெயல்கள் என்ன என்று பட்டியல் போடுகிறது. தீய செயல்களுக்கு மனம் வருந்துகிறது. மனிதனாக வாழ தவற விட்ட காலங்களை கனமாக்குகிறது.
அவன் சந்தோஷம் என்று சேகரித்த அத்தனையும் அவனுக்கு பிறகு இன்னொருவனுக்கு உரிமையுடைதாக ஆகும் உண்மை புரிகிறது. உரிமை கொண்டாடிய உறவுகள் கூட அவனுடன் பயணிக்க போவதில்லை என்ற யதார்த்தம் தெரிகிறது. இப்போது உணர்கிறான். தன்னுடன் தனக்குள்ளே இருந்து தன்னை விட்டு விலகாமல் கடைசி வரைகூடவே வரும் ஆன்மா பற்றி.அந்த ஆன்மா மனித வாழ்க்கையில் அன்பும்,கருணையும் கொண்டு நல்ல செயல்களையே செய்திருந்தால் மனம் லேசாகி இறப்பு பற்றி கவலை கொள்ளாதவனாக ஆகிறான்.
இறைவனை அடைய பல ஆன்மிக வழிகளை முன்னோர் உருவாக்கினர், அந்த ஆன்மிக வழிகள் எல்லாமே நல்லசெயல்களை புண்ணியமாகவும், தீயசெயல்களை பாவமாகவும் எடுத்து காட்டியது ஆன்மீக வழியை பின்பற்றியவர்கள் பழி,பாவங்களுக்கு அஞ்சி நற்செயல்கள் செய்வதையே வாழ்க்கையின் நோக்கமாக கொண்டனர். நாளடைவில் அந்த ஆன்மிக வழிகள் இனம், மதம் என்ற வேறுபாட்டை பெரிதாக்கி ஒவ்வொருவரும்தன் வழிகள்தான் சிறந்தது என்று ஆன்மீகத்தின் நோக்கத்தையே திசை திருப்பியதால் மத வழிபாடுகளாக மாறிவிட்டது. இந்த வழிபாடுகளில் சிலர் எளிமையாக ஆன்மாவை உணர்ந்து கொண்டிருக்கின்றனர். சிலர் வெறும் ஆரவாரங்களுடன் தன்னை போலியாக காட்டி கொண்டிருக்கின்றனர்.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.
ஆன்மீக தேடலில் எப்படி இறைவனை நெருங்க முடியும்
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.இறைவனை நெருங்க வேண்டும் எனில் உன் கர்ம வினைகள்எல்லாம் தொலைந்து பாவக்கணக்கை முடிவுக்கு கொண்டு வந்து புண்ணியத்தை ஆன்மீக வழியில் தேடுங்கள்.இறைவனோடு பேசுங்கள் ஸ்லோகங்கள்,மந்திரங்கள் , பஜனை பாடல்கள் ஒவ்வொன்றிலும் இறைவனை உணருங்கள்.
எண்ணம் சொல் செயல் எல்லாவற்றிலும் சுய நலமின்றி, எந்த எதிர்பார்ப்பும் இன்றி சிவனையோ கிருஷ்ணனையோ இறை வழியில் தேடுங்கள். நீங்கள் விரும்பும் இறைவனை சென்றடைவதற்கான வழியை ஏற்படுத்தி தருவதுதான் ஆன்மீகம்.
இத்தகைய இறைபணியை செவ்வனே செய்து ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் நாம் விரும்பிய இறைவனிடம் முக்தி பெற .ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு பாதை அமைத்து தருவதோடு மட்டுமல்லாமல் ஒத்த கருத்தோடு தங்களை சார்ந்தவர்களையும் தன்னோடு இறைவனை சரணடைய முயற்சி மேற்கொள்கிறார்கள்.
The post ஆன்மீகம் என்பது என்ன | spirituality appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.