விஷ்ணு மாயை பற்றியும், தேவர்களின் வழிபாடு பற்றியும் சுக்ரன் கூறியதை கேட்ட பண்டன் விழிப்படைந்து, அதனை தடுக்க சென்ற போது ஸ்ரீதேவியின் அருளால் அவன் தேவர்களை நெருங்க முடியாமல் திரும்பி செல்கிறான்.
இனி : மஹா யாகம் சிறிது காலத்தில், மஹா சம்பு அன்னை லலிதையின் மூல மந்திரத்தினை ஜபித்து கொண்டே வாயு வடிவேற்று பிரம்மாண்டத்திற்குள் பிரவேசித்தார்,பராசக்தி அவரது கிரியா சக்தியாக விளங்கினாள். அதைக் கொண்டு அவர் சமுத்திரத்தை வாயால் ஊதி வற்றச் செய்தார்,அப்போது ஏற்பட்ட பள்ளத்தினை ஹோம குண்டமாக்கி அதில் தனது நெற்றிக்கண்ணால் சிதக்னியை உண்டாக்கினார்.
அவ்வாறு உண்டான அக்னியானது, பாதாள லோகத்திலிருந்து பிரம்ம லோகம் நெடிய பிரகாசித்தது,யாக குண்டத்தினை மலர்களைக் கொண்டு அலங்கரிப்பது போல, சிதக்னி குண்டத்தினை நட்சத்திரங்களை கொண்டு அலங்கரித்தார்.
அதன் பிறகு மஹா சம்புவானவர், வேதாகம முறைப்படி யாகத்தினை நடத்த ஆரம்பித்தார்.
பிரளய மேகங்களான புஷ்கலா மற்றும் ஆவர்த்தகா ஆகியவற்றை ஹோம கரண்டிகளாகக் கொண்டார்,யாகம் தொடர்ந்து நடைபெற, சிதக்னி பல தூரம் கொழுந்து விட்டு பிரகாசித்தது. முதலில் அவர் ஆறு மகா சமுத்திரங்களையும் ஆறு துளி நெய்யாக விட்டார்.
பின்னர், ஐந்து விதமான சிருஷ்டியும் யாகத்தில் இடப்பட்டது. அதன் பிறகு, தேவர்கள் அனைவரும் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு, பக்தியுடன் ஹோம கரண்டிகளில் அமர்ந்து ஆஹூதியாக தயார் ஆனார்கள்.
இறுதியாக அவர்களையும் யாகத்தில் இட்ட மஹா சம்பு, தனது சுய உரு கொண்டு, 8 விதமான மந்திரங்களை ஜபித்து 8 விதமான ஹோமங்களை செய்தார்.
“மஹாயாக க்ரமாராத்யா மஹாபைரவ பூஜிதா” (லலிதா சகஸ்ரநாமம்)
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 25) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.