ஈசனின் கோபாக்னியால் எரிக்கப்பட்ட மன்மதனை கண்ட ரதி அழுது புலம்பினாள். அவளை முற்காலத்தில் நடந்த சம்பவத்தை கூறி ஆறுதல் படுத்தினான் வசந்தன்.
மேலும், பிரம்ம தேவர் கூறியது போல அவளை அன்னை லலிதாம்பிகையை பூஜிக்குமாறு கூற அவளும் அப்படியே செய்யலானாள்.
இனி: பண்டாசுர ஜனனம் இதனிடையே, அங்கு வந்த சிவகணங்களில் ஒருவரான சித்ரகர்மா என்பவர், அந்த சாம்பலைக் கொண்டு ஒரு புருஷ வடிவினைச் செய்தார்.
அப்போது அங்கு வந்த ஈசனின் பார்வை அதன் மீது பட்டதும் அது உயிர் பெற்று எழுந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த சித்ரகர்மா, அவனுக்கு சதருத்ரீய மந்திரத்தினை உபதேசித்து அவனை ஈசனை நோக்கி தவமியற்ற கூறினார்.
அவனும் அப்படியே செய்ய, சந்தோஷம் கொண்ட சாம்பசிவன் அவனுக்கு 60,000 ஆண்டுகள் ராஜ்யமாளும் வரத்தினையும், அவன் கேட்டுக் கொண்டபடி சத்ருவின் பாதிபலம் தன்னை வந்தடையும் படியும், சத்ருவின் அஸ்திர, சஸ்திரங்கள் அவனை பாதிக்காதபடியும் வரமளித்து மறைந்தார்.
அவனது செயல்களைக் கண்ட பிரம்மா, “பண்ட, பண்ட” என்று நகைத்தபடியால் அவனுக்கு பண்டாசுரன் என்ற பெயர் உண்டானது.
அதே போல, எஞ்சிய மன்மதனின் சாம்பலிலிருந்து விஷங்கன், விசுக்ரன் என்னும் சகோதரர்களை உருவாக்கி தனக்கு பக்கபலமாக வைத்துக் கொண்டான்,அதே போல, பற்பல அசுரர்களை உருவாக்கி 300 அக்ஷௌஹிணி சேனைகளை படைத்தான். அவர்கள் அனைவரும் அவனை பணிந்தனர்.
(1 அக்ஷௌஹிணி – 21,870 யானைகள்; 65,610 குதிரைகள்; 1,09,350 வீரர்களை கொண்டது)
பெரும் அசுர சேனை தோன்றியதை அறிந்த அசுரகுரு சுக்ராச்சார்யர் அங்கு தோன்றி அவர்களை வாழ்த்தினார். மேலும் அசுர சிற்பி மயனை அழைத்த பண்டன் அழகியதும், வலிமையானதுமான ஒரு நகரத்தினை நிர்மாணிக்க கூறினான்.
அவரும் க்ஷண நேரத்தில் அப்படி ஒரு நகரத்தை உருவாக்கினார். அந்நகரம் “சூன்யக பட்டணம்” என்ற பெயருடன் விளங்கியது.
அந்நகரில் அவனுக்கு சுக்ராச்சார்யர் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். விஷங்கனையும், விசுக்ரனையும் யுவராஜர்களாக நியமித்தார்,பண்டனுக்கு ஸம்மோகினி, சித்ராங்கி, குமுதினி, சுந்தரி என்ற 4 மனைவிகள் இருந்தனர்.
ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 17) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.