மதுரை மாவட்டம் சோலை மலை என்கின்ற பழமுதிர்சோலையில் 2000ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன் கோவில் உள்ளது. இது முருகனின் ஆறு படை வீடுகளில். இது ஆறாவது படையாகும் இவரை வணங்கினால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கல்வி செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
ஐப்பசியில் பழுக்கும் பழம்: ஆடி, ஆவணிமாதத்தில் தான் பொதுவாக நாவல் மரத்தில் பழங்கள் பழுக்கும் ஆனால் இங்கு மட்டும் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் நாவல் பழம் பழுக்கும் அதிசியத்தை காணலாம். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோவில் சோலை மலை மட்டும் தான் சஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும் முருகன் அவ்வையாரிடம் “சுட்டப்பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா ? என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்குதான். வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகின்றனர்.
எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற ‘நூபுர கங்கை‘ என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.
ஆறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்தத் தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாகச் சொல்கிறார்கள். சிறுவன் உருவத்தில் முருகப்பெருமான் அவ்வைக்கு அருளினார். இந்தத் திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம். பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்தத் தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த தீர்த்தத் தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் அனைத்து நோயும் பறந்தோடிவிடும் என்கிற நம்பிக்கையில் இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோசை தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைவீடம்:
மதுரையில் இருந்து 20 கீலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவில் நிர்வாகம் சார்பில் வாகனம் இயக்கப்படுகிறது.
தொடர்புக்கு:
91-452-2470228
செய்தி – ப.பரசுராமன்
படம் – ப.பவசந்த்
The post விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் appeared first on SWASTHIKTV.COM.