Quantcast
Channel: SwasthikTv
Viewing all articles
Browse latest Browse all 15459

நோய் தீர்க்கும் கொள்ளேகால் ஸ்ரீ மாதேஸ்வரன்

$
0
0

 கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அடுத்துள்ள கொள்ளேகாலில் 300 அடி உயரம் கொண்ட மலை மீது மாதேஸ்வரன் என்ற பெயரில் சிவன் அருள்பாலிக்கிறார்  இவரை வணங்கினால் விஷக்கடி, குடும்ப பிரச்சனைகள் தீரும், தீராத  நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை இந்த அழகிய மலைச்சாரலில் ‘மாதேஸ்வரன்’ என்ற பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் மலை ‘மாதேஸ்வரன் மலை’ என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள 14ம்  நூற்றாண்டுகாலகல்வெட்டுகள் மாதேஸ்வரன் என்ற ஒரு சிறுவன், பரமேஸ்வரனின் அருளால் அந்த ஈஸ்வரனுக்குப் பணிவிடை செய்யும் பொருட்டு வானத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன.

வானத்திலிருந்து தோன்றிய சிறுவன்:

 சித்தநஞ்ச தேசிகர் என்ற ஒரு சித்புருஷர் தனது ‘சுத்தூர்’மாட சிம்மாசமான மடத்தில் பணியாற்ற தனது சீடனாக ஏற்றுக் கொண்டார். அந்த சீடனுக்கு சிவசக்தியின்’ அருட்கடாட்சத்தைப் பலவகையிலும் கற்றுக் கொடுத்து, அந்த ஈசனின் அருளால் அவனுக்கு வாரி வழங்கி அந்த சிறுவனை ஒரு சிவபக்தனாக வளர்த்தார். அந்தச் சிறுவனிடம் அவ்வப்போது அதிசயத்தக்க சில மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. அவன் சில அற்புதங்களை அவ்வப்போது அந்த மடத்திலே ஈசனின் அருளால் நிகழ்த்திக் காட்டினான். ஒரு சமயம் பரமேஸ்வரனுக்குப் பூஜை செய்ய மலர்களைப் பறித்துவர அந்தச் சிறுவனையும், அவனுடன் மற்ற சீடர்களையும் அந்த வனப்பகுதிக்குள் அனுப்பினார், சித்தநந்ததேசிகர். குருவின் கட்டளைப்படி இதர சீடர்கள் பூப்பறித்து வந்து நின்றனர். ஆனால், அந்த சிறுவனைக் காணவில்லை. அவன் எங்கே என்று மற்ற சீடர்களைக் கேட்டார், குரு.

சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு:

 அவன் தங்களை விட்டுப் பிரிந்து தனியாக சென்று விட்டான் என்று பதில் வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் அந்தச் சிறுவன் காட்டுப்புலி ஒன்றின்மீது அமர்ந்து கொண்டு, பூக்களுக்குப் பதில் தேள், பூரான், பாம்பு, அரணை போன்ற விஷப் பூச்சிகளைப் பூக்கூடையில் நிரப்பிக் கொண்டு வந்தான். புலிமீது அமர்ந்திருக்கும் அவனைக் கண்டு குரு பயந்து போய் செய்வதறியாது திகைத்து நின்றார். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவன் புலியின் மீதிருந்து இறங்கி, புலியின் தாடையைத்  தடவினான். அடுத்த நொடி புலி மாயமாய் மறைந்து விட்டது. பூக்கூடையில் இருந்த விஷப் பூச்சிகளை குருவிடம் காட்டி விட்டு அருகிலிருந்த குளத்து நீரில் போட்டு எடுத்தான். அவையெல்லாம் மணமிக்க மலர்களாக மாறின. அந்த மலர்களைக் கொண்டு வந்து குருவின் முன் கொட்டினான். இந்த செயல்களைக் கண்ட குரு மிகுந்த ஆச்சரியப்பட்டு போனார். இது இந்த சிறுவனின் செயல் அல்ல. சிவபெருமானின் அருட்கடாட்சத்தால்தான் இவனுக்கு இந்த யோக சக்தி  ஏற்பட்டுள்ளது.

மாதேஸ்வரன்:

 எனவே, இவன் சிவபெருமானின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டுமென்று கருதி அவனை உயர்ந்த இடத்தில் வைக்க விரும்பினார். அந்த மலைப்பகுதியில் தங்களுடைய ஆண் பிள்ளைகளுக்கு அந்த கிராம மக்கள் பெரும்பாலும் மாதன்என்ற பெயரைத்தான் வைப்பார்கள். ஆகவே அந்த குரு இந்த சிறுவனுக்கு மாதன் என்ற பெயரோடு ஈஸ்வரன் என்ற திருப்பெயரையும் சேர்த்து மாதேஸ்வரன் என அழைத்தார். பிறகு அவனை குடகு மலையிலுள்ள பிரபுலிங்க மலை என்ற இடத்திலிருக்கும் திரு ஆதி கணேஸ்வரர் என்ற தனது குருவிடம், மேலும் நல்ல கல்வி கற்று மேம்பட, அனுப்பி வைத்தார். அப்படியே சென்ற மாதேஸ்வரன், அந்த குருவிடமிருந்து வேதம், யாகம், யோகம், தவம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்றான். கூடவே தன் சித்துவேலைகளையும் செய்து காட்டினான்.  விஷப்பூச்சிகளை வைத்து சில அதிசயத்தக்க லீலைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவான்.

