மாயூரத்தில் காவிரி புஷ்கரம் விழாவும் துலா ஸ்நானமும்
மாயூரத்தில் காவிரி புஷ்கரம்.
‘ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது’ என்று சொல்லும் அளவுக்குப் புராண ரீதியாக புனிதத்துவம் பெற்றுத் திகழும் தலம் மயிலாடுதுறை. புனிதத்துவம் பெற்ற மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடைபெறும் ‘துலா ஸ்நானம்’ போலவே, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ‘காவிரி புஷ்கரம்’ விழாவும் பிரசித்தி பெற்றது. அதிலும் இந்த வருடம் (செப். 12 முதல் 24-ம் தேதி வரை நடைபெறுவது 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரமாகும்.
நவகிரகங்களில் ஒருவரான குரு பகவான், பிரம்மதேவரிடம் உள்ள மூன்றரை கோடி தீர்த்தங் களுக்கு அதிபதியாகிய புஷ்கரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக தவம் இருந்தார். ஆனால், புஷ்கரமோ பிரம்மதேவரைப் பிரிய மறுத்துவிட்டது. எனவே, பிரம்மதேவர் குரு பகவானுக்கும் புஷ்கரத்துக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்து வைத்தார். அதன்படி குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்கு உரிய புண்ணிய நதியில் புஷ்கரம் வாசம் செய்து, நீராடும் அன்பர்களுக்கு நன்மை செய்வது என்று முடிவானது.
அதன்படி துலாம் ராசியில் குரு பகவான் பிரவேசிக்கும்போது, துலாம் ராசிக்கு உரிய காவிரியில் புஷ்கரம் வாசம் செய்வதை ஒட்டி நடைபெறுவதே காவிரி புஷ்கர விழாவாகும். அதே காலக்கட்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்தியர்களுடன் இந்திரனும் விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்புரிவார்கள் என்பதுதான் புஷ்கரத்தின் மகிமையாகும்.
மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம்!
மயிலாடுதுறையில் (மாயூரம்) காவிரி புஷ்கரம் நடை பெறுவது மிகவும் சிறப்பாகும். காரணம், இந்தத் தலத்தில் இருக்கும் வள்ளலார் கோயிலில் அருளும் இறைவன் குரு வடிவாய்த் திகழ்கிறார்.
சிவபெருமானின் வாகனம் தர்மத்தின் வடிவமான ரிஷபம். சிவபெருமானை அவர் சொல்லும் இடங்களுக்கெல்லாம் சுமந்து சென்று திரும்பவும் கயிலாயத்துக்கு அழைத்துவருவது அதனுடைய கடமை.
ஒருமுறை அன்னை பார்வதிதேவி மயிலின் உருவம் ஏற்று, மாயூரம் தலத்துக்கு வந்து பரமனைக் குறித்துத் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். தமது மனதுக்கு இனிய தேவியை ஆட்கொளவதற்காக பரமன் ரிஷபத்தில் ஏறி பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட தேவர்களுடன் இந்தத் தலத்துக்கு வருகை தருகிறார். மற்ற தேவர்களின் வாகனங்களைவிட, ரிஷபம் மிக வேகமாகச் சென்று மாயூரத்தை அடைந்தது.
‘தன்னால்தான், தனது உதவியால்தான் சிவ பெருமான் சிறப்படைகிறார்; தன்னால்தான் அவரால் எல்லா இடங்களுக்கும் விரைவாகச் செல்ல முடிகிறது’ என்று ரிஷபத்துக்கு கர்வம் ஏற்பட்டது.
ரிஷபத்தின் கர்வத்தைப் போக்க எண்ணிய ஈசன், தம் திருமுடியில் இருந்து ஒரு கேசத்தை எடுத்து ரிஷபத்தின் முதுகில் வைத்தார். அவ்வளவுதான், அந்த ஒற்றைக் கேசத்தைச் சுமக்க இயலாமல், ரிஷபம் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டது. சற்று பொறுத்து சுயநினைவுக்கு வந்த ரிஷபம், ‘`எம்பெருமானே, சிறிது நேரம் சித்தம் கலங்கிப் போய் கர்வம் அடைந்துவிட்டேன். நான் கொண்ட ஆணவத்தால் எனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்கி, என்னை ஆட்கொண்டருள வேண்டும்’’ என்று மன்றாடிப் பிரார்த்தித்தது.
ஐயனும் கருணைகொண்டு, `‘புண்ணிய தலமாம் மாயூரத்தில் உள்ள துலா ஸ்நானக் கட்டத்தில் நீராடி, தினமும் வில்வ தளத்தால் எம்மை பூஜித்து வந்தால், குரு வடிவாக எழுந்தருளி உன்னை ஆட்கொள்வோம்’’ என்று அருள்புரிந்தார்.
சிவபெருமான் அருளியபடியே மாயூரம் துலா ஸ்நானக்கட்டத்தில் நீராடி, ஐயனை பூஜித்து எம்பெருமானின் அருளைப் பெற்றது ரிஷபம். ஈசனின் ஆணைப்படி ரிஷப தேவர் துலாக்கட்டத்தில் நீராடி பூஜிதததால் அதற்கு `ரிஷப தீர்த்தம்’ என்ற பெயர் ஏற்பட்டது.
ரிஷப தேவருக்கு குரு வடிவாக காட்சி தந்து ஐயன் வதான்யேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளிய ஆலயம் வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் ஐயன் மேற்கு பார்த்து திருக்காட்சி தருகிறார். ஐயன், `வழிகாட்டும் வள்ளல்’ என்றும் அழைக்கப் படுகிறார். அம்பிகை ஞானாம்பிகை தேவி என்ற திருப்பெயர் ஏற்று, தெற்குப் பார்த்த சந்நிதியில் காட்சி தருகிறார். மேலும் பிரம்மா, லிங்கோத்பவர், மேதா தட்சிணாமூர்த்தி, கணபதி, வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் போன்ற பரிவார மூர்த்திகளையும் தரிசிக்கலாம். சண்டன், முண்டன் ஆகிய அரக்கர்களைக் கொன்ற துர்கை, இங்கு அஷ்டபுஜ துர்கையாகக் காட்சி தருகிறார்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post மாயூரத்தில் காவிரி புஷ்கரம் விழாவும் துலா ஸ்நானமும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.