வேண்டும் வரங்களை எல்லாம் தரும் திரிபுரபைரவி
தசமகா வித்யா தேவிகளுள் ஐந்தாம் தேவியாக போற்றப்படுபவள் திரிபுரபைரவி. பைரவம் என்றால் அச்சமூட்டுதல் என பொருள்படும். இத்தேவி தவம் செய்பவள். தவம் செய்து கொண்டே அச்சமூட்டுபவள். அது எப்படி? தவம் என்றால் தகிப்பது. சிந்தனையை ஒருமுகப்படுத்துவதே தவம். அது அக்கினி மயமானது. இந்த அம்பிகையின் தவம் அக்கினிமயமாக ஜொலிப்பதால் நம்மை அச்சமூட்டுகிறது.
சத்துவ, ரஜஸ், தாமஸம் எனும் முக்குணங்களைக் கடந்தால் தூய நிலையை அடையலாம். கால, தேச, வர்த்தமானம் எனும் மூன்றையும் கடந்தால் நித்யத்வத்தை உணரலாம். இவற்றை உணர்த்தவே திரிபுரபைரவியாக பேரெழில் கோலம் கொண்டுள்ளாள் தேவி. உபநிஷதங்கள், நான்முகன் சிருஷ்டி செய்யத் தொடங்கும் முன் தவம் செய்தார் என்றும் அந்த யோக சக்தியே பைரவி என்றும் கூறுகின்றன.
மண்டையோட்டைக் காட்டி மரணபயம் எத்தகையது என்பதை தேவி உணர்த்தினாலும் அவள் அன்பே வடிவானவளாகத் திகழ்வதால் அதன் மீது ரத்தத்தைக் காட்டி சாகா நிலையிலிருக்கும் உயிர்சக்தியைத் தான் அளிப்பவள் என்பதையும் உணர்த்துகிறாள். இவளே துர்க்கா தேவியாகவும் திகழ்பவள்.
நம் உடலின் மூலாதாரத்தில் உபாசிக்கப்படுபவள் இந்த திரிபுரபைரவி. ஆதாரம் சிறப்புடையதாக இருந்தால்தான் அதன் மேலுள்ளவையும் சிறப்பாக இருக்கும். எல்லாவற்றையும் தாங்கும் தேவியின் திருவருளால் ஆரம்பம் தெய்வீக சக்தியுடன் விளங்கி, நிறைவும் தெய்வீகத்திலேயே சிறப்புடன் முடியும். முதல் கோணல் முற்றிலும் கோணல். கோணலேயில்லாத குறைவேயில்லாத தேவியின் கருணை நம்மை கோணல் புத்தியில்லாதவர்களாகச் செய்து நம்மை அருள் வடிவாக்கும்.
சிவந்த பட்டாடை உடுத்தி, ஆயிரம் சூரிய பிரகாசத்துடன் கபால மாலை தரித்து கைகளில் ஜபமாலை, புத்தகம், வரத, அபய முத்திரைகள் தரித்து, புன்முறுவல் பூத்த திருமுகத்தினளாய், முக்கண்களையும் சந்திரகலையையும் ரத்னக்கிரீடத்தையும் தரித்த திரிபுரபைரவி எப்போதும் தன் அடியவரைக் காப்பவள்.
தேவி மகாத்மியத்தை குரு, புத்தகம் மூலம் அறிந்து தேவியின் கடாட்சம் பெற இந்த திரிபுர பைரவியின் நாமங்களை மறவாது ஜபிக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்த ஜபமாலையையும் புத்தகத்தையும் ஏந்தியருள்கிறாள். இவளே நமது ஆறு ஆதார கமலங்களை மலரச் செய்ய அருள் புரிபவள். பஞ்சபூதங்களையும் இயக்குபவள்.
மஹா தேவீ ம்ருத்யுஞ்ஜயா நித்யா ம்ருத்ஸஞ்ஜீவினீ
ரக்த நேத்ரா காமேஸ்வரி காமினீ கமலேச்வரி
ஸித்த கௌலேச பிமரா சைதன்யா புவனேச்வரீ
ஷட்கூடா, ஸம்பத்ப்ரதா, லலிதா பாஹிமாம் த்ரிபுரா பைரவி
புவனேஸ்வரி பைரவி, கமலேஸ்வர பைரவி, சைதன்ய பைரவி, ஷட்கூடாபைரவி, ஸம்பத்ப்ரதா பைரவி போன்ற பல உப மந்திரங்கள், இந்த திரிபுரபைரவி வித்யையில் காணப்படுகின்றன. ஸம்பத்ப்ரதா பைரவி மந்திரம் திரிபுர பாலா மந்திரத்தைப் போன்றதே. வாக்பவம், காமராஜம், ஸம்பத்ப்ரதா போன்ற பீஜங்கள் சேர்ந்த இம்மந்திரம் ஜபம் செய்பவர்களுக்கு பெரும் பொருள் அள்ளித் தரக்கூடியது ஆகும். குரு உபதேசம் பெற்று 3 லட்சம் ஆவிருத்தி ஜபமும் த்ரிமதுரம், செவ்வரளி மலர்களால் ஹோமம் செய்ய, நினைத்தது நிறைவேறும்.
திரிபுரபைரவி தேவியை மூலாதாரத்தில் தியானிக்க வேண்டும். பிரம்மச்சர்யத்தோடு இவளை ஆராதிப்பவர்களுக்கு அமானுஷ்ய சக்திகள் கிட்டும். முக்காலங்களையும் உணரும் சித்தி கை கூடும். பொய் கூறாமல் இவளை உபாசனை புரிந்தால் சொல்லும் வாக்கு பலிக்கும். கிரியா சக்தி உடையவளாதலால் தன் அடியார்களின் காரியங்களைத் தடையின்றி சித்திக்கச் செய்பவள். இந்த தேவியின் மந்திர ஜபம் செய்பவர்கள் எல்லாவித பீடைகளிலிருந்து விடுதலை பெற்று, சகல சம்பத்துகள், உலக ஞானம், வேத ஞானம் ஆகியவற்றோடு முக்தியையும் பெறுவர்.
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post வேண்டும் வரங்களை தரும் திரிபுரபைரவி appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.