பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவ பாசானத்தால் ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன்சிலை போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது தெரிகிறது. சித்தர் போகர், இறந்தவர்களை பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரம் அறிந்தவர். உலோகங்களை ரசவாதத்தினால் பொன்னாக்கும் வித்தை அறிந்தவர், திருசெங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வர் நவபாசானத்தால் உருவாக்கியவர் போகரே.
அவருடைய பூர்வீகம் சீன நாடு. தாய் தந்தையர் சலவைத் தொழிலாளிகள் என்றும் வரலாற்றில் காணலாம். எதனால் அப்படி குறிப்பிட்டு இருக்கிறார்கள் என்றால் அவர் எழுதியுள்ள தமிழ் மொழியில் எழுதியிருப்பதை விட சீன மொழியில் எழுதி இருப்பது அதிகம், போகர் எப்படி சித்தர் ஆனார் என்பதைப் பார்ப்போம். மேருமலையில் சுற்றி போகர் வந்து கொண்டு இருந்தபோது ஒன்பது சித்தர்கள் ஐயக்கியமாகி இருந்த இடம் கண்ணில் பட்டது, அவர் மனதில் ஏதோ தோன்ற அந்த சமாதிகளின் முன்பு அன்ன ஆகாரமின்றி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்தி தவம் இருந்தார், சில காலம் கழித்து சமாதியில் இருந்து 9 சித்தர்களும் அவருக்கு தரிசனம் கொடுத்து இறந்தவர்களை பிழைக்க வைக்கும் காயகல்ப முறையை உபதேசம் செய்தார்கள். இந்த சஞ்சீவி மந்திரத்தை யாரால் மக்களுக்கு நன்மை கிடைக்குமோ அவர்களுக்கு மட்டுமே உபதேசம் செய் என்று கூறி மீண்டும் சமாதியில் ஐயக்கிமாகிவிட்டார்கள். பின் போகர் அங்கிருந்து கிளம்பி சிவலிங்கம் உள்ள தலங்களை தரிசித்து வந்துகொண்டிருந்தார்.
அடர்ந்த காட்டை கடந்து வரும்போது ஒரு புற்று கண்ணில் பட்டது புற்றின் அருகே சென்றபோது மூச்சுக் காற்று வருவதை உணர்ந்தார். புற்றின் முன்னே ஏன், எதற்கு என்று அறியாமலேயே மனத்தின் கட்டளைப்படி தியானத்தில் அமர்ந்தார். பல நாட்கள் தியான நிலையிலேயே அமர்ந்து இருந்தார். ஒருநாள் காலை பொழுதில் புற்றை உடைத்துக் கொண்டு ஒரு முனிவர் வந்து போகரின் தியானத்தை கலைத்தார். கண்களை கூசச் செய்யும் பிரகாசமான முகத்தையுடைய அந்த முனிவரைப் பார்த்ததும் போகர் வணங்கினார். அந்த முனிவர் ” போகரே உன்னால் மக்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறி அருகே இருந்த மரத்தை காட்டி மரத்திலுள்ள பழங்கள் பழுத்து குலுங்கி இருந்த நிலையைக் காட்டி அந்த பழத்தை சாப்பிட்டால் பசி என்பதே அணுகாது. நீ செய்யும் தவத்திற்கு பெரும்துணையாக இருக்கும் என்று கூறி பேசும்சிலை ஒன்றையும் கொடுத்து விட்டு மீண்டும் புற்றில் அமர்ந்து தியானத்தில் அமர்ந்தார்.
சிலையை கையில் வாங்கிக் கொண்ட போகர் அருகிலுள்ள முனிவர் காட்டிய மரத்தின் பழங்களை எடுத்து சாப்பிட்டார். மனம் மட்டுமல்ல, உடலும் இளமையாக மாறியது. கையில் இருந்த சிலை, இளமையான மாற்ற வைத்த பழத்தின் ரகசியத்தையும், மற்றும பல மூலிகைகளின் ரகசியத்தையும் கூறியது, ஆச்சிரயத்தில் ஆழ்ந்த போகர், சிலையை தரையில் வைத்து விட்டு அருகே அமர்ந்தார், அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு பள்ளத்தில் அந்த சிலை மறைந்தது. சிவன் சித்தத்தை தெளியவைத்தார், என்று நினைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார். அவர் பெரிய சித்தர் என்பதை அறியாமல் எதிரில் வந்த அந்தனர்கள் சிலர் போகரின்கோலத்தைக் கண்டு ஏளனம் செய்தனர், போகரோ அவர்களின் ஏழ்மையை போக்க எண்ணினார், ஞானத்தை உபதேசிக்க வேண்டும் என்று நினைத்தார், உடனே சற்று தூரத்தில் ஒரு பூனை ஒன்று கண்ணில் பட்டது, பூனை அருகே அமர்ந்து வேதத்தை அதன் காதில் ஓதி, பேசும் திறனை கொடுத்தார்.
