பண்டனின் ஆணைப்படி குடிலாக்ஷன் வலாஹகாதிகள் ஏழு பேரை தேவியுடன் போருக்கு அனுப்பினான். அவர்களையும், அவர்கள் சேனையையும் திரஸ்கர்ணிகா தேவி கொன்றொழித்தாள்.
இனி :விஷங்காதிகள் ஓடுதல் வலாஹகாதிகள் எழுவரும் அழிந்தது கண்டு கடுஞ்சினம் கொண்ட பண்டன், தனது முக்கியமான மந்திரி பிரதானிகளுடன் ரகசிய ஆலோசனை செய்தான்.
பண்டன் அவர்களை நோக்கி, “ஆச்சரியம்! அசுர வம்சத்திற்கு அழிவு காலம் நெருங்கி விட்டது. நமது கிங்கரர் பெயரை கேட்டாலே வானவர் பயந்தோடுவர். அத்தகைய நமக்கே பெருங்கேடு விரைந்துள்ளது.”
“வெல்ல முடியாத பராக்கிரமம் மிகுந்த வீரர்கள் பலர் அப்பெண்ணால் கொல்லப்பட்டனர். ஒற்றர்கள் மூலம் அனைத்திற்கும் சேனையின் பின்னிருக்கும் லலிதையே காரணம் என்றறிகிறேன்.”
“புறத்தில் இருந்து எதிரிகளை வெல்வதில் விஷங்கன் சமர்த்தன். அவன் ரகசியமாக அந்த துஷ்டை இருக்குமிடம் 15 அக்ஷௌஹிணி சேனையுடன் சென்று அவளை கொல்லட்டும்.”
“வேர் போன்ற அவள் ஒருத்தியை கொன்றாலே எல்லா சக்திகளையும் கொன்றதாகும். விஷங்கா ! உனது பெருமையை காட்ட இதுவே சமயம் ! ஜயமுண்டாகுக” என்று கூறி அனுப்பினான்.
விஷங்கன் தேவியை எதிர்க்க கிளம்பிய போது, அவனுக்கு சாதகமாக சூர்ய அஸ்தமனமானது. விஷங்க சேனைகள் நீல வஸ்திரங்களையும், கருத்த தலைப்பாகையும், கவசங்களும் அணிந்திருந்தனர்.
மேற்கு திக்கை நாடிச் செல்லும் தேவியின் சேனையை எதிர்க்க மூச்சு விடும் சப்தமும் கேளாமல் ஜாக்கிரதையாக சேனையை வடக்கு முகமாக நகர்த்தி சென்று ஸ்ரீலலிதையின் சேனையை வளைத்தான்.
இவ்வாறு மிக மெதுவாக ஸ்ரீலலிதையின் சக்ரராஜ ரதத்தின் அருகே வந்து தேவி தன்னை கவனிக்கவில்லை என்றெண்ணி திடீரென பின்புறமாக சேனைகளுடன் ரதத்தினை தாக்கினான்.
அங்கு 9வது ஆவரணத்தில் இருந்த அணிமாதி சக்திகள் கோலாஹலம் செய்தனர். பல்வேறு ஆயுதங்களால் அசுரர்கள் சக்திகளை அடித்து நாசம் செய்தனர்.
திடீரென நேர்ந்த யுத்தத்தாலும், இருளாலும் திகைத்த சக்திகள் ஆயுதங்கள், கவசங்கள் ஆகியவற்றை எடுத்து போர் செய்ய துவங்கும் முன்னரே தாக்கப்பட்டனர்.
இவர்களுடைய கூக்குரல் ஒவ்வொரு ஆவரணத்தையும் தாண்டி ஸ்ரீலலிதையை அடைந்தது. அவள் மிகுந்த கோபம் கொண்டாள்.
அதற்குள் குடிலாக்ஷன் 10 அக்ஷௌஹிணி சேனையுடன் முன்புறமாக வந்து அங்கிருந்த சக்திகளை பின்புறம் உள்ள சக்திகளுக்கு சஹாயம் செய்ய விடாமல் போர் செய்தான்.
