Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

சந்தனம் எறிந்தால் சகலமும் தீர்க்கும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஷ்வரர் !

$
0
0

     கோயம்புத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்துள்ள ஆணைமலை தொடர்களில் ஒன்றான திருமூர்த்தி மலையில் தோனி ஆற்றங்கரையில் மும்மூர்த்திகளாக சிவன் அமணலிங்கேஷ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சந்தனம் எறிந்தால் சகல பிரச்சனைகளும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.சிவனுக்கு மும்மூர்த்தி ஆண்டவர், திருமூர்த்தி ஆண்டவர், அமணலிங்ககேஸ்வரர் என்ற திருநாமங்கள் உள்ளன. அத்திரி மகரிஷியின் மனைவி அம்மணமாக வந்து மும்மூர்த்திகளுக்கு உணவு அளித்த தலமாதலால் இத்தல இறைவன் அமண லிங்கேஸ்வரர் ஆவனார். சந்தன வழிபாடு என்பது இங்கு சிறப்பு.

  இங்குள்ள மும்மூர்த்திகளுக்கு பக்தர்கள் சந்தனத்தை வாங்கி அவர்கள் மீது எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி சந்தனம் எறியும் போது மும்மூர்த்திகளின் நெற்றியில் சந்தனம் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது ஐதீகம். இங்கு சிவன் ஞான குருவாக விளங்குகிறார். எனவே இங்கு தட்சிணாமூர்த்தி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்திரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக கூறப்படுகிறது.

   இங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் தான் மும்மூர்த்திகளும் வந்து தங்கியதாகக் கூறப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் குழந்தையாக விளையாடிய போது அருகிலுள்ள கஞ்ச மலையிலிருந்த கல் ஒன்று உருண்டு வந்தது. அப்போது பட்டாரசி, தேவகன்னி, பத்மகன்னி, சிந்துகன்னி என்ற சப்த கன்னியர் ஏழு விரளி மஞ்சளை வைத்து, உருண்டு வந்த கல்லைத் தடுத்து நிறுத்தி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் காப்பாற்றினார்.அப்படி உருண்டு வந்த கல்லிலேயே மும்மூர்த்திகள் ஐக்கியமாகி விட்டனர். தடுத்து நிறுத்திய விரளி மஞ்சளிலேயே சப்த கன்னியர் ஐக்கியமாகி விட்டனர். இங்கு இந்தச் சப்த கன்னியருக்கு தனி சன்னதி உண்டு.

 

  அமணன் என்றால் குற்றமற்றவன் என்பது பொருள் குற்றங்களில் இருந்து நீங்கிய இறைவனே அமணலிங்கம். அமணலிங்கம் என்றால் அழகிய லிங்கம் என்றும் பொருள்.வடக்கு நோக்கி லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள ஒரு பாறைதான் அமணலிங்ககேஸ்வரர் இந்தப் பாறையில் மும்மூர்த்திகளின் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.பாறையைக் குடைந்து கருவறை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மன், சிவன், விஷ்ணு உற்சவ மூர்த்திகளாக கருவறையில் காட்சி தருகின்றனர்.நீரினால் சூழப்பட்டுள்ள அமணலிங்கத்தைச் சுற்றி வருகையில் கன்னிமார்களை வணங்கவும்.இங்கு விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நவக்கிர சன்னிதிகளும் உள்ளன. அமணலிங்ககேஸ்வரர் கோயிலின் முன்புள்ள முப்பதடி உயரமுள்ள தீபகம்பம் சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.கம்பத்தின் அடிப்பாகத்தில் அட்டதிருக்குகளை நோக்கியவாறு பத்ரகாளி வனதுர்க்கா தேவி, விசாலாட்சி, ஊர்த்துவ தாண்டவர், அகோர வீரபத்திரர், ராமாவதாரம், நரசிம்ம அவதாரம், வேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

தல வரலாறு:

  எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தைப் பொதியமலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூர்த்தி மலை.

    கைலாயத்தில் நடந்த இறைவனின் திருமண கோலத்தை குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்” என வழங்கப்படுகிறது. கைலயாக் காட்சியை இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் தென் கைலாயம் என்றும் சிறப்பு பெறுகிறது. மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்திரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசூயையின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பிய பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினார்.

   ஒரு முறை அத்திரி மகரிஷி வெளியே சென்ற போது மும்மூர்த்திகளும் அனுசூயை தேடி வந்த தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசூயையும் தன் கணவனை மனதால் நினைத்து தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

பிரார்த்தனை:

     குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் நீராடி சப்த கன்னிமார்களை வழிபட்டு பின் மும்மூர்த்திகளை வழிபட்டால் குழந்தை நிச்சயம் என்பது ஐதீகம். இது தவிர முகம் மற்றும் உடலில் மரு உள்ளவர்கள் இங்குள்ள தோணி ஆற்றில் நீராடி பின் அதில் உப்பு, மிளகு வாங்கி போட்டால் மரு நீங்கி விடும்.

நேர்த்திக்கடன்:

   குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள விநாயகர் கோயில் முன் உள்ள வரடிகல் என்ற கல்லின் அமர்ந்து அந்த கல்லின் மீது தேங்காய் , பழம் வைத்து அந்த கல்லை இரு கைகயால் பிடித்து மனம் ஒன்றி வழிபட வேண்டும். அப்படி செய்யும் போது அந்த தேங்காய் பழத்தை அவர்கள் அறியாமல் தொட்டுவிட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் என கூறப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள், இளைஞர்களின் சிறந்த படிப்பு, வேலை, மன நிம்மதி வேண்டுபவர்கள் இறைவனுக்கு தேங்காய், பழம் வைத்து வழிபட்டால் சிறந்த பலன் உண்டு என்பது நம்பிக்கை.

அமைவிடம் :

                கோவை – திருப்பூரில் இருந்து பஸ் வசதி உள்ளது.

தொடர்புக்கு:

                04252 – 265440

செய்தி : ப.சுஜாதா

படங்கள் : வசந்த்

The post சந்தனம் எறிந்தால் சகலமும் தீர்க்கும் திருமூர்த்தி மலை அமணலிங்கேஷ்வரர் ! appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>