பூனை வேத மந்திரங்களை வீதியில் அமர்ந்து கூறத் தொடங்கியது. இதைப் பார்த்த அந்தணர்கள் போகர் பித்தனல்ல. சித்தர் என்பதை புரிந்து கொண்டு எங்களை மன்னிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போகரை தங்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர், அவருக்கு அன்னமிட்டு மகிழ்வித்தனர். மனதில் சந்தோசத்துடன் அவர்கள் வீடுகளில் இருந்த உலோக பொருட்களை ரசவாதத்தினால் தங்கமாக மாற்றினார், அந்தணர்கள் சித்தரின் திறன் கண்டு அதிசயத்தினர். வேதங்களை உபதேசித்து எல்லோரையும் மேன்மையுறச் செய்தார். பழனிமலையில் தவம் செய்யும் போது முருகப் பெருமான் அவருக்கு காட்சி கொடுத்து என்னை விக்ரமாக செய்து இந்த இடத்தில் பிரதிஸ்டை செய் என்று கூறி மறைந்தார். அதன் படி நவபாசானம் என்ற ஒன்பது வித மூலிகை கலவையால் முருகனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். அதன் பின் பழனி மலையிலேயே வாழ்ந்த சித்தர் அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இன்றும பழனிமலையில் உள்ள கோவிலின் உட்பிரகாரத்தின்தென்மேற்கு மூலையில் சித்தர் போகரின் ஜீவசமாதி உள்ளது. நவக்கிரகங்களில் செவ்வாய் பகவானின்ஆதிக்கம் நிரம்ப பெற்றவர் சித்தர் போகர், செவ்வாய் தோசம் உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் இவரை வழிபட்டால் செவ்வாய் தோசம் நீங்கி நல்அருள் பெறுவர். திருமுறைகளில் வாழ்வியல் இந்த உடம்பும் உலக வாழ்வும் நிலையில்லாதன என்பதை யாவரும் அறிவோம். பலப்பல நூல்களும் இதைச் சொல்கின்றன. பத்தாவது தமிழ்வேதமாகிய திருமந்திரமும் யாக்கை நிலையாமையைப் பற்றி கூறுகின்றது,
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பிணமென்று பேரிட்டு சூரையங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே. திருமந்திரம் நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும் இறைவர் நமக்கு அளித்துள்ளார் என்றால், அதில் ஒரு நோக்கம் கட்டாயம் இருக்கும், இறைவருடைய செயல் நமக்கு எப்பொழுதும் நன்மையையே அளிக்கும், நிலையில்லா இந்த உடம்பையும் உலகையும்பயன்படுத்தி நிலையான புண்ணியங்களை பெற்றிட வேண்டும். புண்ணியத்தின் பயனாக ஆன்மாக்கள் மேல் நிலை அடையும், இன்று கொல் அன்று கொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். இறப்பு இன்றுவரும் நாளைவரும் என்று எண்ணி இருக்க வேண்டாம், எமன் பின்புறத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார், என்று நினைத்துத் தீய செயல்களை விட்டு விலக வேண்டும், அவரவர் தகுதிக்கு ஏற்ப மாண்புடைய சான்றோர் போற்றிய தருமங்களை செய்ய வேண்டும். குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்து இருமி ஏங்கி நுரைத் தேறி – வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. ஐடிகள் காடவர்கோன் திருமுறை 11
கோழை (சளி) தொண்டையில் மிகுதியாகி அடைத்து வாய்வழியே வந்து உயிர் உடலைவிட்டு பிரிவதன் முன் திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபொருமானாரை வழிபட்டு சிவபுண்ணியத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார் நாயனார், நிலையில்லா
