கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர்
தல சிறப்பு:
நவகிரகத்தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும். சுக்கிரன் வழிபாடு செய்த தலங்களுள் இதுவும் ஒன்று. சுக்கிரனுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சிவன் உயர்ந்த பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நடராஜர் மூலத்திருமேனியில் சிவகாமியுடன் (சிலா ரூபமாக) இருப்பது தனிசிறப்பு வாய்ந்தது. இத்தலத்தில் ஈசன் பிரம்மனுக்கு தன் திருமணக்கோலத்தை காட்டியருளினார். எனவே தான் இங்கு அம்மனை தன் வலப்பாகத்தில் சிவன் கொண்டருள்கிறார்.
பராசர முனிவருக்கு சிவன் இங்கு தாண்டவ கோலம் காட்டி முக்தி அருளினார். எனவே இங்குள்ள நடராஜர் “முக்தி தாண்டவ மூர்த்தி’ என அழைக்கப்படுகிறார்.
காலை 7.30 முதல் மதியம் 12 வரை. மாலை 4.30 முதல் இரவு 9 மணிவரை நடை திறந்திருக்கும்
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், -609 804
(வழி) துகிலி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
மூலவர்:அக்னீஸ்வரர்
அம்மன்/தாயார்: கற்பகாம்பாள்
தல விருட்சம்: பலா
தீர்த்தம்:அக்னி தீர்த்தம், பராசர தீர்த்தம்
ஆகமம்/பூஜை :-
பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
கோயில் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. பழமையான கோயில். தெற்கு வாயில் வழியாக உள்வந்தால் உள்மண்டபம் உள்ளது. பிரகாரமாக வலம் வந்து மண்டபத்தையடைந்தால் இடப்பால் விநாயகர் தரிசனம், வலப்பால் விசுவநாதர் சந்நிதி. அடுத்து அம்பாள் சந்நிதி. உள்வாயிலைத் தாண்டி சுவாமி சந்நிதிக்குச் செல்லும்போது இடப்பால் (வெளவால் நெத்தி மண்டபத்தில்) விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன.
தலமரம் – புரசு (பலாசு) உள்ளது. இதன்கீழ் அக்னீஸ்வரர் லிங்கம் தரிசனம் அடுத்து மானக்கஞ்சாறர், கலிக்காமர் திருவுருவங்கள் உள்ளன. பக்கத்தில் சுரைக்காய்ப் பக்தர் என்ற அடியார் மனைவியுடன் காட்சி தருகிறார்.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சனிபகவான், சந்திரன், நவக்கிரக சந்நிதி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. உடல்பிணி, சோகை நோய், சித்தபிரமை நீங்கவும், செல்வம் செழிக்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
பராசரருக்கு சித்தபிரமை நீங்கியது. பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தது. அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்தது, சந்திரனின் சாபம் நீங்கியது, கம்சன் என்னும மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்கு திருமணம் நடந்தது, மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டது ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதார தலம்.
மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர். இவரது அருள் பெற, நவக்கிரக தலங்களில் தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூர் செல்ல வேண்டும்.
நவக்கிரகங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார். இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகன். எனவே தான் இவருக்கு பார்க்கவன் என்ற பெயர் உண்டு. இவருக்கு “கவி’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. சுக்கிரன் மிகச்சிறந்த சிவ பக்தர், சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர்பிழைக்க செய்யும் “அமிர்த சஞ்சீவி’ மந்திரத்தை கற்றவர்.
இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண்தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார். முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கு குரு. சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார். ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர். சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும்.
ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும். சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும். சமமானவர்கள் செவ்வாயும் குருவும். மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார். எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.
ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது. இத்தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் சுக்கிரனுக்கு அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவனை வழிபாடு செய்வது சிறப்பு.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.