குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.
ஒப்பற்ற வேலாயுதத்திற்கு இறைவனாகிய முருகன், உயிர்களின் இலக்கான செம்பொருளைச் சொல்லாமல் சொல்லி, அதை அறியும் வழியையும் உபதேசித்த உடனே, மலத் தடிப்பு அகன்று, உலக பசு பாசங்களில் திளைக்க வேண்டும் என்கிற எண்ணமும் அகன்று, லெளகீக விவகாரங்களில் இருந்த அறிவும் நீங்கி, இதுவரை மெய்ப்பொருளை அறியாமல் இருந்த அவித்தையும் அகன்றுவிட்டன.
மூச்சுக்கு முன்னூறு முறை முருகா முருகா என்று உருகிய அருணகிரிதான் முருகனைக் கும்பிட வேண்டியதில்லை என்று சொல்லியிருக்கிறார். அப்படியானால் எது மெய்?
“ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில் படருஞ் சுடர்” என்கிறார்.
ஓல மறைகள்…..அதாவது இறைவனை ஓலமிட்டுத் தொழுகின்ற மறைகள். மறைகள் என்றால் வேதம். வேதம் என்றால் ரிக்கு, யஜூர், சாம மற்றும் அதர்வண வேதங்களா? அதை நான்மறைகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருப்பாரே! ஆனால் இங்கு,
உலகில் மறைநூல் என்று எவையனைத்தும் கொண்டாடப்படுகின்றனவோ அவையனைத்தையும் பொதுவாகச் சொல்கிறார் அருணகிரி. திருக்குறள், கீதை, பைபிள், குரான், கிரந்த சாகிப் என்று எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எல்லாம் மறைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இறைவனைப் பற்றிச் சொல்கின்றன.
வேல் என்பது தமிழ்க் குறியீடு. வடக்கில் சூலாயுதமும் ஓங்காரமும்..
தியானம் செய்கின்றவர்களைப் பார்த்தால் மனதில் அந்தக் குறியை நினைத்து மற்ற எண்ணங்களை ஒடுக்குவார்கள். அதாவது எல்லாவற்றையும் நினைப்பதை விட ஒன்றை மட்டும் நினைப்பது. இது இரண்டாம் நிலை. அப்படியானால் முதல் நிலை என்ன? எந்தக் குறியையும் நினைக்காமல் மனத்தை ஒடுக்குவது.
பத்து செங்கல் அடுக்கி வைத்திருக்கிறது. வலு இல்லாதவன் கையில் சுத்தியலை வைத்து உடைப்பான். வலு உள்ளவன் வெறுங்கையாலேயே உடைப்பான். ஆனால் எப்படி உடைத்தாலும் கல் உடையத்தான் செய்யும்.
குறியை நினைத்துக் கொண்டு மனத்தை ஒடுக்குகின்றவர்கள் அந்தக் குறியை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா. அது முழுமையான ஒடுக்கமாகாது. ஒன்றையும் நினைக்காமல் மனம் ஒடுங்குவதே சிறந்தது.
இப்பொழுது முதல் வரியைப் படியுங்கள். “குறியைக் குறியாது குறித்தறியும் நெறியை!” புரிகிறதா? எந்தக் குறியினையும் மனதில் குறியாது ஆனால் இறையருளைக் குறித்து அறியும் நெறியைத்தான் அருணகிரிநாதர் கேட்கிறார்.
அந்த நெறி எப்படிக் கிட்டும்? “குறியைக் குறியாது குறித்து அறியும் நெறியைத் தனி வேலை நிகழ்த்திடலும்!”. முருகா! உனதருளால் அல்லவா அது கிட்டும்.
அப்படி ஒரு நெறி தெரிந்தபின் அருணகிரியின் அநுபவம் என்ன? “செறிவற்று உலகோடு உரை சிந்தையும் அற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே!”
இருப்பவை அனைத்தும் அற்று போகும் நிலை. அது அனைத்தையும் கடந்த நிலை. சச்சிதானந்த நிலை. சத்து+சித்து+ஆனந்தம் = சச்சிதானந்தம். உலகம் மறந்து போயிற்று. பேச்சில்லை. எண்ணமில்லை. அறிவிற்கும் அறியாமைக்கும் கூட அங்கு இடமில்லை. எல்லாம் மறந்த ஆனந்த நிலை.
The post எவ்வேளையும் செவ்வேலையே நினை appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.