இந்த உடலைப் பெற்ற நாம்வாழும்வழி:
எப்போதும் புண்ணியங்களையே செய்தல்வேண்டும்
பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்
நல்லவர்களுடன் மட்டுமே சேர வேண்டும்
நல்லவர் அல்லாதவர்களுடன்ஒருபோதும் சேரக்கூடாது
அகந்தை இன்றி இருக்க வேண்டும்
ஆடம்பரமின்றி இருத்தல் வேண்டும்
இரவில் சுற்றுவதும் பகலில் தூங்குவதும் கூடாது
ஐம்புலங்களையும் கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும்
அதிக உணவு உட்கொள்ளல் உண்ணாமல் இருத்தல் கூடாது
கொலை,களவு கெட்ட பழக்கவழக்கங்கள் செய்யாதிருக்க வேண்டும்
தற்புகழ்ச்சி கூடாது பிறரை நிந்தித்தல் கூடாது
கிடைத்ததைக் கொண்டு மன நிறைவுடன் வாழ வேண்டும்
தமிழ் வேதங்கள் அன்றாடம் ஓதுதல் வேண்டும்
பிறருக்கு நன்மை தரக்கூடியதையே செய்தல் , பேசுதல் வேண்டும்
எந்த உயிருக்கும் தீமை செய்யாதிருக்க வேண்டும்
எல்லோரிடமும் எளிமையாக பழகுதல் வேண்டும்
இனிமையாக பேச வேண்டும்
உண்மையையே பேச வேண்டும்
ஏழைகளுக்கு உதவ வேண்டும்
வரும் துன்பங்களை நம் வினையால் வந்தவை என்று தாங்கிக் கொள்ள வேண்டும்
பிறரிடம் உள்ள நல்லனவற்றை மட்டுமே பார்க்க வேண்டும்
யாரைக் கண்டும் பொறாமைப் படாமலிருக்க வேண்டும்
பிறருக்கு தானம் கொடுக்கும் பொழுது , கர்வம் இல்லாமல் கொடுக்க வேண்டும்
அன்னையை தெய்வமாக போற்ற வேண்டும், தந்தைத் தெய்வமாக போற்ற வேண்டும்
குருஅல்லது ஆசிரியரை தெய்வமாக போற்ற வேண்டும்
வீட்டிற்கு வரும் புதியவரை (எளியவர்) தெய்வமாக போற்ற வேண்டும்
சிவ நாமத்தை( சிவாயநம) எப்போதும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்
ஆவை அனைத்தும் தமிழ் வேதங்களில் ஆங்காங்கே கூறப்படும் கருத்துக்கள்
அழியும் இவ்வுடம்பைக் கொண்டு அழியாத -உடன் வரும் புண்ணியங்களைச் செய்து
பலப்பல நன்மைகளையும் இனி பிறா நிலையும் வீடு பேறும் அடையலாம்.
சிந்தனைக்கு சில
பிற உயிர்கட்குத் தீமை செய்வது என்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் தீமையாகும்
நம்முடைய விதியை நிர்ணயிப்பது நம்முடைய செயல்களே ஆகும்
அறிவுடையவன்தீய செயல்களிலிருந்து விலகுவான்.
நம்வீட்டில் அயலர், ஆதரவு அற்றவர், ஏழை உறவினர், இப்படி யாராவது உணவு உண்டு பசியாற வேண்டும். இதனால் நாம் அடையும் நன்மைகள் பலவாகும். கூட்டு வழிபாடு என்பது, அன்றாடம் நீராடுவது போன்றதாகும், இதயத்தில் தூய்மை இல்லாதவன் இறைவரை நெருங்கவே முடியாது.
பொய், பொறாமை, சூது புறங்கூறுதல், கஞ்சத்தனம், பேராசை, ஆகிய வேண்டாக் குணங்கள் இறைவழிபாட்டினால்மட்டுமே போக்கலாம்.
நற்குணங்கள் நிறையப்பெற்ற சான்றோர்களுக்கு செய்த சிறிய உபகாரமும் பெரும் பயன் தரும்.
தீயவர்களுக்கு செய்த பெரிய உபகாரமும் தீமையையே உண்டாக்கும். புல்லும் மாடு தின்றால் பாலாகும், பாம்பு குடித்தால் பாலும் விசமாகும்,
இரக்கம் உடையவராய் இருக்கலாம், ஆனால் ஏமாளியாய் இருக்கக்கூடாது, சந்தேகம் சந்தோசத்தைக் கெடுக்கும்.
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.
பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுர கிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.
