பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளது. இதில் தற்போது கந்த புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் நாழி கிணற்றில் மட்டுமே பக்தர்கள் நீராடி வருகிறார்கள்.
1. முகாரம்ப தீர்த்தம் – இதில் மூழ்குவோர் கந்தக் கடவுளின் கருணை அமுதத்தைப்பருகுவர்.
2. தெய்வானை தீர்த்தம் – இந்த தீர்த்தத்தில் மூழ்குவோர் ஆடை அணிகலன், போஜனம், தாம்பூலம், பரிமளம், பட்டு, பூ அமளி என்கின்ற இன்பத்தைப் பெறுவர்.
3. வள்ளி தீர்த்தம் – இந்தத் தீர்த்தம் ஒருமையுள்ளத்துடன் பிரணவ சொரூபமாய் பிரகாசிக்கின்ற கந்தப்பெருமானின் திருவடித்தாமரையைத் தியானிக்கும் ஞானத்தைக் கொடுக்கும்.
4. லட்சுமி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் வட திசைக்கு அதிபரான குபேரனும் அடைவதற்குரிய செல்வங்களைப் பெறுவர்.
5. சித்தர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களும் நீங்கி முக்திக்குத் தடையாகிய உடல், உலக பகைகளை விலக்கி முக்தி வழியை நாடச் செய்யும்.
6. திக்கு பாலகர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் கங்கை, யமுனை, காவிரி முதலிய தீர்த்தங்களை கொடுக்கும் பலனைப் பெறுவர்.
7. காயத்ரீ தீர்த்தம் – இந்தத் தீர்தத்தத்தில் மூழ்குவோர் அநேக வேள்விகளைச் செய்தவர் அடைகின்ற பலன்களைப் பெறுவர்.
8. சாவித்ரி தீர்த்தம் – இந்தந் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பிரமாதி தேவர்களாலும் காண்பதற்கு அரிய உமாதேவியின் பொன்னடிகளைப் பூஜித்த பலனைப் கொடுக்கும்.
9. சரஸ்வதி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு சகர ஆகம புராண இதிகாசங்களை அறியத் தகுந்த அறிவைக் கொடுக்கும்.
10. அயிராவத தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திர பதாகை, பன்னாவை முதலிய நதிகளில் நீராடியோர் பலனைப் பெறுவர்.
11. வயிரவ தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் நீராடியோர் சரஸ்வதி, சோனை முதலிய நதிகளில் மூழ்கியவர் அடையும் பலனை அடைவர்.
12. துர்க்கை தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் இம்மையிலே அடையும் துன்பத்தைப் போக்கி நன்மையைப் பெறுவர்.
13. ஞானதீர்த்தம் – இந்தத் தீர்த்தம் இறைவனைப் பரவுவோருக்கும் பரவுவதற்கு நினைத்தோர்க்கும் நன்மையைக் கொடுத்தருளும்.
14. சத்திய தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானது களவு, கள்ளுண்டல், கொலை, பொய், என்கின்ற ஐந்துடன், அகங்காரம், உலோபம், காமம், பகை, போஜனப் பிரியம், சாய்தல், சோம்பல், முதலான ஏழு துன்பங்களையும் போக்கும். இன்னும், தூலம், சூக்குமம், அதி சூக்குமம் என்று சொல்கின்ற பாதகம், அதிபாகம், மகா பாதகம் ஆகிய மூன்றினின்றும் நீக்கித்தனது சித்தத்தை நன்னெறியில் நிற்கச் செய்யும்.
15. தரும தீர்த்தம் – இந்தத் தீர்த்தமானதுது தீவினையாகிய வேரைக்களைந்து தேவாமிர்தமாகிய மங்கள கரத்தைக் கொடுத்தருளும் வல்லமை படைத்தது.
16. முனிவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் ஜகத்ரட்சகனைக்கண்ட பலனைப் பெறுவர்.
17. தேவர் தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோருக்கு காமம், குரோதம் லோபம் மோகம் மாச்சரியம் என்னும் ஆறு குற்றங்களை நீக்கி ஞான அமுதத்தை நல்கும்.
18. பாவநாச தீர்த்தம் – இத்தீர்த்தம் குற்றமில்லாத முனிவர்களால் சபிக்கப்பட்ட சாபங்களை விலக்கி அனைத்துப் புண்ணியார்த் தங்களையும் அளிக்கவல்லது.
19. கந்தப்புட்கரணி தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர் சந்திரசேகர சடாதரனுடைய திருவடியை முடிமிசைச் சூடும் மேன்மையைப் பெறுவர்.
20. கங்கா தீர்த்தம் – இத்தீர்த்தம் முக்திக்கு ஏதுவாய் பெருமானைத் தரிசித்துப் போற்றுவார் ஜெனனமாகிய பிறவிக் கடலைக் கடக்கும் தெப்பம் போன்றிருக்கும்.
21. சேது தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குச் சகல பாதகத்தினின்றும் நீக்கி நன்மையைக் கொடுத்தருளவல்லது.
22. கந்தமாதன தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்குப் பாவங்களைப் போக்கி பரிசுத்தத்தைத் தர வல்லது.
23. மாதுரு தீர்த்தம் – இந்தத் தீர்த்தத்தில் மூழ்குவோர்க்கு அன்னையைப் போன்று ஆசீர்வதித்து அதிலும் பன்மடங்கு அதிகமாக பலனைக் கொடுக்கும்.
24. தென் புலத்தார் தீர்த்தம் – இதில் ஒரு தரம் மூழ்கி எள்ளுத் தண்ணீரும் இறத்தவர்களுக்கு இம்மை மறுமையும் சிறந்து விளங்க செந்திலாண்டவன் திருவருட்கரந்து வாழும் பதத்தைத் கொடுத்தருளுவார்.
கோவிலுக்குத் தெற்கே 200 கெஜ தூரத்தில் நாழிக் கிணறு உள்ளது. பெரிய கிணற்றுக்குள்ளே இது ஒரு சிறு கிணறு, ஒரு சதுர அடி பரப்பும் ஏழு அடி ஆழமும் உள்ள இந்தத் தீர்த்தம் உவர்ப்பு அற்ற நன்னீராகக் காட்சி தருகின்றது. இதற்குத் கந்தபுஷ்கரணி என்றும் பெயர் வழங்குகிறது. இந்தக் கந்தபுஷ்கரணியில் முழுகுவோர் சகல நலன்களையும் பெறுவார்கள்
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.