தனது உற்றார், உறவினர் அனைவரையும் இழந்த பண்டன் இறுதியில் தானே ரணகளம் புகுகிறான்,இதை உணர்ந்த ஸ்ரீலலிதையும் தானே யுத்தம் செய்ய வருகிறாள்.
இனி : ஸ்ரீலலிதையும் பண்டனும் திவ்யாஸ்திரம் விடுதல் கோபத்தினால் கண்கள் சிவக்க, பண்டாசுரன் லலிதா பரமேஸ்வரியின் மீது பாணங்களை வர்ஷித்தான்.
அன்றியும் “அந்ததாமிஸ்ரம்” என்னும் இருளை உண்டாக்கும் அஸ்திரத்தை பிரயோகித்தான். “மஹாதரணீ” என்னும் சூரியாஸ்திரத்தால் மஹேஸ்வரி அதனை அகற்றினாள்.
“பாஷண்டா”ஸ்திரத்தை பண்டன் பிரயோகிக்க, அதை அகற்ற ஜகதாம்பிகை “காயத்ரி” அஸ்திரத்தை நினைத்தாள்.
சக்திகளது கண்களை மறைக்கும் “அந்தாஸ்திரத்தை” பண்டன் சிருஷ்டித்தான். அம்பிகை அதை “சக்ஷுஷ்மதி” என்ற மஹாஸ்திரத்தால் அடக்கினாள்.
பண்டன் விட்ட “சக்திநாசம்” என்னும் அஸ்திரத்தை “விச்வாவஸு” என்னும் அஸ்திரத்தால் அதன் திமிரை அகற்றினாள்.
கடுஞ்சினங்கொண்ட பண்டன், மிக உயர்ந்த “அந்தகா(யமா)”ஸ்திரத்தை பிரயோகிக்க, தேவி அதனை “மிருத்யுஞ்ஜயா”அஸ்திரத்தால் நாசம் செய்தாள்.
எல்லா அஸ்திரங்களையும் மறக்க செய்யும் “சர்வாஸ்திரஸ்மிருதிநாசம்” என்னும் அஸ்திரத்தை பண்டன் பிரயோகிக்க, தேவியானவள் “தாரணா” அஸ்திரத்தால் அதன் பயத்தை நாசம் செய்தாள்.
சக்திகளுக்கு பயத்தை அளிக்கும் “பயாஸ்திர”த்தை பண்டன் பிரயோகிக்க, தேவி அபயத்தை அளிக்கவல்ல “ஐந்திராஸ்திரம்” கொண்டு முறியடித்தாள்.
பண்டன் “மஹாரோஹா” அஸ்திரத்தை சக்திகள் மீது பிரயோகித்தான். அதிலிருந்து ராஜயக்ஷ்மா போன்ற பல நோய்கள் உண்டானது. அவற்றை போக்க ஸ்ரீலலிதை “நாமத்ரய மஹாமத்ரம்” என்னும் அஸ்திரத்தை விடுத்தாள்.
அதிலிருந்து அச்யுதன், அனந்தன், கோவிந்தன் என்னும் மூவர் தோன்றி ஹூங்காரத்தால் சகல ரோகங்களையும் அழித்து விட்டு தேவியை வணங்கி,
அவளது உத்தரவுப்படி, உலகில் தேவி பக்தர்களின் வியாதிகளை அழிப்பதற்காக அவர்கள் தம்மிருப்பிடம் சென்றனர்.
பண்டன் “ஆயுர்நாசனம்” என்னும் அஸ்திரத்தை விட்டான். மஹாராக்ஞீ, “காலஸங்கர்ஷிணி” ரூபமான ஓர் அஸ்திரத்தை அதற்கு பதிலாக பிரயோகித்தாள்.
(பண்டாஸுரேந்த்ர நிர்முக்த சஸ்திர பிரத்யஸ்திரவர்ஷிணி – லலிதா சஹஸ்ரநாமம்)
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 51) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.