தேவலோகத்தில் ஒருநாள் காமதேனுப் பசு நேரம் கழித்து வர, தேவேந்திரனுக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது. தாமதமாக வந்த பசுவை பூலோகத்தில் காட்டுப் பசுவாகப் பிறக்கும்படி சாபமிட்டான்.
பூலோகத்தில் காட்டுப்பசுவாகப் பிறந்த காமதேனு, தன் சாப விமோசனம் நீங்க கபில முனிவரின் உபதேசப்படி தினந்தோறும் கங்கை நீரை தன் இரு காதுகளிலும் நிரப்பிக்கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது அபிஷேகம் செய்து வழிபட்டது. (கோ என்றால் பசு; கர்ணம் என்றால் காது. எனவே இத்திருக்கோவில் அமைந்த பகுதி திருக்கோகர்ணம் என்றும்; சிவ பெருமான் திருக்கோகர்ணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி அருள்மிகு பிரகதாம்பாள். இந்த ஆலயம் புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.)
இவ்வாறு வழிபட்டு வந்த பசுவின் பக்தியைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு வேங்கையின் (புலியின்) வடிவத்துடன் அந்தப் பசு வரும் வழியில் காத்திருந்தார். வழக்கம்போல பசு தன் காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வரும்போது அந்தப் புலி பசுவைக் கொல்லப் பாய்ந்தது. அப்போது பசு, “”நான் சிவலிங்கப் பெருமானுக்கு நித்ய அபிஷேக பூஜைகளை முடித்துவிட்டு, எனக்காகக் காத்திருக்கும் என் கன்றுக்கும் பாலூட்டிவிட்டு வந்து உனக்கு இரையாகிறேன். அதற்கு அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டது. புலியும் அதற்கு சம்மதிக்க, பசு சிவபெருமானை வழிபட்டபின், தனது கன்றுக்கும் பால் கொடுத்துவிட்டு தான் சொன்னபடியே புலியிடம் வந்து நின்றது.
பசுவின் கடமையுணர்வையும் வாக்கு தவறாத செயலையும் கண்டு, புலி உருவத்திலிருந்த சிவபெருமான் அந்தப் பசுவுக்குக் காட்சி கொடுத்ததோடு முக்தியும் கொடுத்தார். சிவபெருமான் புலி உருவத்துடன் பசுவுக்குக் காட்சி கொடுத்து சாபவிமோசனம் அளித்த தலமே புதுக் கோட்டையிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருவேங்கை வாசல் திருத்தலம். இங்கு சிவபெருமான் வியாக்ரபுரீஸ்வரர் (திருவேங்கைநாதர்) என்ற பெயருடன் காட்சி தருகிறார். இறைவி பிரகதாம்பிகை அம்மை எனப்படுகிறாள்.
பசுவுக்கு முக்தி கொடுத்த புதுக்கோட்டை திருக்கோகர்ணேஸ்வரர் ஆலய அன்னை அருள்மிகு பிரகதாம்பாள், அரைக்காசு அம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். புதுக் கோட்டை தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கி வந்த இந்த அன்னையின் திருவுருவத்தை அப்போதிருந்த தொண்டைமான் அரசர்கள் 1906-ஆம் ஆண்டில் தங்களது நாணயத்தின் ஒரு பக்கமும், மறுபக்கம் “விஜய்’ என்ற தெலுங்குச் சொல்லை யும் பொறித்திருந்தனர். சிறிய வட்ட வடிவ காசில் இந்த பிரகதாம்பாள் அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்டதால் இவள்
“அரைக்காசு அம்மன்’ என்ற பெயரிலும் அழைக்கப்பட்டாள். இந்த காசு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த அரைக்காசு அம்மன் எனப்படும் பிரகதாம்பாள் நின்ற நிலையில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். இந்த அரைக்காசு அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை உள்ளிட்ட எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. மணப்பேறு, மகப்பேறு பாக்கியம் கிட்டும் என்றும்; ஏதாவது ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அரைக்காசு அம்மனை மனதில் எண்ணி வழிபட அந்தப் பொருள் ஒருசில மணி நேரத்திற்குள் அல்லது ஒருசில நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதை அனுபவப்பூர்வமாக நிறைய பக்தர்கள் உணர்ந்துள்ளனர். தொலைந்து போய்விட்டதாகக் கருதப்பட்ட பொருள் கிட்டியவுடன் அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து நம் வீட்டுப் பூஜையறையில் கொஞ்சம் வெல்லம் வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். அரைக்காசு அம்மன் படம் பூஜையறையில் இல்லாவிட்டாலும் மனதில் நினைத்து வழிபட்டாலே இவள் பக்தர்களின் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பாள்.
The post தொலைந்த பொருள் திரும்ப கிடைக்க -அரைக்காசு அம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.