நோய் தீர்க்கும் விபூதி:

 பல்லியைப் பாம்பாக்குவான், பாம்பைப் பூரானாக்குவான், ஓடிக் கொண்டிருக்கும் தேள் சட்டென்று அரணையாகி விடும். அதேபோல அரணை பல்லியாகி விடும்! இப்படியெல்லாம் சித்து வேலைகள் செய்து அந்த கிராம மக்களை அசத்துவான். மக்கள் சிலசமயம் இவனிடம் வந்து அருள்வாக்குக் கேட்பார்கள். மாதேஸ்வரன் சொன்னதெல்லாம் அப்படியே நடக்கும். ஒருவர் ஒரு பசுமாட்டைக் கொண்டு வந்து மாதேஸ்வரன் முன்பு காட்டி ‘‘இது மலட்டுப் பசுவாக அமைந்து விட்டது பாலே சுரப்பதில்லை’என்று குறைபட்டுக் கொண்டார். அவன் அந்தப் பசுவைத் தொட்டான். அப்போதே அந்தப் பசு பால் சொரிய ஆரம்பித்து விட்டது. வியந்து நின்றான் பசுவின் சொந்தக்காரன். ஒரு சமயம் ஒருவர் தீராத நோயொன்று தன்னைப் பாடாய்ப்படுத்துகிறது என்றார். வெறுங்கையில் விபூதியை வரவழைத்த  மாதேஸ்வரன் அந்த விபூதியை அந்த நோயாளி உடல் முழுவதும் பூசினான். அவன் நோய் தீர்ந்து குணமடைந்தான்.

லிங்க வடிவமாகவே  உருமாறி விட்டான்:

 குளுமையான அந்தப் பச்சைப்புல் தரையில் அப்படியே அமர்ந்து ஈஸ்வர தியானத்தில் ஆழ்ந்தான் மாதேஸ்வரன். இப்படி தினமும் ஆழ்நிலை தியானத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் கழிந்தன. ஒருகட்டத்தில் அவன் அப்படியே ஒரு கல் லிங்க வடிவமாகவே  உருமாறி விட்டான். மாதேஸ்வரன் மறைந்துபோய் மாதேஸ்வர லிங்கமானான் அவன்! மனிதனே இறைவனாகும் பேரற்புதம் அங்கே நிகழ்ந்தது.

குலதெய்வம்:

 அணுமலை, கனுமலை, ஜெனுமலை, பச்சைமலை, பவளமலை, லிங்கமலை, பொன்னாச்சி மலை ஆகிய ஏழு மலைகள் இணைந்ததே மாதேஸ்வரன் மலை. இங்கு வாழும் சோளிகர், ஜேனுகுருபர், காடுகுருபர், குருபகவுடர் இனத்தவர்களுக்கு ஸ்ரீமாதேஸ்வரனே குலதெய்வம். இவர்களில் தம்மடிகள் என்பவர்கள் லிங்கத்தைக் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டிருப்பார்கள். கண்ணப்ப நாயனாரின் வாரிசுகள் இந்தக் கோயிலில் அர்ச்சகர்கள். இவர்கள் எல்லாம் இக்கோயிலைச் சுற்றிய கிராமங்களிலேயே வசிக்கிறார்கள். சிவராத்திரி, நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜை நடைபெறும்.  குடும்பப் பிரச்னைகள் நீங்கவும், தீராத நோய்களிலிருந்து விடுபடவும், குறிப்பாக விஷப்பூச்சிக் கடியிலிருந்து நிவாரணம் பெறவும், பசுமாடு முதலான கால்நடைகள் பிணி தீரவும், அவை நிறைய பால் வழங்கவும், இந்த மாதேஸ்வரனை பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். இங்கேயுள்ள அந்தர கங்கை குளத்தில் நீராடினால் காசி, கேதார்நாத், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் நீராடிய பலன் கிடைக்கும். குடும்பக் குறைகள் தீர, ரிஷபம் அல்லது புலி வாகனத்தில் மாதேஸ்வரனை அமர்த்தி கோயிலை வலம் வந்து வேண்டுதல் செய்கிறார்கள்.

The post நோய் தீர்க்கும் கொள்ளேகால் ஸ்ரீ மாதேஸ்வரன் appeared first on SWASTHIKTV.COM.


Viewing all articles
Browse latest Browse all 15459

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>