வாழ்வில் வலமும் நலமும் தரும் மலைக்கோட்டை உச்சிபிள்ளையார். 275 அடிஉயரத்தில் உள்ளார். இவரைக்காண 417 படிகளை கடந்து செல்ல வேண்டும்.தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டியில், ஆதிசேஷன் திருக்கயிலாயத்தை தன்னுடலால் இறுகப்பற்றி கொள்ள, வாயுதேவன் ஆவேசங்கொண்டு பெரும்புயலை ஏவினான். வாயுதேவன். பலத்தால், கயிலை மலையின் ஒரு பகுதி மூன்றாகச் சிதறியது, கயிலை மலையின் மூன்று சிதறல்களே, திருக்காளத்தி மலையாகவும், தென் இலங்கையின் திரிகோண மலையாகவும், திருச்சி மலைக்கோட்டையாகவும் அமைந்தன. எனவே, மலைக்கோட்டை ‘தென் கயிலாயம்” என்று போற்றப்படுகிறது.
உச்சிபிள்ளையாரின் திருவிளையாடல்:
ராவணவதம் முடிந்து, பட்டாபிஷேகத்துக்குப் பின், ராமன், தனக்குப் போரில் உதவிய விபூஷணனுக்கு, ரங்கநாதர் சிலையை விமானத்துடன் நினைவுப் பரிசாக வழங்கினான். இந்தச் ரங்கநாதர் திருவடிவம், வழிவழியாக ராமனும், அவன் முன்னோர்களும் வழிபாடு செய்த தனிச்சிறப்பு மிக்கது, அந்த அபுர்வ ரங்கநாதர் சிலையை எடுத்துக் கொண்டு அயோத்தியில் இருந்து இலங்கை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.இடையே, புனிதமான காவிரி கரை புரண்டு ஓடுவதைத் திருச்சி மலைப் பகுதியில் கண்டு, அதில் நீரடா விரும்பினான் விபூஷணன், கையில் இருந்த ரங்கநாதர் சிலையைத் தரையில் வைத்தால், மீண்டும் அதனை எடுக்க முடியாது என்று விபூஷணனிடம், ராமன் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தான். காவிரியில் புனித நீராடவும் வேண்டும், ரங்கநாதர் சிலையைத் தரையில் வைக்கவும் கூடாது. என்ன செய்வதென்று தெரியாமல் விபூஷணன் குழம்பினான். அப்போது திருச்சி உச்சிப்பிள்ளையார் ஓர் அழகான அந்தணச் சிறுவனாக மாயத்தோற்றம் கொண்டு, விபூஷணன் முன் தோன்றினார்.
அச்சிறுவனிடம், ‘இந்த ரங்கநாதர் சிலையையும், விமானத்தையும் தரையில் வைக்காமல் சற்று நேரம் உன் கையிலேயே வைத்திருக்க வேண்டும். காவிரியில் நீராடி விட்டு, திரும்பி வந்து சிலையை மீண்டும் பெற்றுக் கொள்கிறேன். செய்வாயா? என்று வேண்டுகோள் விடுத்தான் விபூஷணன். ஆனால் அந்த மாயச்சிறுவனோ, ‘நான் ரங்க விமானத்தைச் சுமக்கும்போது, என் கையில் வலி ஏற்பட்டால், நான் மூன்று முறை உன்னை அழைப்பேன். மூன்றாம் முறை அழைப்பதற்குள் நீ வந்து ரங்கநாதனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். தவறினால், அதனை இந்தக் காவிரிக் கரையிலேயே தரையில் வைத்து விடுவேன்” என்றான்.
சரி என்று கூறிய விபூஷணன், காவிரியில் புனித நீராடிக் கொண்டிருந்தபோதே, அவசர அவசரமாக மூன்று முறை விபூஷணா என்று அழைத்தான் மாயச்சிறுவன். மூன்றாம் முறை அழைத்தும் விபீஷணன் வராததால், அந்த ரங்கநாதர் சிலை விமானத்தைக் காவிரிக்கரையில், தரையிலேயே வைத்து விட்டான். காவிரியில் புனித நீராடிவிட்டு வந்த விபூஷணன், அந்த ரங்க விமானம், சிலையை எவ்வளவோ முயன்றும், எடுக்க முடியாமல் திண்டாடினான். இதனால் கோபங்கொண்ட விபூஷணன், அந்த மாயச் சிறுவனாம் உச்சிப்பிள்ளையார் தலையில், ஒரு ‘குட்டு” குட்டினான். ஊடனடியாக மாயச் சிறுவனாக வந்த உச்சி பிள்ளையார், தன் சுய வடிவத்தில் விபூஷணனுக்கு காட்சி கொடுத்தார். உச்சிப் பிள்ளையாரை மனம் நெகிழ வழிபட்டான் விபூஷணன். ரங்கநாதனை, ஸ்ரீரங்கத்திலேயே தங்கவைத்திட, திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் நிகழ்த்திய திருவிளையாடல் இது என்று விபூஷணன் அறிந்து கொண்டான். அந்த அபுர்வமான ஸ்ரீரங்கநாதன் திருவடிவத்தையும், ஸ்ரீரங்க விமானத்தையும், ஸ்ரீரங்கத்திலேயே பிரதிஷ்டை செய்தான்.
தாயுமானவர் ஆலயம்:
திருச்சி மலைக்கோட்டையிலுள்ள தாயுமானவர் சன்னிதிக்கு மேலே உச்சிப்பிள்ளையார் கோயில் உள்ளது. திருக்கயிலாய மலை போன்றே திருச்சி மலையும் மூன்று அடுக்குகள் கொண்ட தனிச்சிறப்புமிக்கது. அடிவாரத்தில், மாணிக்க விநாயகர் உட்பட்ட பகுதி முதல் நிலையாகவும், மட்டுவார்குழலி உடனாய தாயுமானவார் ஆலயம் இரண்டாம் நிலையாகவும், கிபி 7-ம் நூற்றாண்டில் கல்லிலே கலை வண்ணம் கண்ட மகேந்திரவர்மப் பல்லவர் அமைத்த குடைவரை ஆலயம், உச்சிப் பிள்ளையார் கோயில் ஆகிய பகுதிகள் மூன்றாம் நிலையாகவும் உள்ளது.பிள்ளையார்பட்டி போன்றே, இங்கும் உச்சிப்பிள்ளையாருக்கு விசேஷ அபிஷேகங்கள், அலங்காரத்துடன் 10 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. விநாயகர் பெருமாள் (உற்சவமூர்த்திக்கு) 28 வாசனை திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நிகழ்வதும் கண்கொள்ளாக் காட்சி ஆகும்.
தொடர்புக்கு :
91-431-2704621
செய்தி: ப.சுஜாதா
படங்கள் : ப.வசந்த்
The post காவிரி ஆற்றங்கரையில் ‘ஸ்ரீ ரங்கநாதரை கையில் சுமந்து நின்ற” உச்சிபிள்ளையார் !! appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.