சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. இது 1000ஆண்டுகள் பழைமை வாய்ந்தது விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் மூலம் தெரிய வருகிறது. இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். தக்கனின் யாகத்தை அழித்தவர் வீரபத்திரர் என்பது புராணம். அதை உறுதிப்படுத்தும் வகையில் வீரபத்திரர் ஆலயம், பத்ரகாளி எனும் கோலவிழியம்மன் கோவிலுக்கு மேற்கே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமர்ந்த கோலத்தில் கோலவிழி அம்மன்:
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன. வடக்கு நோக்கிய கருவறைக்குள் முன்புறம் சிறிய வடிவிலான அம்மனும், பின்புறம் பிரமாண்ட கோலத்தில் சுதைச் சிற்பமாக அமர்ந்த கோலத்திலும் கோலவிழி அம்மன் காட்சி தருகின்றனர். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோலவிழி அம்மனாக விளங்குகிறாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது எண் கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது எண் கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள்.
கருணை அருளும் நாயகி:
அம்மனின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். ‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என்றால் அது மிகையல்ல. அறுபத்துமூவர் விழாவிற்கு மயிலாப்பூர் சிறப்பு பெற்றத் தலமாக விளங்குகின்றது. இந்த அறுபத்து மூவர் திருவிழாவானது, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனிப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடத்தப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த பெருவிழாவிற்குத் தொடக்கமாக முதல் மரியாதை பெறும் தலமாகத் திகழ்வது, மயிலாப்பூரில் உள்ள கோலவிழி அம்மன் என்னும் பத்ரகாளி திருக் கோவிலாகும்.
திருவிழாக்கள்:
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10–ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.
நடைதிறப்பு:
இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
செய்தி – ப.பரசுராமன்
படங்கள் – வசந்த்
The post அகோரிகள் வழிபட்ட கோலவிழி அம்மன் appeared first on SWASTHIKTV.COM.