கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பரிமளரங்கன் திருக்கோயில், திரு இந்தளூர்
‘முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும்நிலை
நின்ற பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்
வண்ணம் எண்ணுங்கால் பொன்னின்வண்ணம் மணியின்
வண்ணம் புரையும் திருமேனி இன்ன வண்ணம்
என்று காட்டீர் இந்தளூரீரே!’
-திருமங்கையாழ்வார்
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியிலேயே, அந்நகரின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது பெருமாளின் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான 22ஆவது திவ்யதேசம் என்று சிறப்பிக்கப்படுகின்ற திருஇந்தளூர். இதைத் திருவிழுந்தூர் என்றும் சொல்கிறார்கள்.
தலபுராணம்:
ஏகாதசி விரதமிருந்த அம்பரீசன் என்னும் மன்னன் தன் தவத்தினால் இந்திர பதவி அடைந்து விடக் கூடாது என்று தடுக்கும் நோக்கத்துடன் துர்வாச முனிவர் அவனை அடைந்து, தான் நீராடி வந்தவுடன் இருவருமாக உணவருந்தலாம் என்று கூறிச் சென்றுவிட்டார். முனிவருக்காகக் காத்திருக்கையில் ஏகாதசி முடிந்து துவாதசி துவங்கும் நேரம் வந்து விட, அப்போதும் உணவருந்தாவிட்டால் ஏகாதசி விரதப்பயன் கிடைக்காதென்று உள்ளங்கை அளவு மூன்று முறை தீர்த்தம் அருந்தி விரதம் முடித்தான்.
இதை அறிந்து சினந்த துர்வாசர் ஏவிய பூதத்திடம் இருந்து தப்பிக்க, அம்பரீசன் நாராயணனின் திருவடிகளில் தஞ்சமடைய, அவர் பூதத்தை சம்ஹரித்து துர்வாசருக்கும் புத்தி புகட்டினார். இவ்வாறு நூறு ஏகாதசி விரதமிருந்த மன்னன், அதற்கு வரமாக, நாரணன் எந்நாளும் இத்தலத்திலேயே தங்கியிருக்க வேண்டுமெனக் கேட்க, பக்தன் சொன்ன வண்ணம் செய்பவரான பத்மநாபனும் அவ்வாறே இணங்கினான்.
அனைத்துத் தலங்களிலும் வழிபட்டுத் தன் சாபங்களைப் போக்கிக் கொண்ட சந்திரன் இன்னமும் திருப்தி அடையாதவனாக, இத்தலத்தை அடைந்து எம்பிரானை வழிபட்டு, பெருமாளிடம் தனக்கு சிபாரிசு செய்யும்படி தாயாரையும் பணிந்து வணங்கி வேண்டிக் கேட்டு தன் சாபத்தின் சுவடு கூட மீதம் இல்லாதவண்ணம் தூயவனானான் என்பர்.
கிழக்கு நோக்கி சயனத் திருக்கோலத்தில் காட்சியளிப்பவரான மூலவரின் பெயர் பரிமளரங்கன் என்பதாகும். இதை மருவினிய மைந்தன் என்று தமிழில் சொல்வதும் உண்டு. உற்சவரின் பெயர் சுகந்தவனநாதன் என்பதாகும். தாயாரின் திருப்பெயர் பரிமள ரங்கநாயகி. சந்திரனின் சாபம் தீர வழிசெய்தவள் என்பதால் சந்திரசாப விமோசனவல்லி என்றும் அழைப்பர்.
தலச்சிறப்பு:
பெருமாளின் முகத்தைச் சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மனும் தலைமாட்டில் காவிரியும் கால்மாட்டில் கங்கையும் திருவடியை எமனும், அம்பரீசனும் வழிபடும் அரிய காட்சியுடன் அருள் பாலிக்கும் தலம். கங்கையை விடப் புனிதமானவள் என்று காவிரி பெயர் பெற்றது இத்தலத்தில்தான்.
இங்கு நீராடி சந்திரன் பாவம் கழிந்ததால் எப்பாவத்திற்கும் விமோசனம் இங்கு நீராடுதலாம் என்பது நம்பிக்கை. பித்ரு தோஷம், குடும்பத்தினர் செய்த பாவம் ஆகிய அனைத்தும் இங்கு வழிபடுவதால் விலகும். பெண்களுக்குத் தீங்கிழைத்தவர்கள், பெண் பித்தால் தகாத செயல்களில் ஈடுபட்ட்வர்கள் ஆகியோருக்கு இது பிராயச்சித்த தலமாகவும் விளங்குகிறது.
பல தலைமுறைகளாகப் பெண் வாரிசு அற்றோர் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் தங்கள் குடும்பத்தில் பெண் வாரிசு பிறக்கக் காணலாம். இந்த திவ்ய தேசம் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் ஒரு லஷ்மி ஹயக்ரீவர் சந்நதி உள்ளது. அன்பர்கள் தவறாது அதையும் சேவித்துப் பலன் பெறலாம்.
எத்தலம்நான் சென்றாலும் நீங்காத என்பாவம்
முத்திதனை நான்பெறவே முன்வந்து நீக்கியவன்
இத்தலத்தில் உறைகின்றான் எல்லாரும் காணீரோ
சித்தம்தெளி வாக்கிடுவான் சிறுதிருவடி தன்னெசமான்.
ஓம் நமோ நாராயணாய!
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பரிமளரங்கன் திருக்கோயில், திரு இந்தளூர் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.