விழுப்புரம் அடுத்த ஓரே நேர்க்கோட்டில் மூன்று இலட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது சிங்கர்குடி, பூவரசன்குப்பம், பரிக்கல் உள்ள நரசிம்மர் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஆதிராஜ மங்கலபுரம் எனும் பழம் பெயருடைய திருவதிகை, திரிபுர அசுரர்களை சிவபெருமான் தகனம் செய்த இடமாக போற்றப்படுகிறது.
தங்கம் வெள்ளி, இரும்பாலான கோட்டைகளை அமைத்து மூன்று புரங்களிலும் ஆண்டு வந்த தாரகாட்சன், கமலாட்சன்,வித்யுமன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் இமையோர்களைத் துன்புறுத்தி வாழ்ந்து வந்தனர். மூன்று அசுரர்களையும் அவர்கள் முப்புரக் கோட்டைகளையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கினார்.இத்திரிபுர தகனத்திற்கு திருமால் அம்பாக இருந்து உதவினார் என்கிறது திருவதிகைப்புராணம்.இம்மூன்று அசுரர்களுக்கும் தளபதியாக இருந்த பரிகலாசூரன் மனித உடலும் குதிரை முகத்தையும் கொண்டவன். திரிபுர தகன நிகழ்ச்சியின் போது தப்பித்துச் சென்ற இவ்வசுரன் பஞ்ச கிருஷ்ணாரண்யங்களில் ஓன்றான திருமுதுகுன்றம் (விருத்தாசல்) பகுதிக்குள் மறைந்து கொண்டான்.
இப்பகுதியை திருமால் பக்தனான வசந்தராஜன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். பரிக்கல் பகுதியும் இம்மன்னின் ஆட்சிக்குட்பட்டிருந்தது.நரசிம்ம மூர்த்தியின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த வசந்தராஜன் தன் படைகளின் ஓரு பிரிவினை நிறுத்தி வைத்திருந்த பரிக்கல் பகுதியில் நரசிம்மருக்கு திருக்கோயில் எழுப்புவதென்று முடிவு செய்து அதற்கான திருப்பணிகளை தொடங்கினான்.
இத்தருணம் பார்த்து பரிகலாசூரன் தன் மாயப் படைகளுடன் வந்து பரிக்கல் பகுதியைத் தாக்கி அழிக்கிறான். மன்னின் குதிரைப்படைகளும் கோயிலும் தாக்கி அழிக்கப்படுகின்றன. இச்சமயத்தில் மன்னனின் பெற்றோர்கள் மரணமடைகின்றனர். இதைப் பெரியதொரு அபசகுனமாகக் கருதிய மன்னன் அனைத்துப் பணிகளையும் நிறுத்தி வைத்து சில காலங்கள் கழிதது மறுபடியும் நரசிம்மர் கோயிலுக்கான திருப்பணியைர் தொடங்கபோகும் சமயத்தில் தன்னுடைய ராஜகுருவான வாம தேவரிடம் உத்திரவும் அதற்குண்டான ஆலோசனைகளையும் கேட்டான்.
முன் கோயில் எழுப்புவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடமும், கோயில் திருப்பணி தொடங்கிய நாளும், கோளும் சாத்திர முறையும் தவறானவை என்று எடுத்துரைத்த வாமதேவ முனிவர் வேறொரு இடத்தைத் தேர்வு செய்து, கோயில் எழுப்ப வேண்டிய சாத்திர நெறிமுறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.மேலும் கோயில் திருப்பணி தொடங்குவதற்கு முன் மாபெரும் யாகம் ஓன்றை நடத்த வேண்டும் என அறிவுரை கூறி மூன்று நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து யாகம் நடத்த ஏற்பாடு செய்தார்.பரிகலாசூரனின் மாய வல்லமைகளை அறிந்த வாமதேவர் அவ்வசுரனால் யாகத்திற்கு இடையூறு ஏற்படாதிருக்கக் கங்கணம் ஓன்றைத் தயாரித்து அதை பூஜையில் வைத்து வசந்தராஜன் கையில் அணிவித்தார்.
