இந்திரனும், பிரகஸ்பதியும் உரையாடி கொண்டிருந்த போது, மலாகன் என்னும் அசுரன் ஸ்வர்க்கத்தின் மீது படையெடுத்து வந்து அனைத்தையும் பறித்து கொண்டான்.
விஷ்ணுவை சரணடைந்த தேவர்கள், அவர் கூறியபடி, அசுரர்களுடன் சமாதானம் செய்து கொண்டு பாற்கடலைக் கடைந்தனர்.
இனி: பாற்கடலில் இருந்து பல்வேறு செல்வங்கள் தோன்றின. அதனை தேவர்களும், அசுரர்களும் பங்கிட்டுக் கொண்டனர், பின்னர் மஹாலக்ஷ்மி கரங்களில் தாமரை மலருடன் தோன்றினாள்.
முனிவர்கள் அவளை ஸ்ரீசூக்தத்தால் துதித்தனர். கந்தர்வர்கள் கானம் பாட, அப்சரஸ்கள் ஆட, தாமரை மலரின் மீது வீற்றிருந்தவளை அஷ்டதிக் கஜங்களும் அவளை ஸ்வர்ண கலசத்தினால் ஸ்நானம் செய்வித்தன.
விஸ்வகர்மா அவளுக்கு திவ்யாபரணங்களை தந்து மகிழ்ந்தான். பாற்கடல் திவ்ய வடிவத்துடன் நின்று அழகிய பத்மமாலையை தேவிக்கு அளித்தது.
அனைவரும் பார்த்திருக்க லக்ஷ்மி தேவி, ஸ்ரீபதியின் மார்பை அடைந்தாள். லக்ஷ்மியின் வருகையால் அனைவரும் இழந்த பொலிவையும், உத்வேகத்தையும் அடைந்தனர்.
உற்சாகத்துடன் மீண்டும் கடைய, இறுதியாக தன்வந்திரி பகவான் கையில் அமிர்த கலசத்துடன் தோன்றினார்.
அதனை கண்டதும் தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்திற்கு போட்டியிட்டு சண்டை போட்டு கொண்டனர்.
இதனைக் கண்டு மனம் வருந்திய பிரம்மாவும், ருத்ரனும் தத்தம் இருப்பிடம் நோக்கி சென்று விட்டனர்,தேவாசுர சண்டையை நிறுத்தி தேவர்களுக்கு அமிர்தத்தை பெற்று தரும் பொருட்டு, பகவான் விஷ்ணு அனைத்திற்கும் ஆதார சக்தியாக விளங்கும் அன்னை லலிதையை குறித்து தியானத்தில் ஆழ்ந்தார்.
தன்னை மறந்து அவளை நினைத்ததினால் அவருக்குள் ஒளிந்திருந்து நடத்தி வைக்கும் அன்னையின் வடிவத்தினையே அடைந்தார்,எவரையும் மயக்கத்தக்க சிருங்கார வேஷமுள்ள மோகினி, தேவாசுரர்களிடையே தோன்றினாள். தேவர்கள் அவளை தெய்வீகமாக கண்டு அவளை பணிந்தனர்.
அசுரர்கள் தமது அஞ்ஞானத்தினால் அவளை அடையாளம் காண முடியாமல் அவளழகில் மோக மயக்கம் கொண்டனர்.
தொடரும்…
The post அம்பாளின் மகிமை – லலிதோபாக்யானம் (தொடர் – 11) appeared first on Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV.