அன்னை ஸ்ரீலலிதா மஹாதிரிபுரசுந்தரி வாசம் செய்யும் ஸ்ரீநகரத்தின் வர்ணனை கண்டு வருகிறோம்.
இனி : சிந்தாமணி கிருஹ வர்ணனை
ஸ்ரீபுரத்திற்கு நடுவே இரண்டு யோஜனை விசாலமான சிந்தாமணி கிருஹம் விளங்குகிறது.
அதன் சுவர்களும், மேற்கூரைகளும் சிந்தாமணி கற்களாலேயே ஆனது. சுவர்கள் 4 யோஜனை உயரமுள்ளவை. ஸ்தூபிகள் 20 யோஜனை உயரமுள்ளவை.
அதற்கு 3 சிகரங்கள் இருக்கின்றன. அதன் மீது இச்சை, ஞானம், கிரியை என்னும் சக்திகள் விளங்குகின்றனர்.
அந்த கிருஹத்தின் கிழக்கு வாயிற்படி பூர்வாம்நாயம் என்று கூறப்படுகிறது. இதே போல தெற்கு, மேற்கு, வடக்கு வாயிற்படிகள் முறையே தக்ஷிண, பச்சிம, உத்தர ஆம்நாயங்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த கிருஹராஜத்தின் இடையே அழகிய சுவர்களில் அதனை பிரகாசப் படுத்தும் கோடிக்கணக்கான ரத்ன தீபங்களின் தண்டுகள் புதைக்கப் பட்டிருக்கின்றன.
இந்த மிகப்பெரிய சிந்தாமணி கிருஹத்தின் மத்ய பாகத்தில் மிக உயர்ந்து விளங்கும் திண்ணையின் மேல் மகத்தான பிந்து சக்ரம் இருக்கிறது.
பத்மாடவீ ஸ்தலத்திலிருந்து சிந்தாமணி கிருஹமானது 20 முழம் உயரமாக உள்ளது. அங்கே அணிமா முதலிய சக்திகள் இருக்கின்றனர்.
முதல் ஆவரணம்,முதல் பிரகாரம் முதல் ஆவரணத்தில் அணிமா முதலிய சக்திகள் கிரமமாக வீடுகளை அமைத்து கொண்டு வசிக்கின்றனர்.
மேலும் அணிமாதி சித்திகளின் திக்குகளுக்கிடையே அநேக கோடி சித்திகள் நாற்புறமும் வசித்து கொண்டு பரதேவதையை சேவித்து வருகின்றனர்.
அணிமாதி சக்திகள் வசிக்கும் பிரகாரம் 1600 முழம் விஸ்தாரமானதாக விளங்குகிறது.
இரண்டாம் பிரகாரம்
அணிமாதி சித்திகளின் ஸ்தானத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமானதும், நான்கு திக்குகளிலும் பல படிக்கட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட மிக அழகிய கிருஹம் விளங்குகிறது.
அங்கே அஷ்ட மாத்ருகா தேவிகளும் பல்வேறு ஆயுதங்களை தரித்தும், பல பரிவாரங்களால் சூழப்பட்டும் பிரதக்ஷிணமாக ஆலயங்களை அமைத்துக் கொண்டு வசிக்கின்றனர்.
மூன்றாம் பிரகாரம்
அஷ்ட மாத்ருகா தேவிகளின் ஸ்தானத்திற்கு மேல் 20 முழம் உயரமும், 1600 முழம் விசாலமான ஆலயம் விளங்குகிறது.
அங்கே முத்ரா தேவிகள் கிழக்கு திசையிலிருந்து பிரதக்ஷிணமாக அமைந்து ஸ்ரீதேவியை சேவித்து வருகின்றனர்.
முதல் ஆவரணத்தில் உள்ள மூன்று பிரகாரங்களில் உள்ள சக்திகள் பிரகட யோகினிகள் என்று அழைக்கப்படுவர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 76) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.