சகல உலகங்களுக்கும் துன்பங்களை அளித்து வந்த பண்டாசுரனை அன்னை ஜகன்மாதா ஸ்ரீலலிதாம்பிகை காமேஸ்வராஸ்திரத்தால் வதைத்தாள். அன்றியும், சூன்யக பட்டணத்தையும் தீக்கிரையாக்கினாள்.
இனி : பிரம்மாதிகள் செய்த ஸ்ரீலலிதா ஸ்துதி
அகத்தியர் : ஹே அஸ்வானநா! ஸ்ரீலலிதையின் விசேஷமான விக்ரமத்தை உணர்த்தும் மிகச் சிறந்த சரிதத்தால் மிக்க மகிழ்ந்தோம்,யுத்தம் முடிவடைந்த பின்னர் அம்பிகை யாது செய்தனள்? திருவாய் மலர்ந்தருள வேண்டும்.
ஹயக்ரீவர் : பண்டாசுர வதத்திற்குப் பிறகு, என்ன செய்யப்பட்டது எனக் கூறுகிறேன். கேள்.
அசுரர்களின் பாணங்களினால் பீடிக்கப்பட்ட சக்திகள் அனைவரையும் அமிர்தம் பெருகும் தனது கருணாகடாக்ஷ வீக்ஷணத்தால் அடிக்கடி சந்தோஷப்படுத்தினாள் அம்பிகை.
அதனால் சக்திகள் தங்களது களைப்பை அகற்றிக் கொண்டனர்.
இந்த சமயத்தில் பண்டாசுரனை தேவி கொன்றதனால், சந்தோஷமடைந்த பிரம்மாதி தேவர்கள், அண்டத்தில் வசிக்கும் பல்லோரும் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவியை மிகுந்த பக்தியுடன் ஸ்தோத்திரம் செய்தனர்.
பிரம்மாதி தேவர்கள் :
“ஜகத்திற்கெல்லாம் ஏகநாயகியே ! திரிபுரை என்னும் திருநாமமுள்ளவளே! பண்டமஹாசுரனை கொன்றவளே! காமேஸ்வரரது இடது பாகத்திற்கு அதிபதியே! உனக்கு நமஸ்காரம்!
நினைத்ததை கொடுக்கவல்ல சிந்தாமணியே! சிந்தைக்கு எட்டாதவளே! சிதாகாரமான அலையின் மாலையே!
சித்ரமான ஆகாச வடிவமானவளே! சித்ர வர்ணமான உடையை தரித்தவளே! விசித்திரமான உலகை படைத்தவளே! சித்ரா எனும் நித்யா தேவியால் சூழப்பட்டவளே! உனக்கு நமஸ்காரம்!
மோக்ஷத்தை அளிப்பவளே! அழகிய சந்திரனை சிரசில் அணிந்தவளே! அழகிய புன்சிரிப்புள்ளவளே! மோகத்தை அகற்றுவதில் சாமர்த்தியம் நிறைந்தவளே!
முத்ரேஸ்வரி எனப்படும் மந்திரிணியால் ராஜ்ய தந்திரத்தை நடத்துபவளே! ஸம்க்ஷோபிணி முதலிய முத்திரைகளில் பிரியமுள்ளவளே! உனக்கு நமஸ்காரம்!
குரூரமான அசுரர்களை துவம்சம் செய்யும் கோமளாங்கியே! கோபம் வந்த போது காளியின் ரூபத்தை தரிப்பவளே!
வராஹமுகியால் காக்கப்படும் பெரும் ஸைன்ய சக்கரமுள்ளவளே! அன்பெலாம் திரண்டு ஓருருவானவளே! உனக்கு நமஸ்காரம்!
ஷடங்கதேவி பரிவாரங்களால் ரக்ஷிக்கப்படுபவளே! ஆறு அங்கங்களுடன் கூடிய வேதவாக்யங்களால் தேடத்தக்கவளே!
ஆறு சக்கரங்களில் வசிப்பவளே! ஆறுவிதமான வியஸனங்களை அகற்றுபவளே! ஆறு விகாரங்களின் வடிவமானவளே! ஸ்ரீலலிதையே உனக்கு நமஸ்காரம்!
காமேஸ்வரி முதலான நித்யா தேவிகள் வடிவான அழகிய ஆசனத்தில் அமர்ந்தவளே! தாமரை இதழ்கள் போன்ற கண்களை உடையவளே!
சர்வ காமனைகளையும் பூர்த்தி செய்பவளே! காமேஸ்வரரால் விரும்பப்படுபவளே! சகல கலைகளுக்கும் நாயகியே! உனக்கு நமஸ்காரம்!
திவ்ய, சித்த, மானவ கூட்டமென்னும் குரு மண்டல ஸ்வரூபமாய் உள்ளவளே! ஸ்வயம்பிரகாச வடிவானவளே! ஆயிரம் சூரியர்கள் போல பிரகாசமுள்ளவளே!
மிகப் பிரகாசமானவளே! தயையுடன் கூடியவளே! தேவர்களுக்கு ஆதிதேவனாகிய மஹாதேவன் மனைவியே! உனக்கு நமஸ்காரம்!
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 55) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.