Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்- தூத்துக்குடி

$
0
0

பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். வடநாட்டில் பண்டரிபுரம் இருப்பது போல, இங்கு ‘தென் பண்டரிபுரம்’ என்று அழைக்கப்படுவதுதான் இந்த விட்டிலாபுரம். வட பண்டரிபுரத்திற்குச் சென்று நிறைவேற்ற முடியாத காரியங்களை, இந்த ஆலயத்தில் செய்து பலன் பெறலாம்.

தல வரலாறு :

விஜய நகரப் பேரரசு சிறப்புற்று இருந்த காலம். அவர்களின் பிரதிநிதிகள் பல்வேறு இடங்களில் ஆட்சிபுரிந்து வந்தனர். விட்டலராயர் என்ற மன்னன், தென் பகுதியின் பிரதிநிதியாக தாமிரபரணி நதிக்கரையில் முறப்பநாட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்க விட்டலர் மீது மிகவும் பக்தி கொண்டவர். ‘தினமும் அவரை நேரில் சென்று வணங்க வேண்டும்’ என்று விருப்பம் கொண்டார். ஆனால் அலுவல் காரணமாக அவரால் வடநாடு செல்ல முடியவில்லை.

திடீரென்று ஒருநாள் மன்னனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ‘மக்கள் அனைவருக்கும் வளமான வாழ்வு தர, இறைவனால்தான் முடியும். அதுவும் பாண்டுரங்கனால்தான் முடியும். எனவே பாண்டுரங்க விட்டலருக்கு இங்கு ஒரு கோவில் கட்ட வேண்டும்.’

அந்த நாள் வரும் வரை பாண்டுரங்கரை நினைத்து தியானம் செய்யத் தொடங்கினார். ஒருநாள் மன்னனின் கனவில் தோன்றிய பாண்டுரங்கர், “மன்னா! தாமிரபரணி ஆற்றங்கரையில் எலுமிச்சை பழம் ஒன்று மிதக்கும். அதன் பின்னால் சென்றால் ஓரிடத்தில் அந்த பழம் சுழன்று, தண்ணீரில் அப்படியே நிற்கும். அங்கே தோண்டினால் என்னுடைய விக்கிரகம் கிடைக்கும். அப்போது தலைக்கு மேலே ஒரு கருடன் சுற்றும். அவர் வழிகாட்டுதல்படி மேற்கு பகுதிக்கு சென்று, கருடன் அடையாளம் காட்டும் இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்று கூறி மறைந்தார்.

பாண்டுரங்கர் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த மன்னனுக்கு இது மகிழ்ச்சியைத் தந்தது. தாமிரபரணி நதிக்கரையில் தன் வீரர்களுடன் சென்றார். அப்போது தாமிரபரணி ஆற்றில் ஒரு எலுமிச்சை பழம் மிதந்து சென்றது. மன்னனும், படைவீரர்களும் அந்தப் பழத்தைப் பின் தொடர்ந்து சென்றனர். அது ஒரு இடத்தில் சுழன்று நின்றது. அதன் மேல் கருடன் வட்டமிட்டது. அங்கு தோண்டியபோது, பாண்டுரங்கனின் உற்சவர் திருமேனி கிடைத்தது. பின்னர் கருடன் சென்ற பாதையை பின்தொடர்ந்து, பாண்டுரங்கனை நெஞ்சோடு அணைத்தபடி நடந்து சென்றார் மன்னன்.

தொடர்ந்து கருடன் ஓரிடத்தில் அமர்ந்து இடம் காட்டிய பகுதியில், பாண்டுரங்கனை பிரதிஷ்டை செய்து ஆலயத்தை உருவாக்கினார். ஆலயத்தைச் சுற்றி ஊர் உருவானது. மன்னனின் பெயரிலேயே ‘விட்டிலாபுரம்’ என்று அந்த ஊர் அழைக்கப்படலாயிற்று. கோவில் உருவானதும் மன்னன் தினமும் அங்கு சென்று பூஜைகளை செய்து வந்தார். வட பண்டரிபுரம் செல்ல முடியாதவர்கள், இங்கு வந்து வழிபட்டாலேயே அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்.

இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். மன்னன் கண்டெடுத்த உற்சவமூர்த்தி ‘பாண்டுரங்கர்’ என்ற திருநாமத்துடன், இரண்டு திருக்கரங்களை இடுப்பிலும், மற்ற இரு கரங்களில் சங்கு, சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

கோவிலின் முன்பக்கம் முதலில் இருப்பது 16 தூண்களைக் கொண்ட மண்டபம். அடுத்து பெரிய மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம். மிக உயரமான இக்கொடிமரம் மூலவரின் அனுக்கிரகத்தை வெளிப்படுத்துகிறது. அடுத்து கருடாழ்வார் சன்னிதி மேற்கு நோக்கி உள்ளது. ஆலயத்தின் உள்ளே ருக்மணி, சத்யபாமா, சேனை முதல்வர், உடையவர்களுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. ஆலய தூண்களில் சிறு சிறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.

இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் மன்னன் வேண்டுகோளை ஏற்று, தன் திவ்ய சொரூபத்துடன் அர்ச்சாவதாரம் கொண்டு எழுந்தருளியுள்ள திருமால், கிருதயுகத்தில் பிரம்மாவால் பூஜிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள். திரேதாயுகத்தில் முதலையால் துன்புற்ற கஜேந்திரனால் பூஜிக்கப்பட்டார். துவாபரயுகத்தில் பிரகஸ்பதியால் அர்ச்சரிக்கப்பட்டார். இந்த கலியுகத்தில் நமக்கும் இந்த இறைவனை வழிபட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தடைகளை தாண்டி எழுந்த ஆலயம் :

இந்த ஆலயத்தைக் கட்டிய மன்னன், முதலில் இதை வடஇந்திய பாணியில் உள்ள பாண்டுரங்கன் ஆலயத்தைப் போலவே கட்ட முயற்சி செய்திருக்கிறார். இதற்காக தன் படைவீரர்களை வடக்கே அனுப்பி அங்குள்ள சிற்பிகளை அழைத்து வர ஆணையிட்டார். ஆனால் அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே இங்குள்ள சிற்பிகளைக் கொண்டு ஆலயத்தின் உள்ளே உள்ள ருக்மணி சன்னிதியை அற்புதமாகவும், மிக வேலைப் பாட்டுடன் கட்டி முடித்தார். மூலவர் கருவறையைக் கட்ட முயன்ற போது திருவாங்கூர் மகாராஜா, விஜயநகரப் பேரரசுக்குத் கட்டவேண்டிய கப்பத் தொகையைக் கட்டாததால் அந்த மன்னன் மீது விட்டல் ராஜா படையெடுக்க வேண்டியதாயிற்று.

இதனால் மற்ற பகுதிகளை அவசர அவசரமாக கட்டி முடித்தார். மன்னன் இந்தக் கோவிலை 1547-ல் கட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. போர்கள் பல ஏற்பட்ட காரணத்தினால் இக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்படவில்லை என்று சொல்கிறார்கள். பிரமாண்டமான இந்த ஆலயம், தற்போதும் ராஜகோபுரம் இன்றியே காட்சியளிக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி – திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.

The post விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவில்- தூத்துக்குடி appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>