Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?

$
0
0

திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.
எப்படி..?

திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான ‘கோகர்ப்ப ஜலபாகம்’ என்னும் குளத்தைத் தோண்ட பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது. திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனந்தாழ்வான்?
வாருங்கள் திருவரங்கத்துக்குச் செல்வோம்…
திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. ‘நாம் திருவரங்கத்தில் நந்தவனமும், தபோவனமும் அமைத்துக்கொண்டு பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால், ‘சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்’ என சதா சர்வகாலமும் பாடிப் புகழும் வேங்கடமுடையானுக்கு இப்படி ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே’ என்பதுதான் அவருடைய ஆதங்கம்.

அதை ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், ‘உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?’ எனக் கேட்கவும் செய்தார். ஆனால், பசுஞ்சோலைகளும் மருதாணிப் பூக்களும் செழித்துக் கிடக்கும் காவிரிக்கரையில் நீராடிவிட்டு, அரங்கனைத் தொழும்போது கிடைக்கும் சுகானுபவம் வேறெங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை.
‘குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?’ என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான், கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவல். அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு ‘திருமாலை சேவை’ செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

‘அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்’ என்றார். அனந்தாழ்வானும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.

திருமலையில் குடிசை ஒன்றைக் கட்டினார். அதனருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி ‘ராமாநுஜ நந்தவனம்’ என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின் தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். ‘நானும் உங்களுக்கு உதவுகிறேன்’ என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.

மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான்.

ஆனால், அனந்தாழ்வானோ, ‘நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘உன் வேலை எதுவோ அதைப் போய் செய்’ என்று அனுப்பிவிட்டார்.

தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான்.

எனவே, ‘வேலை செய்ய கூலியே வேண்டாம். நான் மண் சுமக்கிறேன். மண் சுமந்த புண்ணியம் தங்கள் மனைவிக்கே கிடைக்கட்டும்’ என்றான் சிறுவன். ‘பாவ புண்ணிய விஷயங்களில் சிறுபையனான இவன் தனக்கு புத்திமதி சொல்கிறானே என ஆத்திரமுற்ற அவர் ‘அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே’ என்று சிறுவனைக் கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார்.

சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார். அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. என்ன ஆச்சர்யம்… அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

” தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ”என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.
‘சரி, தம்பி’ என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது. திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. ‘மண்ணைக் கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே’ என்று மனைவியைக் கேட்க, ”சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை”என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான் கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாறையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார். சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.

அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும் தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ‘அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்’ என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.
பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.
”சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க” என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.
‘அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்”என்று அசரீரியாகக் கேட்டார்.

”கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி” என்றார். பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார்.
‘சரி ‘ ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?’ என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.

சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்’ என்றார். அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும்விதமாகவே திருப்பதிப் பெருமாளின் தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

கோவிந்தா ஹரி கோவிந்தா !

The post திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>