தியானச்செய்யுள்
—————————
சிவிகை ஏந்தி, சிரம் தாழ்த்தும் சித்தர் பெருமக்களுக்கு;
மூலிகை மேனியாய் பேரருள் புரியும் போகர் பெருமானே;
சிவபாலனுக்கு சீவன் தந்த சித்த ஒளியே;
நவபாசாணத்து நாயகனே உங்கள் அருள் காக்க காக்க…
மகா போகர் சித்தர் பூசை முறைகள்:
———————————————————
தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன்மேல் ஸ்ரீ மகா போகர் சித்தர் படத்தை வைத்து அதன்முன் மஞ்சள், குங்குமம் இட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காகக் குறிப்பட பட்டிருக்கும் தியானச் செய்யுளைக் கண்மூடி மனமுருகக் கூறி ஜாதி புஷ்பம், சாமந்திப்பூ, அல்லது சம்பங்கிப்பூ, கதிர்பச்சை கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பதினாறு போற்றிகள்
———————————
- முருகனைக் குருவாகக் கொண்டவரே போற்றி!
- சித்த வைத்தியத்தின் மூலவரே போற்றி!
- மகா முனிவர்களால் பூஜிக்கப்படுவரே போற்றி!
- ப்ரணவ ள்வரூபமாக இருப்பவரே போற்றி!
- மயில் வாகனனை தரிசனம் செய்தவரே போற்றி!
- மலைகளில் சஞ்சரிப்பவரே போற்றி!
- மூலிகை, புஷ்பங்களால் அர்ச்சிக்கப்படுபவரே போற்றி!
- ஆம், ஊம் என்ற பீஜக்ஷரங்களில் வசிப்பவரே போற்றி!
- பசும்பால் பிரியரே போற்றி!
- நவபாஷாணம் அறிந்தவரே போற்றி!
- ப்ரணவத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
- நாக தேவதைகளால் பூஜிக்கப்படுபவரே போற்றி!
- உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி!
- கிரிவலத்தில் பிரியமுள்ளவரே போற்றி!
- சூட்சுமமாக சஞ்சரிப்பவரே போற்றி!
- முருகனை தரிசனம் செய்த ஸ்ரீ மகாபோகர் சித்தர் சுவாமிகளே போற்றி! போற்றி!
இவ்வாறு பதினாறு போற்றிகளிஅயும் கூறி அர்ச்சித்த பிறகு மூல மந்திரமான “ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகா போகர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை செபிக்க வேண்டும். பின்பு நிவேதனமாக பால் பழம் தண்ணீர் வைத்து உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீப ஆராதனை செய்யவும்.
ஸ்ரீ போகரின் பூசை முறைகள்
———————————————–
இவர் நவக்கிரகத்தில் செவ்வாய் கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷத்தினால் நிலத்தகராறும், சகோதர சகோதரிகளுக்குள் உட்பூசல்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஸ்ரீ மகா போகர் பழனி தண்டாயுதபாணியை நவ பாஷானத்தால் உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர். இவரை வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் அருள் கிடைத்து கீழ்கண்ட பலன்கள் கிடைக்கும்.
- நிலத்தகராறு, சொத்து தகராறு, வழக்குகள் இவற்றின் பிரச்சினைகள் தீர்ந்து வெற்றி கிடைக்கும்.
- சொந்த வீடு, நிலம் இல்லாதவர்களுக்கு அவை கிட்டும்.
- அடுக்குமாடிக் கட்டிடங்கள், ரியல் எஸ்டேட் வியாபாரிகளுக்கு ஏற்படும் தடைகள் அகன்று வியாபாரம் பெருகும்.
- கட்டிடப் பொருட்கள் வியாபாரிகள், கிரானைட் ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களின் தொழில் தடை நீங்கி அதிக லாபம் கிடைக்கும்.
- செவ்வாய் தோஷத்தினால் திருமணம் ஆகாமல் இருந்தால், திருமணத் தடை நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடக்கும்.
- பழனி தண்டாயுதபாணியின் அருள் கிடைத்து உடம்பில் உள்ள இரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் அகலும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
- அரசியலில் பெரும் வெற்றி கிடைக்கும்.
- இவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து அவருக்கு செவ்வரளி புஷ்பங்களால் பூஜை செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
The post போகர் சித்தர் ஆன கதையும், போகரின் பூஜை முறைகளும் appeared first on SWASTHIKTV.COM.