வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் 2000 ஆண்டுகள் பழைமைவாய்ந்த இங்கு 4அடி உயரத்தில் மதுரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். காளியம்மனுக்கு காவல் தெய்வமாக அய்யணார் உள்ளார். இங்கு உள்ள காளியம்மனை வணங்கினால் குழந்தை வரம், கல்யாண வரம் தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோவில் ஏரி, குளம், வயல்களுக்கு நடுவே இக்கோயில் அமைந்துள்ளது வான்உயர்ந்த ராஜ கோபுரம் அனைவரையும் வா வென்று அழைக்கின்றது.
தொல்லை தந்த மந்திரவாதி:
சிலப்பதிகார நாயகி கண்ணகி மதுரையை எரித்தபின் மனஅமைதி கொள்ளாமல் இத்தலம் வந்து அமைதி கொண்டாள் என்று செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. சிறுவாச்சூரின் வழிபடு தெய்வம் செல்லியம்மன் ஆகும்.ஒரு மந்திரவாதி தனது மந்திர வலிமையால் இவ்வம்மையைக் கட்டுப்படுத்தித் தீய செயல்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளான். மதுரை காளியம்மன் இத்தலத்திற்கு ஒரு வெள்ளிக்கிழமை இரவு வந்து சேர்கிறாள். செல்லியம்மனுடன் இரவு தங்க இடம் கேட்கிறாள். செல்லியம்மனோ தன்னை மந்திர வலிமையால் தொல்லைப்படுத்தும் மந்திரவாதி பற்றிக் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனோ தான் அதற்குத் தக்க வழி செய்வதாகக் கூறித் தங்குகிறாள். வழக்கப்படி வந்த மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள்.
சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுர காளியம்மன்:
செல்லியம்மன் அன்னை திறன் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிலிருக்கும் பெரியசாமி மலைக்கு சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமற் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலிவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. பில்லி, சூனியம் வைத்த மந்திரவாதியை அன்னை அழித்ததால் பில்லி, சூனியம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் இத்தலம் வந்து தொழ விலகிச் சென்று விடுகின்றன. குறைகள் எல்லாம் மனமுருக அன்னை முன் முறையிடக் கரைந்து காணாமற்போய் விடுகின்றன. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வாமாக இருப்பதால் இங்கு வரும் தனது பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.
கை,கால் மாவிளக்கு:
மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். வயிறு, நெற்றி, நெஞ்சு, கால், கை என்று நேர்ந்து கொண்டு அந்த பாகத்தில் மாவிளக்கு வைத்து அம்மனிடம் பிராத்தனை செய்கிறார்கள். சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே இந்த மாவிளக்கு நேர்த்திகடன் என்பதுதான் மிகவும் பிரபலம். இவை தவிர இத்தலத்தில் அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். இவை தவிர பக்தர்கள் அம்மனுக்கு பாலாபிசேகம், அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்கிறார்கள். அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திகடன்களாக செய்கின்றனர்.
சித்திரைத் திருவிழா :
ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் அம்மாவாசைக்குப் பின்வரும் முதல் செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாயன்று பூச்சொரிதல் தொடங்கும், அதற்கடுத்த செவ்வாய் காப்பு கட்டி 13 நாட்கள் பெருந்திருவிழா சிறப்புடன் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். இத்திருவிழாவில் மலை வழிபாடு, திருக்கல்யாணம், வெள்ளிக் குதிரை வாகனம், திருத்தேர் முதலியன முக்கிய திருவிழா நாட்களாகும். இத்திருவிழா நாட்களில் ஆலயம் திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். சிறப்பு வழிபாடுகள் தமிழ் ஆங்கிலப்புத்தாண்டு நாட்கள், ஆடி 18 ம் பெருக்கு புரட்டாசி நவராத்திரி 10 நாட்கள், ஐப்பசியில் தீபாவளித் திருநாள்.கார்த்திகையில் தீபத்திருநாள், மார்கழி மாதப்பிறப்பு, வைகுண்ட ஏகாதேசி, தைப் பொங்கல், தைப்பூசம், மாசியில் சிவராத்திரி ஆகிய சிறப்பு நாட்களிலும் ஆலயம் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது.
For Details and news updates contact:
Send Your Feedback at : editor@swasthiktv.com
The post வரம் தரும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.