விநாயகர் சதுர்த்தி வழிபாடும் அதன் முறைகளும்
பிரணவமே வேதத்தின் மூலம். ஓம் என்ற ஒலியின் வடிவமே விநாயகர். எனவே பிரணவப் பொருள் என்று விநாயகரை அழைக்கிறோம். ஈஸ்வரனின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு. தேவர்களுக்கு துன்பம் கொடுத்த கஜமுகன் என்ற அரக்கனை அழிப்பதற்காக சிவபெருமான் அருளால் விநாயகப் பெருமான் அவதரித்தார்.
விநாயகர் கஜமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன்.. விநாயகர் தனது வலக் கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ, அது கஜமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனமாக்கி அருள்புரிந்தார். இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப் பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.
பிள்ளையார் சுழி:
எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் –ஆதியும் அந்தமும் அவரே, தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் – இணைந்து “உ” எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடிந்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.
விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறைகள்:
மஞ்சள் பொடியிலும், மண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அருகம்புல், பூ, எருக்கம்பூ, விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். கொழுக்கட்டை பிரசாதம் மிகவும் பிடிக்கும். அவல், பொரி, வெல்லம், கடலை, பழம், தேங்காய், எள் உருண்டை முதலியன விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாகும். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி. பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம்.
அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
9941510000
8124516666 ![https://www.youtube.com/channel/UCGcuIrojwgrYpm5cKdf2bhg Image result for youtube subscribe png]()
![https://www.facebook.com/swasthiktv/ https://www.facebook.com/swasthiktv/]()
The post விநாயகர் சதுர்த்தி வழிபாடும் அதன் முறைகளும் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.