Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

வெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

$
0
0

கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை ஆகிய மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் அமைந்திருக்கிறது, சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம், ‘பெண்களின் சபரிமலை’ என அழைக்கப்படுகிறது.

பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன், சக்குளத்துக்காவு பகவதி அம்மன் எழிலாக அருள்பாலிக்கிறாள். பெண்கள் பலரும், இருமுடி கட்டி விரதம் இருந்து இந்த அம்மனை தரிசிக்க வருகிறார்கள். அதேபோல் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர், இங்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தினத்தில் பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெறுகிறார்கள். இந்த நாளில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் நின்றபடி, புதிய மண் பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரியதரிசி, சுப முகூர்த்த வேளையில் பொங்கல் வைப்பதற்கான அடுப்பில் தீயை பற்ற வைத்து தொடங்கி வைப்பார். அப்போது பருந்து ஒன்று கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும்.

அதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டுகளை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள். இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப்பெற்றுச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.

வருகிற17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இக்கோவிலில் திருவிழா நாட்களாகும். இந்த நாட்களில் 12 நாட்கள் விரதம் இருந்து சபரிமலையை போல் பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தேவியை வழிபடுகிறார்கள். 27-ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள் – ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கும், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது வேறு எங்கும் நடைபெறுவதில்லை என்று சொல்கிறார்கள். அன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள் மேள-தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப் பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

அமைவிடம்

கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது. திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

மூலிகை தீர்த்தம்

தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் இந்த நாளில் இங்கு பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த தீர்த்தத்தைக் குடித்தால் பலவித நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை. முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து, ஜாதி – மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறுகிறது. இது ஐஸ்வரியத்துக்கு வழிகாட்டுகிறது.

வெற்றிலை ஜோதிடம்

தேவியின் அருள்பெற்ற இக்கோவிலின் முக்கிய காரியதரிசியான நம்பூதிரி, 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. ஜோதிட கணிப்பின் மூலம் செய்து முடிக்கும் பரிகாரங்கள் வெற்றிக்கு வழிகாட்டுகிறது. கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தருகிறார்கள்.

நாரி பூஜை (பாத பூஜை)

உலகில் எங்கும் இல்லாத ஒரு சம்பிரதாயமாக இக்கோவிலில் ‘நாரி பூஜை’ நடக்கிறது. பெண்களை பீடத்தில் அமரச் செய்து, தேவியாக பாவித்து அவர்களின் பாதத்தை தலைமை பூசாரி தனது கைகளால் கழுவி அவர்களுக்கு பூஜைகள் செய்து வணங்குகிறார்கள். எங்கெல்லாம் பெண்கள் ஆராதிக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு பெண்ணிற்கு முதல் மரியாதை கொடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாத பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டின் நாரி பூஜை 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

The post வெற்றிக்கு வழிகாட்டும் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் appeared first on SwasthikTv.


Viewing all articles
Browse latest Browse all 15459

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>