நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில், கோழிக்குத்தி அமைந்துள்ளது. இங்கு பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார். குடகுமலைப் பகுதியை, நிர்மலன் என்ற மன்னன் அரசாட்சி செய்து வந்தான். அவன் தொழு நோயால் பாதிக்கப்பட்டான். இதற்குப் பல்வேறு நாட்டின் மருத்துவர்களும் முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை. இதனால் மிகவும் மனம் வருந்திய மன்னன், மனம் போன போக்கில் பயணமானான். அப்போது வழியில் முனிவர் ஒருவர், வீணையை இசைத்து பாடிக் கொண்டு இருந்தார். அவரைக் கண்டு வணங்கிய நிர்மலன் தன் நிலையை எடுத்துக் கூறித் தனக்கு வழிகாட்டுமாறு வேண்டி நின்றான். முனிவரும் அதற்கு மனமிரங்கி ஒரு மந்திரத்தை உபதேசம் செய்தார். ‘இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தால் வழி கிடைக்கும்’ என்று கூறினார்.
திருக்குளங்களில் நீராடினான் மன்னன்:
அதன்படி மன்னன் அதை நாள்தோறும் ஜெபித்தபோது, அங்கே ஒரு அசரீரி ஒலித்தது. ‘உனக்கு கடுமையான தோஷம் ஏற்பட்டுள்ளதால், இந்த நோய் உன்னைப் பற்றியுள்ளது. காவிரிக்கரை வழியே பயணம் செய்து, வழியில் தென்படும் ஆலயத் திருக்குளங்களில் எல்லாம் நீராடி வா. எந்தத் தீர்த்தத்தில் உனக்கு நோய் தீர்ந்து சரியாகிறதோ, அங்கேயே தங்கியிருந்து இறைவனை வழிபடு’ என்றது. இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன், அசரீரி கூறியது போலவே, காவிரிக் கரையில் உள்ள பல்வேறு திருக்கோவில்களுக்குச் சென்று, அங்குள்ள திருக்குளங்களில் நீராடினான். பின்னர் அடுத்த ஆலயத்தைத் தேடி பயணம் மேற்கொண்டான். ஆனாலும் மன்னனின் நோய் குணம் பெறவில்லை. மனம் சோர்ந்து மூவலூர் திருத்தலம் வந்து சேர்ந்தான்.
சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி:
அங்கே மார்க்கசகாயேஸ்வரரை வணங்கி வேண்டி நின்ற போது, மீண்டும் அசரீரி ஒலித்தது. ‘நிர்மலா! மனம் கலங்காதே! உன்னுடைய தோஷம் நீங்கி, நீ பூரண குணமடையும் காலம் கனிந்துள்ளது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு! அதுவே உனக்கு விடுதலையைத் தரும்’ என்றது. அதனால், மனம் மகிழ்ந்த நிர்மலன் ஆலயமாகத் திருக்குளத்தினைத் தேடிய போது, இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அழகிய திருக்குளம் தென்பட்டது. அதில் ஆனந்தமாக நீராடி எழுந்த போது நோய் தீர்ந்து, உடல் பொன் நிறமாய் காட்சியளித்தது. இதனால் மனம் மகிழ்ந்த நிர்மலன் சிவபெருமானுக்கும், பெருமாளுக்கும் நன்றி கூறி அங்கேயே வழிபடலானான். அப்போது அவன் முன்பாக அத்திமரம் ஒன்று தோன்றியது. அதில் பிரமாண்ட வடிவில் சீனிவாசப்பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி தந்து அருள் வழங்கினார்.
அத்திமரத்தில் அழகிய பெருமாள்:
நிர்மலன் இதே தலத்தில் தங்கி ரிஷியாக மாறினான். பிற்காலத்தில் பிப்பில மகரிஷி என அழைக்கப்பட்டார். இவர் நீராடி பேறு பெற்ற தீர்த்தம் ‘பிப்பில மகரிஷி தீர்த்தம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிப்பில மகரிஷியின் சிறப்பைக் கேள்விப்பட்ட தஞ்சை சரபோஜி மன்னன், இத்தலம் வந்து பெருமாளைத் தரிசித்தான். தனக்கு போர்களின் மூலம் ஏற்பட்ட தோஷத்தை போக்கியருள வேண்டும் என்று வேண்டி நின்றான். இந்த மன்னனுக்கும், பெருமாள் அத்திமரத்தில் தோன்றி அருளாசி வழங்கினார். மனம் மகிழ்ந்த மன்னன் தான் கண்ட காட்சியை சிலையாக வடிக்க விரும்பி பதினான்கு அடி உயர அத்திமரத்தில் அழகிய பெருமாளின் திருவுருவை அமைத்து புதிய ஆலயமும் எழுப்பினான்.
கிழக்கு நோக்கிய எளிய ராஜகோபுரத்தினைக் கொண்டு சிறிய ஆலயமாக அமைந்துள்ளது உள்மண்டபத்தில் மூலவருக்கு வலதுபுறம் சக்கரத்தாழ்வாரும், இடதுபுறம் யோக நரசிம்மரும், கிழக்கு நோக்கி காட்சி தர, தெற்கு முகமாய் நர்த்தன கிருஷ்ணன் காட்சி தரு கிறார். வெளிப்பிரகாரத்தில் விநாயகர், விசுவக்சேனர், ராமானுஜர், பிப்பில மகரிஷி காட்சி தருகின்றனர்.
இக்கோவிலில் அமைந்திருக்கும் அனுமன் சிலையைத் தட்டினால், ஏழு ஸ்வரங்கள் ஒலிப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் சப்தஸ்வர அனுமன் என அழைக்கப்படுகிறார். தலமரம் அத்திமரமாகும். தலத் தீர்த்தம் விஸ்வ புஷ்கரணி. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவருக்கு கண்கண்ட தலமாக இத்திருக்கோவில் அமைந்துள்ளது. கலைத்துறையினருக்கு புகழும், வளமும், சேர்க்கும் ஆலயமாகவும் இது போற்றப்படுகிறது.
The post அத்திமரத்தில் தோன்றிய பெருமாள் appeared first on Swasthiktv-Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Gurus / Feel Good Web TV.