விஷங்காதிகள் விட்ட பாணங்களினால் ஸ்ரீதேவியின் விசிறி ஒன்று முறிந்தது. சக்ரராஜ ரதம் பாணங்களால் மூடப்பட்டது.
உடனே, ஸ்ரீலலிதையின் புருவமசைய, காமேஸ்வரி முதலிய நித்யா தேவியர் பரம ஆக்ரஹத்துடன், யுத்த ஆவேசங் கொண்டு, தேவியை வணங்கி,
“தேவி !! மஹாராக்ஞீ !! தண்டினி, மந்திரிணி ஆகியோரால் நடத்தப்படும் சேனையை கண்டு பயந்த அசுரர்கள் மாயையால் பின்புறமாக தாக்குகின்றனர்.”
“வஹ்னிவாஸினி, ஜ்வாலாமாலினி ஆகியோர் இப்பேரிருளை நீக்கினால், அசுரர்களின் இருப்பிடம் கண்டு அவர்கள் மதத்தை அடக்கி விட்டு தங்களருகே வந்து விடுகிறோம்” என்றனர்.
தேவியும் அவ்வாறே அனுகிரஹிக்க, காமேஸ்வரி நித்யா வில்லை வளைத்து கோபத்துடன்,
“துஷ்டர்களே நில்லுங்கள் !! உங்கள் மாயையை இப்போதே அழிக்கிறேன்” என்றவாறு பர்வாவின் மீதேறினாள். பகமாலினீ முதலியோரும் பின்தொடர்ந்தனர்.
ஜ்வாலாமாலினியும், வஹ்னிவாஸினியும் இருளை நீக்கி ரணகளத்தை பிரகாசப்படுத்தினர். இதனால் அசுரர்களின் மாயை விலகியது.
இதனை கண்டு சினங்கொண்ட அசுரர்கள் இன்னும் முனைப்புடன் போர் புரிந்தனர். கூரிய ஆயுதங்களுடன் கூடிய காமேஸ்வரி முதலிய 15 நித்யைகளும் ஒரு நொடியில் அசுர சேனையை கலக்கினார்கள்.
இரு யாமம் வரை கடும் போர் புரிந்து, பல அக்ஷௌஹிணி சேனைகளை கொன்று குவித்தனர். காமேஸ்வரி தமனனையும், பகமாலினீ தீர்க்கஜிஹ்வனையும், நித்யக்லின்னா ஹும்பேகனையும், பேருண்டா ஹுடுமுல்லகனையும்,
வஹ்னிவாஸினி கல்கஸனையும், மஹா வஜ்ரேஸ்வரி கல்கிவாஹனனையும், சிவதூதீ புல்கஸனையும், த்வரிதா புண்ட்ரகேதுவையும், குலஸுந்தரி சண்டபாகுவையும்,
நித்யா குக்குரனையும், நீலபதாகை ஜம்புகாக்ஷனையும், விஜயா ஜம்பனையும், சர்வமங்களா தீக்ஷ்ணசிருங்கனையும், ஜ்வாலாமாலினி திரிகண்டகனையும், சித்ரா சந்திரகுப்தனையும் உக்ரபாணங்களால் கொன்றனர்.
முக்கிய சேனாதிபதிகள் அனைவரும் அழிந்தது கண்டு கடுஞ்சினம் கொண்ட விஷங்கன் இரவின் கடைசி யாமத்தில் இரண்டு முகூர்த்த காலம் நித்யைகளுடன் போரிட்டான்.
இனி தன்னால் முன்னிற்க முடியாது என்றெண்ணி காமேஸ்வரியின் பாணங்களினால் மிகுந்த அடிபட்டு நொந்து மிகுந்த சேனையுடன் ஓடினான்.
ஓடுபவனை துரத்தலாகாது என்றெண்ணி அவனை எவரும் பின் தொடரவில்லை.
வாடிய சரீரங்களோடு கூடிய நித்யா தேவியர் வெற்றியுடன் ஸ்ரீலலிதையின் முன்பு வந்து வணங்கி நின்றனர். இவ்வாறு இரவில் கடும் போர் செய்த நித்யா தேவிகளை ஸ்ரீலலிதை மிகவும் மெச்சி ஆனந்தம் கொண்டாள்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 42) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.