பண்டனின் கொடுமைகளிலிருந்து விடுபட மார்க்கம் வேண்டி அனைத்து தேவர்களும் மஹா சம்புவை தொழ, அவர் அன்னை லலிதாம்பிகையை தோற்றுவிக்க மஹா யாகம் நடத்த கூறினார்.
இனி:மஹா யாகத்தினை மஹா சம்புவே முன்னின்று நடத்தி தர தேவர்கள் வேண்ட அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்,மோக மயக்கத்திலிருந்த தனது சிஷ்ய வர்க்கத்தினை கண்ட சுக்ரர் மனம் வருந்தி பண்டனிடம் சென்று, உனது பலத்தால் தான் அசுரர்கள் அச்சமின்றி இருக்கின்றனர்.
ஆனால் உங்களை அழிக்கும் வழி தேடி அனைத்து தேவர்களும் அன்னை ஜகன்மாதாவை நோக்கி தவம் செய்கின்றனர்.
அதற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் அந்த விஷ்ணு, மாயையால் உங்களை மோகிக்கச் செய்து விட்டார் என்று கூறினார்.
தேவர்களுடைய தவம் வெற்றி பெற்றால், அன்னை மகிழ்ந்து விட்டால் அவர்களுக்கே ஜெயம் உண்டாகும். எனவே, உடனே இமாலயஞ் சென்று அவர்களது தவத்தினை கலைப்பாயாக என்றார்,இதனை கேட்ட பண்டன் தனது மந்திரிகளை அழைத்து சுக்ரன் கூறியதை அவர்களிடம் தெரிவித்தான்.
அதை கேட்ட ஸ்ருதவர்மா என்பவன், வேந்தே !! ஈசன் அளித்த 60,000 ஆண்டுகள் எப்போதோ முடிவடைந்து விட்டன. எனவே அந்தந்த காலங்களில் ஏற்படும் சுக, துக்கங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும் என்றான்.
அதைக் கேட்ட பீமகர்மா, அசுரேந்திரா !! காலத்தை கருதி எதிரிகளை குறைத்து மதிப்பிட கூடாது, மற்றும் ஒதுக்கி விடவும் கூடாது. குருதேவர் கூறியபடி எதிரிகளின் தவத்தினை கலைப்போம் என்றான்.
பீமகர்மாவின் கருத்துக்களை ஒப்புக் கொண்ட பண்டன், சேனைகளுடன் இமாலயஞ் சென்றான்,
அவனது தீய எண்ணங்களை அறிந்த ஸ்ரீதேவி, அங்கே தாண்ட முடியாத மாயா பிரகாரத்தை தோற்றுவித்தாள். அதனைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்டன், பலமிக்க அசுராஸ்திரத்தால் அதை தகர்த்தான்.
ஆனால் அவன் உடைக்க, உடைக்க மீண்டும் மீண்டும் புதிது புதிதாக தோன்றும் அக்கோட்டையைக் கண்டு வருந்தி அவனது இருப்பிடம் திரும்பினான்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 24) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.