அளவற்ற புண்ணியங்களைச் சேர்க்கும் காவிரி புஷ்கரத்தில் எப்படி வழிபடுவது?
புஷ்கர விழாவின்போது காவிரியில் நீராடுவது மிகவும் விசேஷமாகப் போற்றப்படுகிறது. காவிரியின் உயர்வு பற்றி வேதங்களும் தர்ம சாஸ்திரங்களும் கூறுவதைப் பார்த்தாலே காவிரியின் மகிமை நமக்குப் புரியும்.
கங்கையில் மூன்று நாள்கள் நீராடினால் பாவங்கள் நீங்கும்; ஏழு நாள்கள் யமுனையில் நீராடினால் பாவங்கள் நீங்கும்; ஆனால், காவிரியில் ஒருநாள் நீராடினாலே போதும், நம் வாழ்நாள் பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற நதிகள் தங்களில் நீராடும் பக்தர்களின் பாவங்களைச் சுமந்து கருமை அடைந்த நிலையில், மாயூரத்தில் உள்ள காவிரி துலா ஸ்நானக்கட்டத்தில் நீராடித் தான் தூய்மை அடைகின்றனவாம். இதிலிருந்தே நம்மால் காவிரியின் மகிமையைப் புரிந்துகொள்ள முடிகிறது.
அளவற்ற புண்ணியங்களைச் சேர்க்கும் புனித நதியான காவிரியில் நடைபெறும் புஷ்கர விழாவில் நீராடுவது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். காவிரி புஷ்கரத்தில் நீராடுவதற்கென்று சில நெறிமுறைகள் உள்ளன.
காவிரி புஷ்கர விழா செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கி 24 வரை நடைபெறுகிறது. முதல்நாள் கொடியேற்றத்துடன் விழா தொடங்கும். தொடர்ந்து மடாதிபதிகள், குருநாதர்கள், ஆன்மிக அருளாளர்கள் காவிரித் தாயின் திருவுருவப் படத்துடன் துலாக்கட்டத்தில் இருந்து ஊர்வல மாகப் புறப்பட்டுத் திரும்பவும் துலாக்கட்டத்துக்கே வந்து சேருவார்கள். பிறகு, அங்கே திரண்டிருக்கும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தினமும் இரு வேளைகளிலும் சுவாமி புறப்பாடு, வேத பாராயணம், திருமுறை பாராயணம், நாம சங்கீர்த் தனம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. மாலையில் காவிரியில் ஆரத்தியும் நடைபெறும்.
புஷ்கர விழாவின் தொடக்க நாளிலும் நிறைவு நாளிலும் அருள்மிகு அபயாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதப் பெருமானும், ஸ்ரீவதான்யேஸ்வரரும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு தீர்த்தம் அருள்வார்கள். அந்த நேரத்தில் காவிரியில் நீராடி, காவிரித்தாயின் துதியைச் சொல்லி, காவிரியை வழிபட்ட பிறகு, மகா சங்கல்பம் செய்துகொண்டு, கன்யா பூஜை, குலதேவதா பூஜை செய்து, அன்னதானம், ஆடை தானம், இரண்யம் (காசுகள்) தானம் செய்வதுடன் பித்ரு தர்ப்பணமும் கொடுக்கலாம்.
பிறகு மயூரநாதர் கோயில், வள்ளலார் கோயில் சென்று இறைவனை வழிபட வேண்டும். தொடர்ந்து அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள திவ்யதேசமான திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரங்கநாதரையும் தரிசிக்க வேண்டும். இந்தத் தலத்தில் ஸ்ரீபரிமள ரங்கநாதர் காவிரியைத் தலைப்பக்கமும், கங்கையைத் திருவடிப் பக்கமும் அமரச்செய்து சயனக் கோலத் தில் காட்சி தருகிறார். இந்த திவ்விய தேசத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் பக்தர்கள் வந்து காவிரியும் வங்கக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் நீராடி ஸ்ரீபரிமள ரங்கநாதரை வழிபடுவது குறிப்பிடத்தக்க செய்தி.
சங்கல்பம் செய்யும் முறை
நீங்கள் எந்த நாளில் காவிரியில் நீராடுகிறீர்களோ… அந்த நாளின் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணத்தைச் சேர்த்து,
`ஸ்ரீஅபயாம்பிகா சமேத மயூர நாத ஸ்வாமி சன்னிதெள
ஸ்ரீஞானாம்பிகா சமேத வதான்யேஸ்வர,
ஸ்ரீமேதா தட்சிணாமுர்த்தி ஸ்வாமி சன்னிதெள
ஸ்ரீதுண்டிவிநாயக கால பைரவ காசிவிஸ்வேஸ்வர ஸ்வாமி சன்னிதெள
சர்வ மகாநதி தீர்த்த: புஷ்கர புண்யநாளே
காவேரி ஸ்நான மஹம் கரிஷ்யே’
என்று சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். பிறகு, காவிரியின் தியானத்தை மூன்று முறை கூற வேண்டும்.
ஓம் மருத் வ்ருதே மகா பாகே மகா தேவி மனோஹரே
சர்வாபீஷ்ட ப்ரதே தேவி ஸ்நானஸ்யதாம் புண்ய வர்த்தினி
ஸர்வ பாப க்ஷயகரே பரம பாபம் விநாசய:
கவேர கன்யே காவேரி ஸமுத்ர மஹிஷிப்ரியே
ப்ரதேஹி புக்திமுக்தி த்வம் சர்வ தீர்த்த ஸ்வரூபிணி
சிந்து வர்யே தயாசிந்தோ மாமுத்தர பவாம்புஜே
காற்றாகப் பெருகுபவளும், மஹா பாக்யவதியும், எல்லோருடைய மனதையும் கவர்பவளும், விரதங்களை நிறைவேற்றுபவளும், ஸ்நானம் செய்பவர்களின் பாவங்களை அழித்து புண்ணியத்தைக் கொடுப்பவளுமாகிய தேவியே. நான் செய்த பாவங்களைப் போக்குவாயாக. கவேர மன்னனின் குமாரத்தியும், சமுத்திரராஜனுக்குப் பிரியமான பட்டத்து ராணியும், எல்லா புண்ணிய தீர்த்தங்களின் ஸ்வரூபமானவளும் ஆகிய காவிரி தேவியே… எனக்கு நல்ல புத்தியையும், சகல சௌபாக்யங்களையும், மோட்சத்தையும் தந்து காப்பாயாக! நதிகளில் உயர்ந்தவளே, கருணைக் கடலே, என்னை பிறவிக்கடலில் தவிக்கச் செய்யாமல் கரையேற்ற பிரார்த்திக்கிறேன்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post அளவற்ற புண்ணியங்களைச் சேர்க்கும் காவிரி புஷ்கரத்தில் எப்படி வழிபடுவது? appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.