முன்னொரு சமயம், அகத்தியர் யாத்திரை மேற்கொண்ட போது, கலியின் கொடுமைகளைக் கண்டு மிகவும் மனம் வருந்தி இதிலிருந்து மக்களை விடுவிக்க மார்க்கம் வேண்டி காஞ்சி நகருக்கு சென்று விஷ்ணுவை நோக்கி கடுந்தவம் புரிந்தார்,அவரது தவத்தினால் மகிழ்ந்த மாலவன் ஹயக்ரீவராக அவருக்கு காட்சியளித்து அதற்கான மார்க்கம் அன்னை பராசக்தியை பூஜிப்பதே ஆகும் என்றார்.
உரையாடல் தொடர்கிறது :
அகத்தியர் அந்த தேவி ஆதி, அந்தமும் அற்ற அருட்பெருஞ்சோதி ஆனவள். சகலத்திற்கும் ஆதாரமாக விளங்குபவள், சகல மங்களங்களின் இருப்பிடமாகத் திகழ்பவள்.
தூய்மையான உள்ளங்களில் வசிப்பவள். அதீத அப்யாஸாத்தின் மூலமாக மட்டுமே தரிசிக்கக் கூடியவள்.
ஆதியில் அவள், பிரம்மனின் யோகத்திலிருந்து பிரகிருதி என்ற பெயரில் தோன்றினாள். இரண்டாவது முறையாக, பாற்கடல் கடைந்த போது, மோகினியாகத் தோன்றினாள்.
அகத்தியர் : பரந்தாமா !! அருள் கூர்ந்து அதனை விளக்கிக் கூறவும்.
ஹயக்ரீவர் : ஒரு சமயம் தேவேந்திரன், தானே தேவர்களின் அதிபதி என்ற மமதையுடன் தனது ஐராவதம் என்னும் வெள்ளை யானையின் மீதேறி பவனி வந்தான்,அப்படி வலம் வருகையில், அவன் ஈசன் வசிக்கும் கைலாயத்தையும் அவரையும் கூட மதிக்க மறந்தான். அவனது இந்த ஆணவத்தைக் கண்ட ஈசன், அவனை நல்வழிப்படுத்த துர்வாச முனிவரை அவனிடம் அனுப்பி வைத்தார்.
துர்வாச முனிவர் ஒரு பித்தனைப் போல ஆகாயமார்க்கமாக இந்திரனை நோக்கி புறப்பட்டார்.
வழியில் அவர், ஒரு வித்யாதர பெண் கரங்களில் மாலையுடன் வருவதைக் கண்டார். அவளை நிறுத்தி, அது பற்றி வினவினார்.
அப்பெண் அவரை உற்று நோக்கி அவர் ஒரு முனிவர் என்பதை உணர்ந்து கூறினாள் :
“சுவாமி !! நான் பல காலமாக தேவியை உபாசித்து வணங்கி வருகிறேன். இன்று எனக்கு அந்த ஜகன்மாதா காட்சியளித்து அவளது கழுத்திலிருந்த மாலையை கழற்றி எனக்கு பிரசாதமாக அளித்தாள்” என்றாள்.
உடனே அந்த மாலையை தான் விரும்புவதாகவும், அதை தனக்கு அளிக்குமாறு கேட்டார்.
உடனே அவளும் தயக்கமின்றி கொடுத்து விட, அதனை வாங்கியவர், ஆனந்தத்தில் “பிரம்மாதி தேவர்களுக்கு கூட கிடைக்காத இதைப் பெற்று நான் தன்யன் ஆனேன்” என்று கூறி தனது தலை மீது வைத்து கொண்டவர்,
அப்பெண்ணுக்கு என்றும் தேவியின் மீது பக்தி நிலைத்திருக்க ஆசி கூறி இந்திரனை நோக்கி முன்னேறினார்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 04) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.