அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில் (Brahmasirakandeeswarar)
அருள்மிகு பிரம்மசிரகண்டீசுவர் கோயில் Brahmasirakanteeswarar ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகிறது. கவசமிட்ட கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார். கல்வெட்டில் இப்பெருமான் பெயர் திருவீரட்டானத்து மகாதேவர், திருக்கண்டியூர் உடைய மகாதேவர் என குறிக்கப்பெறுகின்றது.
மாப்பிள்ளை விருந்து:
சிவனுக்குரிய சப்தஸ்தான தலங்களில் ஐந்தாவது தலமான இங்கு, சிவன் மேற்கு நோக்கியிருக்கிறார். மாசியில் 13, 14, 15 ஆகிய நாட்களில் மாலை வேளையில், சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். திருவையாறில் அவதரித்த நந்திதேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை திருமழபாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார். இந்த விழாவின் போது, திருவையாறு ஐயாறப்பர், அம்பாள் அறம் வளர்த்தநாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருளுவார். அப்போது, நந்திதேவருக்கு மங்கள ஸ்நான (புனிதப்படுத்தும் அபிஷேகம்) சடங்கு நடக்கும். அதன்பின், ஒரு கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.
தண்டபாணி சன்னதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வெளவால் நெத்தி மண்டப அமைப்புடையது. சப்தஸ்தானத் திருவிழாவில்(ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும். வழக்கமாக சிவன் கோயில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கில்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப்பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக துவாரபாலர்கள் இடத்தில் இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அருகில் சதாசப மகரிஷி உள்ளார். அம்பாள் மங்களாம்பிகை, தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்திலுள்ள வள்ளி தெய்வானையுடன் உள்ள சுப்பிரமணியருடன் மயில் வாகனம் இல்லை. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் உள்ள துர்க்கை, பிரயோகச் சக்கரம் வைத்திருக்கிறாள். நவக்கிரக சன்னதியில் சூரியன், உஷா, பிரத்யூஷாவுடன் இருக்கிறார். மற்ற அனைத்து கிரகங்களும், சூரியனை பார்த்தபடி உள்ளனர். தவறு செய்து விட்டு வருந்துவோர், மன நிம்மதிக்காகவும், திருமண, புத்திர தோஷம் உள்ளோரும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
பிரம்மா, சரஸ்வதி:
பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னதி உள்ளது.தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுகிறார்கள். பிரம்மா, நவக்கிரகங்களில் கேதுவிற்கு அதிபதி, குரு பகவானுக்கு ப்ரீத்தி தேவதையாகத் திகழ்கிறார். குரு பலன் இருந்தால்தான் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே, இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னதியில் நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
பிரம்மா ஒருசமயம் தான் படைத்த ஒரு பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண், தன்னை பிரம்மாவிடம் இருந்து காக்கும்படி அம்பிகையிடம் முறையிட்டாள். அம்பாள், சிவனை வேண்ட, கோபம் கொண்டவர் உக்கிரமாக பைரவர் வடிவம் எடுத்துச் சென்றார். பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் வெட்டி விட்டார். தவறுணர்ந்த பிரம்மா, மன்னிப்பு கிடைக்க சிவனை வேண்டி தவமிருந்தார். சிவன், அவரை மன்னித்தருளினார். பின், அவரது வேண்டுதலுக்காக இங்கே எழுந்தருளினார். பிரம்மாவின் சிரம் (தலை) கொய்தவர் என்பதால் இவர், “பிரம்மசிரகண்டீஸ்வரர்‘ என்று பெயர் பெற்றார். அட்டவீரட்டானத் தலங்களில் முதலாவது தலம் இது.
பிரதோஷ தலம்:
இங்கு தங்கியிருந்த சதாசபர் என்ற மகரிஷி, ஒவ்வொரு பிரதோஷ நாளிலும், எத்தனை வேலை இருந்தாலும் காளஹஸ்தி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரேதாஷ நாளில், காளஹஸ்தி செல்ல முடியாவிட்டால், தன் உயிரை விட்டுவிடுவதாகவும் சபதம் செய்திருந்தார். ஒரு பிரதோஷத்தன்று சிவன் அவரை சோதிக்க பெரும் இடியுடன் மழையை உண்டாக்கினார். இதனால் வருந்தியவர் கோயிலில் அக்னி வளர்த்து, அதனுள் குதித்து தன் உயிரை மாய்க்கச் சென்றார். அவ்வேளையில் அவருக்கு காட்சி தந்த சிவன், “தலம் எதுவானாலும் எங்கும் நானே இருக்கிறேன்!’ என்று உணர்த்தினார். மகரிஷி உண்மை உணர்ந்தார். அறியாமை, மந்த புத்தி உள்ளவர்கள் பிரதோஷ நாளில் இங்கு சிவதரிசனம் செய்வது நல்ல பலன் தரும்.
பிரம்மசிரகண்டீஸ்வர் Brahmasirakanteeswarar சிறப்பம்சம்:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மாசிமாதம் 13, 14, 15ம் தேதிகளில் மாலை 5.45 மணி முதல் 6.10 மணி வரை சூரிய ஒளி சுவாமி மீது படுகின்றது.
“பண்டங் கறுத்ததொர் கையுடையான் படைத்தான்
தலையை உண்டங் கறுத்ததும் ஊரொடு நாடவை
தானறியும் கண்டங் கறுத்த மிடறுடை யான்கண்டி
யூரிருந்த தொண்டர் பிரானைக்
கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.” – திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 12வது தலம்.
#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv
Send Your Feedback at : editor@swasthiktv.com
To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666
The post பிரம்மாவின் சிரம் கொய்த பிரம்மசிரகண்டீஸ்வரர் Brahmasirakandeeswarar appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.