இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12.
கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் ‘சஞ்சித வினை’ என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது ‘பிராரப்த வினை’.
கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை. துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து எய்தும்.
ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியுற்றால் பிராரப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராரப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும்.
கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.
ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.
கோளறு பதிகத்தில் மொத்தம் 11 பாடல்கள்.
கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.
நற்கருமங்களை மிகுதியாகப் புரிவதும் இறை வழிபாடும் மட்டுமே சிறந்த பரிகாரம். (ஓம் நமசிவாய).
தினமும் ஒரு பாடல் என தொடங்குவோம்…
The post திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் appeared first on SwasthikTv.