“இன்று அளவில்லா செல்வத்தை அளிக்கும் “அபரா ஏகாதசி” (20.06.2017)
பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி
ஆனி (ஜேஷ்ட) மாதம் – கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறையில்) வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசியாக கொண்டாடுவர். அபரா ஏகாதசி விரத மகிமையை நாம் இப்போது காண்போம்.
அர்ஜூனன் கிருஷ்ணரிடம் “பகவான்! ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியின் பெயர், அதன் மஹாத்மியம், அன்று ஆராதிக்க வேண்டிய தெய்வம் மற்றும் விரதம் அனுஷ்டிக்கும் விதிமுறை இவற்றை அறிய ஆவலாக இருக்கிறது. தாங்கள் கருணை கூர்ந்து இவற்றைப் பற்றி விவரமாக கூற வேண்டும்.” என்றான்.
ஸ்ரீ கிருஷ்ணர் “பார்த்தா!. ஆனி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை அபரா ஏகாதசி என்று அழைப்பர். ஏனெனில் இவ்ஏகாதசி விரதம் அனைத்து பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லா (அபரா) செல்வத்தையும் வழங்க வல்லதால், இதை அபரா ஏகாதசி என்று அழைப்பர். எவர் ஒருவர் இவ்ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் மக்களிடத்தில் பேரும், புகழும் பெறுவர். அபரா ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் பிரம்ம ஹத்தி தோஷம், பைசாசப் பிறவி, பிறரை நிந்திப்பது ஆகியவற்றால் விளையும் பாபங்கள் நீங்குகிறது. ஸ்திரீ கமனம், பொய் சாட்சி, பொய் பேசுதல், போலி சாஸ்திரங்களை உருவாக்குதல், ஜோதிட சாஸ்திரம் மூலம் பிறரை ஏமாற்றுதல், போலி வைத்தியனாக தொழில் செய்து மக்களை ஏமாற்றுதல் போன்ற பாப கர்மங்களினால் விளையும் பாபங்களும் இவ் அபரா ஏகாதசி விரதத்தின் மஹிமையால் நீங்கப் பெறுகிறது.
க்ஷத்திரிய தர்மத்திற்கு விரோதமாக, போர் புரியாமல் யுத்த களத்திலிருந்து தப்பி ஓடும் க்ஷத்ரியர் நரகத்திற்கு செல்வர் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதத்தின் புண்ணிய பிரபாவம், அத்தகைய க்ஷத்திரியர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலையும், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது.
குருவிடமிருந்து கல்வி கற்றபின், குருவை நிந்தப்பவர் நிச்சயம் நரகத்தை அடைவார் என்பது நம்பிக்கை. அபரா ஏகாதசி விரதம், அத்தகைய குரு நிந்தனை செய்த பாபம் நீக்குவதுடன், ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கும் சக்தி பெற்றது. மூன்று புஷ்கரங்களிலும் நீராடுதல், கார்த்திகை மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல், கங்கை நதி தீரத்தில் பித்ருக்களுக்கு பிண்டதானம் செய்தல் இவற்றால் கிடைக்கப் பெறும் புண்ணியத்தை, அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறலாம்.
குரு பகவான் கோட்சாரத்தில் சிம்ம ராசியில் இருக்கும் காலத்தில் கோமதி நதியில் நீராடுதல், கும்ப ராசியில் இருக்கும் காலத்தில் ஸ்ரீ கேதார்நாத் பகவானை தரிசித்தல் மற்றும் பத்ரிகா ஆஸ்ரமத்தில் தங்குதல், மற்றும் சூரிய, சந்திர கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புண்ணிய நீராடுதல் இவற்றால் கிட்டப் பெறும் புண்ணிய பலனுக்கு நிகரான புண்ணியத்தை அபரா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதன் மூலம் ஒருவர் பெறுவர்.
கஜ(யானை) தானம், அஸ்வம்(குதிரை) தானம், யக்ஞத்தில் ஸ்வர்ண தானம் இவற்றால் கிட்டும் புண்ணியபலனுக்கு இணையான புண்ணிய பலனை அபரா ஏகாதசி விரதத்தின் மூலம் ஒருவர் பெறுவர். கோ(பசு), பூமி, ஸ்வர்ண இவைகளின் தானத்தால் கிடைக்கப்பெறும் புண்ணிய பலனானது, அபரா ஏகாதசி விரத புண்ணிய பலனுக்கு இணையானதாகும். இவ்விரதமானது பாப விருட்சத்தை அழிக்கும் கோடரி போன்றதாகும். பாபவினைகள் சூழந்து இருண்டிருக்கும் உலகத்திற்கு இருட்டை விலக்கி ஒளியை வழங்கும் சூரியனைப் போன்றதாகும்.
அபரா ஏகாதசி விரதம் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதங்களில் அவசியமான ஒன்றாகும். இவ்விரதம் மற்ற விரதங்களை விட சிரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். அபரா ஏகாதசி நாளன்று, பக்தி பூர்வத்துடன் பகவான் மஹாவிஷ்ணுவை ஆராதிக்க வேண்டும். அதனால் இறுதியில் விஷ்ணுலோகப் பிராப்தியை மக்கள் பெறுவர்.
“ஹே ராஜன்!, அபரா ஏகாதசி விரத மஹாத்மிய கதையை இவ்வுலக நன்மைக்காக அருளியுள்ளேன். இதை படிப்பதாலும், கேட்பதாலும் அனைத்து பாபங்களும் நீங்கி புது வாழ்வு பெறுவர்.”
கதாசாரம்: அபரா என்றால் அபாரமான அதாவது அபரிமிதம் என்று அர்த்தம். எவர் ஒருவர் அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவர் பகவான் மஹாவிஷ்ணுவின் அபரிமித கருணைக்கு பாத்திரமாவர். பக்தி மற்றும் சிரத்தையில் வளர்ச்சியையும் காண்பர். பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணர் தருமருக்கு இத்தனை பலன்களையும் எடுத்துரைத்தார். அத்தகைய மகிமை வாய்ந்த அபரா ஏகாதசியை நாம் அனுசரித்து விஷ்ணுவின் திருவடி சேர்வதே நம் வாழ்வின் பலன்
” ஓம் நமோ பகவதே வாசுதேவாய”
“ஸ்ரீ கோவிந்தன் திருவடிகளே சரணம்”
The post பாவங்களை போக்கி வளத்தை அளிக்கும் அபார ஏகாதசி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.