அனைத்து நலமும் அளிக்கும் பிரதோஷ வரலாறும், வழிபாட்டு, பூஜா பலன்களும்
பிரதோஷ வழிபாடு தோன்றிய வரலாறு
அகிலாண்டேஸ்வரி ஒருமுறை தேவலோக கன்னிகை ஒருத்திக்கு, அவளது நடனத்தை மெச்சும் வண்ணம் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை பரிசாக தர, கன்னிகையோ அதனை எதிரில் வந்து கொண்டிருந்த துர்வாச முனிவரிடம் கொடுத்து சென்றாள்.
தேவலோகம் சென்ற துர்வாசர், அம் மாலையை இந்திரனுக்கு பரிசளிக்க, மாலயின் மகிமையை அறியாத இந்திரன். அம் மாலையை தனது யானையிடம் தர, யானை மாலையை தனது கால்களால் மிதித்து சிதைத்தது. கோபத்திற்கு பெயர் பெற்றவராயிற்றே துர்வாசர். இந்திரனையும், தேவர்களையும் ஒரு சேர சபித்தார். சாப விமோஷனம் பெற வேண்டி, தேவரும், இந்திரனும் பரந்தாமனை வேண்டினர். மன்ம் இளகிய பரந்தாமனும், திருப்பாற்கடலை கடைந்து, அதிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தை அருந்துமாறு கூறினார்.
மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு, பாம்பின் தலைப் பகுதியை அசுரரும் வால் பகுதியை தேவரும் பிடித்து கடைய தொடங்கினர். மலை சாய்ந்தது. உடனே, மஹாவிஷ்ணு “கூர்ம அவதாரம் ” எடுத்து மலையை தாங்கி பிடித்தார். அன்று 10 வது திதியான தசமி திதியாகும். மெலும் கடையும் பொழுது, வாசுகி வலி தாங்காமல் விஷம் கக்க, அப்பொழுது கடலிலும் நஞ்சு தோன்ற இரண்டும் சேர்ந்து “ஆலகாலம் ” என்ற கடுமையான விஷமானது.
இதைக் கண்ட வானவர் அஞ்சி நடுங்க, திருமாலும் நான்முகனும் அவர்களை கயிலை சென்று பரமனிடன் தஞ்சமடையுமாறு சொன்னார்கள். வானவரும் அவ்வாறே செய்ய, கயிலை நாதன், தனது தொண்டனான சுந்தரனை அழைத்து அந்த ஆலகால விஷத்தை எடுத்து வரச் சொன்னார். யாராலும் அணுக முடியாத அந்த விஷத்தை சுந்தரன் நாவல் பழம் போல் உருட்டி எடுத்து வர, முக்கண்ணன் அதனை, எல்லோரையும் காக்கும் பொருட்டு தனது வாயில் இட, பரமன் உண்டால் பெரும் கேடு விழையுமே என அஞ்சிய உமையாள் பரமனின் கண்டத்தில் தனது கை கொண்டு தடுக்க, விஷமானது சிவனின் கண்டத்திலேயே தங்கி சிவனாரது கழுத்து நீல நிறமானது. பெருமானும் “நீலகண்டரானார்”. இது நடந்தது ஏகாதசி அன்று மாலை பொழுதில். பின்னர் தேவர் சிவனின் கூற்றுப்படி பாற்கடலை மீண்டும் கடைந்தனர். மறுநாளான துவாதசி திதியன்று பாற்கடலில் அமிர்தம் தோன்ற தேவர்கள் அதனை உண்டு சாகா வரத்தை திரும்ப பெற்றனர்.
ஆனால், சிவனை மறந்தனர். பின்னர், பிரம்ம தேவர், தேவர்களின் குற்றத்தை உணர்த்த, தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கயிலை நாதனை அடைந்து மன்னித்தருள வேண்டினர். சிவ பெருமானும், மனம் கனிந்து தனக்கு முன்னால் இருந்த ரிஷப வாகனத்தின் இரு கொம்புகளுக்கு இடையில், அம்பிகை காண திருநடனம் புரிந்தார். அனைவரும் அதை கண்டு களித்து பெருமானை வணங்கினர். இது நடந்தது திரயோதசி திதியன்று மாலை வேளையில்.
இதுவே பிரதோஷ காலம் என வழிபடப்படுகிறது. ( ஒவ்வொரு திரயோதசி திதியன்றும் மாலை வேளை 4:30 முதல் 06:00 வரை) பிரதோஷ வேளையாகக் கொண்டு சிவ பெருமானுக்கான சிறப்பு பூஜைகள் ஒவ்வொரு சிவாலயங்களிலும் நடைபெறும். பிரதோஷ பூஜை சிவ பெருமானுக்கு மட்டுமே உரிய பூஜை.
சிவ பெருமனை விஷ்ணு, பிரம்மன் முதலிய அனைத்து தெய்வங்களும் வழிபடும் நேரம். எனவே, இக் காலங்களில் வேறு எந்த கடவுளருக்கும் பூஜைகள் நடைபெறாது. சிவாலயங்களில் உள்ள மற்ற கடவுளரின் நடைகள் சார்த்தப்பட்டிருக்கும் அல்லது திரையிடப்பட்டிருக்கும்.
பிரதோஷ ஸ்தோத்திரம்
ஓம் பவாய நம
ஓம் ருத்ராய நம
ஓம் மிருடாய நம
ஓம் ஈசானாய நம
ஓம் சம்பவே நம
ஓம் சர்வாய நம
ஓம் ஸ்தாணவே நம
ஓம் உக்ராய நம
ஓம் பார்க்காய நம
ஓம் பரமேஸ்வராய நம
ஓம் மஹா தேவாய நம
நந்தி தேவருக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பிரதோஷ புஜைகள் மூலவருக்கு செய்யப்படும்.மூலவருக்கு தீபாராதனை முடிவுற்ற பின்னர் நந்தி தேவரது காதுகளில் யாரும் கேட்கா வண்ணம் நமது வேண்டுதல்களை சொல்ல வேண்டும். தேவர்களின் பெரும் குறைகளையே தீர்த்த நந்தி பெருமான் நமது குறைகளையும் நிச்சயம் சர்வேஸ்வரனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நிச்சயம். தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய, 13 வது வாரம் நமது குறைகள் தீர்ந்ததை உணரலாம். மூலவரின் தீபாராதனையை நந்தி தேவரின் இரு கொம்புகள் வழியே காண்பது சிறந்த பலனை கொடுக்கும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமான் நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே திருநடனம் புரிகின்றார் என்பது ஐதீகம். இத்தகைய தரிசனம் சகல பாவங்களையும் போக்கும். அனைத்து விதமான தோஷங்களையும் நீக்கும்.
The post அனைத்து நலமும் அளிக்கும் பிரதோஷ வழிபாடு appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.