வசிஷ்டர் அருளிய எம பயம் நீக்கும் நரசிம்ம மிருத்யஞ்சய மந்திர ஸ்தலம்
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார்.
முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய “நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை’ சீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள்,””சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் “அண்ணா’ என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள்.
இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை “அண்ணா’ என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு “அண்ணன்’ ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் “அண்ணன் பெருமாள்’ என்றும் இத்தலம் “அண்ணன் கோயில்’ என்றும் வழங்கப்படுகிறது.
திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் “சீனிவாசன்’, தாயாரின் திருநாமம் “அலர்மேல்மங்கை’. திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார்
ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள்.
இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து “திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார்.
ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் “திருமங்கை ஆழ்வார்’ என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post வசிஷ்டர் அருளிய எம பயம் நீக்கும் நரசிம்ம மிருத்யஞ்சய மந்திர ஸ்தலம் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.