ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.ஸ்ரீராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின் பத்து நாட்கள் பின்பத்து எனப்படும்.
பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.
ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு.
ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்ற போதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார்.
கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம். ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.
The post ஜாதக ரீதியான நவகிரஹ தோஷம் நீக்குவது எப்படி? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.