முனிவர்களுடன் அமர்ந்து வாமதேவர் யாகம் நடத்த தொடங்கும் முன்பு வசந்தராஜன் தனித்திருந்து யாகம் செய்ய வேண்டியிருந்ததால் அரசரின் பாதுகாப்புக் கருதி அராக்ஷ்ர அமிர்தராக்ஷ்ர என்ற மந்திரத்தை வசந்தராஜனுக்கு போதித்து யாகம் நடைபெறும் இடத்திலிருந்து கூப்பிடும் தூரத்தே இருந்த புதருக்குள் மன்னனை அமர வைத்தார்.யாகத்தின்போது தனியாக இருந்து உச்சரிக்க வேண்டிய மந்திரங்களை இடையில் நிறுத்திவிடக்கூடாது என்பதற்காக ஓரே நினைவில் மனதை நிலை நிறுத்தி மந்திரத்தைக் கூறிக் கொண்டிருக்க அசம் பிரக்ஞம் என்ற ஞானநிலையை அரசனுக்கு போதித்தார்.யாகம் தொடங்கிய சில கணங்களில் தம் மாயப் படைகளுடன் அங்கு வந்த பரிகலாசூரன் வாமதேவரை நோக்கி தானே கடவுள் என்றும், என்னைத் துதித்து யாகம் மகிழ்ந்து இவ்விடம் விட்டு அகலுவேன் இல்லையேல் அனைத்தையும் அழிப்பேன் என்று பயமுறுத்தினான்.
நரசிங்கப் பெருமானே முழு முதற்கடவுள் என்றும் அப்பெருமானின் திருவடி தொழுது நின்றால் உமக்கு சாபவிமோசனம் உண்டு என்றும், அப்படித் தவிர்த்து இந்த யாகத்திற்கு இடையூறு விளைவித்தால் உனக்கு அழிவு நிச்சயம் என்றும் வாமதேவ முனிவர் பதிலுரைக்க கடுங்கோபம் கொண்ட பரிகலாசூரன் முனிவர்களையெல்லாம் தாக்கி யாகத்தைச் சிதைக்க ஆரம்பித்தான். யாகத்திற்கு வருகை புரிந்திருந்த நட்பு நாட்டரசர்களெல்லாம் துரத்தியடிக்கப்பட்டனர்.குதிரை முகமும், மனித உடலும் கொண்ட இவ்வரசன் வானத்தில் பறக்கு சக்தி பெற்றவனாதலின் அவனை எவராலும் ஓன்றும் செய்ய இயலவில்லை. மேலும் விண்ணிலும் மண்ணிலும் உயிர் பிரியதிருக்க பிரம்மனால் வரம் பெற்றவன் இவன்.
யாகசாலையும், அங்கு வைக்கப்பட்டிருந்த மங்கலப் பொருள்களையும் காலால் இடறி நாசம் விளைவித்தான். வசந்தராஜனைத் தேடினான். எங்கும் தென்படாததால் கடுங்கோபமுற்று இருக்கும் தருணத்தில் வசந்தராஜனால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மந்திர ஓலி மட்டும் இவ்வசுரனுக்குக் கேட்க, அந்த ஓலி வந்த திசையறிந்து சென்று புதரை அடைந்தான்.புதரை அழித்துப் பார்க்கையில் வசந்தராஜன் சமாதி நிலையில் கடுந்தவம் புரிவதைக் கண்டு தாக்கத் தொடங்கினான். அரசன் எதற்கும் அசைந்து கொடுக்காதது கண்டு தன் முழு பலத்துடன் பல்வகையாலும் தாக்கித் துன்புறுத்தித் தானே சோர்ந்து போகும் நிலையில் இறுதியாக தனக்கு ஆபத்து வரும் காலங்களில் பிரயோகிப்பதற்காக வைத்திருந்த சக்திபெற்ற கோடரி ஓன்றினை வரவழைத்து, அக்கோடரியால் வசந்தராஜனின் தலையைப் பிளக்கிறான். அவ்வாறு பிளந்த தலையிலிருந்து உக்கிரம் கலந்த கோபக்கனல் பறக்க ஸ்ரீ நரசிங்கப்பெருமான் தோன்றி எதிர்நின்ற பரிகலாசூரனின் உடலை இரண்டாகப் பிளத்தெறிந்தார்.
