திருவண்ணாமலை மாவட்டம், தென்மகாதேவமங்கலம் என்னும் பர்வதமலையில் மல்லிகார்ஜுனா என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார். இவரை பவுர்ணமி அன்று வழிபட்டால் தீராத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தலவரலாறு:
அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து பறந்து சென்றபோது கீழே விழுந்த ஒரு பகுதியே இந்த மலை என்பதால் சஞ்சீவி பருவதமலை என்றும் தென்மகாதேவமங்கலம் அழைக்கப்படுகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த மலை பருவதமலை. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோயில் உள்ளது. இம்மலை சுமார் 4560 அடி உயரம் உள்ளது. மலை ஏறி செல்லும்போது மேகங்கள் நம்மீது தவழ்ந்து செல்லும். 700 அடி உயரம் உள்ள செங்குத்தான கடப்பாரை படி, ஏணிப்படி, ஆகாயப்படி உள்ள அதிசய மலையாகும். சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். பலருக்கு காட்சியும் கொடுத்துள்ளார்கள். இந்த மலையில் பல்வேறு மூலிகைகளும் நடுவில் துளையில்லாத கல்மூங்கில் மரமும், மூன்று இதழ்கள் கொண்ட பிரமாண்ட வில்வ மரங்களும் உள்ளன. இந்த மலையின் உச்சியில் பல நூற்றாண்டுகளை கடந்த பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை உடனமர் மல்கார்ஜுன திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் நந்தியாகவும் லிங்கமாகவும், திரிசூலமாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
பூர்வீகத்தில் சிலதா முனிவருக்கு மகனாக அவதரித்தவர் நந்தியம் பெருமான். அவர் பர்வதர் என்ற பெயர் கொண்டு தன்னுள் எப்பொழுதும் இறைவன் உறைந்து இருக்க வேண்டி தவம் புரிந்ததாகவும், பின்னர் சுயம்பு வடிவாகி சஞ்சீவி பர்வதமலை சிகரத்தின் உச்சியில் மேக கூட்டங்களுக்கு இடையில் விண்ணை தொடும் அளவிற்கு வடக்கு நோக்கி உள்ளார். இறைவனும் பர்வதத்தினுள் உறையவே பர்வதரின் சிரசின் மீது காரியூண்டிக் கடவுளாய் சிவன் இங்கு கிழக்கு நோக்கி இருந்தபடி அருள்பாலிக்கிறார். எனவே இதனை நந்திமலை, பர்வதமலை என பக்தர்கள் அழைக்கின்றனர். பர்வதராஜ மன்னனுக்கு மகளாக அவதரித்த பார்வதி தேவி ஈசனின் உடலில் இடபாகம் வேண்டி காஞ்சிபுரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்தபோது இம்மலை அடிவாரத்தில் பச்சையம்மனாக தவமிருந்து இறைவனை வணங்கினார். எனவே இது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவபெருமானுக்கு வடநாட்டில் எப்படி அபிஷேகம் அவரவரே செய்வதுபோல் இங்கும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யலாம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த பர்வதமலை சன்னிதானத்திற்கு 600 ஆண்டுகளுக்கு பிறகு திருவல்லிக்கேணி ஸ்ரீ பர்வதமலை அடியார்கள் திருப்பணிச்சங்கம் பெரும் முயற்சியால் கடந்த 20.01.2016 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மராம்பிகை தாயார்:
மலை மீது உள்ள ஆலயத்தில 3 பிரகாரங்கள் உள்ளன. முதலில் விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், வீரபத்திரர், காளி ஆகியோரை தரிசிக்கலாம். இரண்டாவதாக ஸ்ரீ மல்லிகார்ஜுனரையும் அடுத்து பிரம்மராம்பிகை தாயார் வேறெங்கும் காணமுடியாத பேரழகுடன் இரவில் அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியை காணலாம். அம்மனை வணங்குபவர்களுக்கு புத்திரபாக்கியம், திருமண தடைகள் விலகும், தீபம்போட்டு வணங்கினால் எல்லா குறையும் தீரும் என்பது ஐதீகம்.
கிரிவலம்:-
மார்கழி மாதம் மாதபிறப்பில் தனுர் மாத உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த உற்சவ விழாவில் கோவில் மாதிமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரஹன் நாயகி சமேத கரைக்கண்டஈஸ்வரர் 24 கி.மீ. தூரம் கொண்ட பருவதமலையை கிரிவலம் வருவார். அப்போது 47 கிராமங்களைச் சேர்ந்த மண்டகபடியாளர்கள் சாமிக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். இந்த பர்வதமலைக கிரிவலம் முடிந்தபின்னர்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மலையை சுற்றி கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பணிக்கு உதவும் அன்பர்கள் தொடர்புக்கு
திருவல்லிக்கேணி ஸ்ரீ பர்வதமலை அடியார்கள் திருப்பணிச்சங்கம்
விகாஸ் இ.பாண்டியன், செல்: 9884236697
அமைவிடம்: திருவண்ணாமலை இருத்து 35 கிமி தொலைவில் உள்ளது படங்கள் :ப.வசந்த் செய்தி: பரசுராமன்
The post தீராத நோய் தீர்க்கும் பருவதமலை ஸ்ரீமல்லிகார்ஜீனர் appeared first on SWASTHIKTV.COM.