பண்டாசுர வதத்திற்குப் பிறகு, சகல தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, மஹாராக்ஞீ காமனை உயிர்ப்பித்தாள்.
அவளின் ஆணைப்படி மன்மதன் மீண்டும் ஈசனை பாணங்களினால் அடிக்க, அவரும் கௌரியை மணந்து குமரனை பெற்று தாரக வதமும் நடந்தது.
இனி : ஸ்ரீநகர நிர்மாணம்
அகத்தியர் : சந்தேகம் என்னும் சேற்றை உலர்த்தும் சூரியனே! ஸ்ரீபுரம் என்பதென்ன ? அது எந்த வடிவாய் உள்ளது? அது யாரால் நிர்மாணம் செய்யப்பட்டது?
ஹயக்ரீவர் : பண்டாசுர வதத்திற்குப் பிறகு மும்மூர்த்திகளும் காமேஸ்வரர் மற்றும் லலிதாம்பிகைக்கு ஆலயம் அமைக்க ஆசை கொண்டனர்.
சிற்ப சாஸ்திரத்தில் ஸமர்த்தனான விஸ்வகர்மாவையும், மாயையில் சிறந்த மயனையும் அழைத்து அவர்களை தக்கபடி புகழ்ந்து,
நித்ய ஞானக் கடலான லலிதா தேவிக்கு 16 க்ஷேத்ரங்களில் ரத்னமயமான ஸ்ரீநகரங்களை நிர்மாணிக்க கூறினர்.
அந்த 16 க்ஷேத்ரங்கள் எவை என்று அவர்கள் வினவ, பிரம்மாதி தேவர்கள் அதனை கூறினர்.
1. மேரு மலை
2. நிஷத மலை
3. ஹேமகூடம்
4. ஹேமகிரி
5. கந்தமாருதம்
6. நீலமேஷம்
7. சிருங்கம்
8. மஹேந்திரம்
9. மஹாகிரி (மலைகளில் ஒன்பது)
10. உப்புக்கடல்
11. கருப்பஞ்சாற்று கடல்
12. ஸுரைக்கடல்
13. நெய் கடல்
14. தயிர் கடல்
15. பாற்கடல்
16. சுத்தஜல கடல் (கடலில் ஏழு)
இந்த 16 க்ஷேத்ரங்களில் அமைக்கப்பட்ட ஸ்ரீதேவியின் மஹாபுரங்களுக்கு 16 நித்யா தேவிகளின் பெயர்களே இடப்பட்டு பிரஸித்தமாக விளங்கும்.
இங்ஙனம் மும்மூர்த்திகளால் வேண்டப்பட்ட அவ்விரு சிற்பிகளும் அந்த க்ஷேத்ரங்களில் ஸ்ரீபுரத்தை படைத்தனர்.
மேரு மலை சகலத்திற்கும் ஆதாரமானது. அதன் கிழக்கில் ஒன்றும், நிருதி திக்கில் ஒன்றும், வாயு திசையில் ஒன்றும், இடையே ஒன்றுமாக 4 சிகரங்கள் உண்டு.
முற்கூறிய மூன்று சிகரங்களும் 100 யோஜனை அகலமும், நீளமும் உள்ளவை. அம்மூன்றிலும் முறையே பிரம்ம, விஷ்ணு, சிவ லோகங்கள் இருக்கின்றன.
மத்தியில் உள்ள சிகரம் நானூறு யோஜனை அகலமும், நீளமும் உள்ளவை. அந்த சிருங்கத்தில் ஸ்ரீபுரம் அமைக்கப்பட்டது.
(நாளை முதல் உலோக கோட்டை வர்ணனைகள்)
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 59) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.