நரசிம்மப் பெருமானின் திருவருளால் வசந்தராஜன் உயிர்ப்பித்தெழுந்தான். வசந்தராஜன் நரசிங்கப் பெருமானின் அகோர விசுவரூபத்தைத் தரிசித்த மகிழ்ந்தான்.பக்தர்களின் குறையகற்றும் எம்பிரானேன இந்த அடியோனை திருவருள் கொண்டு ஆதரித்தீர். இது இந்த எளியேன் பெற்ற மிகப் பெரும் பாக்கியம். என்னோடு யாகத்தில் உடுபட்ட என் குருநாதர் வாமதேவ மாமுனிவரையும், மற்ற முனிவர் பெருமக்களையும் உயிர்த் தெழச் செய்து அருள்புரிய வேண்டும். மேலாக அடியவர்களின் மனங்களைக் கலங்கச் செய்யும் இந்த கோப உக்கிரம் பொதிந்த திருவுருவத்தை மக்கள் துதிப்பதும், ஆராதிப்பதும் அரியதாகிவிடும் இன்முகம் காட்டும் சாந்த சொரூபராக என் அன்னை திருமகளோடு எழுந்தருள வேண்டுகிறேன். என்று வசந்தராஜன் விழுந்து வணங்க ஸ்ரீ சிங்கப் பிரான் சாந்த சொரூபராக மாற்றம் கொண்டு ஸ்ரீ இலட்சுமி நரசிம்மராகக் காட்சியளித்தார். வாமதேவரும் மற்ற முனிவர் பெருமக்களும் உயிர் பெற்றெழுந்து அக்காட்சியைக் கண்டு தொழுதனர்.மேலும் பரிகலாசூரனின் வரவாலேயே எனக்கு இந்தப் பாக்கியம் கிடைத்தது. எனவே இந்தப் பரிகலாசூரனின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பெற்று விளங்க அருள்புரிய வேண்டும் என வசந்தராஜன் வேண்ட ஸ்ரீ இலட்சமி நரசிம்மமூர்த்தி அவ்வாறே அருள்புரிந்தார்.
எனவே இவ்வூர் பரிகலபுரம் என்று பெயர் பெற்றது. அஸ்பாஷாணபுரம் என்று சமஸ்கிருதத்தில் ஓரு பெயர் இருந்ததாகவும் செவிவழிச் செய்தியால் அறிய முடிகிறது. அஸ்வம் = குதிரை, பாஷாணம் = கல், என்று இதற்கு பொருள் கூறுகின்றனர். பரிகலாசூரனை வதைத்த இம் இதுவாதலால் பரிகலபுரம் என வழங்கி வந்து இன்று பரிக்கல் என மருவியுள்ளதாகக் கொள்ளலாம். இக்கோயில் உற்சவமூர்த்தி திருவுருவச் சிலையின் அடிப்பாகத்தில் பரிகல ஸ்ரீ என்று பொறிக்கப் பெற்றிருப்பதும் இதற்குச் சான்று பகர்வதாய் உள்ளது.
சிறப்புகள்:-
பரிக்கல் சிங்க பிரான் முக்குணங்களுக்கு எதிரியானவர். ரொணம், ரோகம், சத்ரு என்று கூறப்படும் முக்குணங்களும் இவரின் பார்வைப்பட்டால் தவிடு பொடியாகிவிடும். இது அனைத்து தரப்பு மக்களும் அறிந்து வைத்திருக்கின்ற உண்மையாகும்.
முக்குணங்களைப் போக்கும் பிரார்த்தனை மூர்த்தியாக விளங்கும் நரசிம்ம பெருமானிடம் நாம் துன்பங்களைக் கூறி விரதமிருந்து ஈர ஆடையுடன் அஷ்டாச்சர மந்திரத்தை உச்சரித்து 48 முறை பிரதட்சணம் (48 முறை கோயிலை வலம் வருதல்) செய்பவருக்கு பெருமானிடம் கேட்டது கிடைக்கும் என்பது இப்பிரார்த்தனைத் தலத்திற்குரிய தனி மகத்துவமாகும்.பெருமானின் திருவருளைப் பெறுவதற்கு நாம் கூறும் அஷ்டாச்சரம் எனப்படும் எட்டெழுத்து மந்திரம் “ஒம் நமோ நாராயணாய” என்பதாகும்.
அட்டநரசிம்மர் திருத்தலங்கள்:-
சிங்கர்கோவில்,பூவரசன்குப்பம்,பரிக்கல்,அந்திலி,சோளிங்கபுரம்,சிங்கபெருமாள்கோவில்,நாமக்கல்,சிந்தலவாடி
அமைவிடம் : விழுப்புரத்திலிருந்து 22வது கி.மீட்டரில் பரிக்கல் உள்ளது. தற்போது 5 நிலை இராஜகோபுரம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது.
தொடர்புக்கு :
இ.ஒ முத்துலட்சுமி.- 9944238917
சுந்தரவரதன் பட்டர் – 9444648309
பரிக்கல் கோபி : 8056880658
படமும் செய்தியும்
ப.பரசுராமன்.
The post பரிகலாசூரனின் பெயரால் தலம் அமைக்க அருள்புரிந்த இலட்சுமி நரசிம்மர் appeared first on SWASTHIKTV.COM.